35 வயதினிலே...!
‘வயசானாலும், உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டுப் போகலை..!’
இது ‘படையப்பா’ படத்தில் ரஜினியிடம் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் டயலாக். இந்த வசனம் ரஜினிக்கு மட்டும்தான் பொருந்தும் என்றில்லை. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இன்னும் இரண்டு பேரிடம் சொல்லலாம். ரோஜர் ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர்தான் அந்த இரண்டு பேர். காரணம், அவர்களுக்கு வயது 35!
‘அடபோப்பா... 35 வயசெல்லாம் ஒரு வயசா..?’ என்று கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் இதுவரை டென்னிஸ் விளையாடியதில்லை என்பதுதான் பொருள். டென்னிஸுக்கு 35 வயது என்பது, 80 வயதில் இமயமலையில் ஏறுவது போல. ஏனென்றால், அந்த விளையாட்டு கேட்கும் உழைப்பு. பயிற்சி. அந்த விளையாட்டு தரும் வலி. அயர்ச்சி.
இன்றெல்லாம், முப்பது வயதானேலே ஏதோ முதுகொடிந்து போய்விட்ட முதியவர்களைப் போல ‘ரொம்ப கஸ்டமப்பா...’ என்று அலுத்துக்கொள்கிற இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள், ஃபெடரரிடமிருந்தும், செரீனாவிடமிருந்தும் கற்றுக்கொள்ள முக்கியமான ஒரு பாடம் உண்டு. அது இக்கட்டுரையின் இறுதியில்.
அதற்கு முன், ஃபெடரரும், செரீனாவும் அப்படி என்ன சாதித்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று உலகில் விளையாடப்படும் விளையாட்டுக்களில், அதிக அளவு பணம் கொழிக்கும் விளையாட்டு டென்னிஸ். ஆனால் அதே அளவு உடல் உழைப்பையும் கேட்கும் விளையாட்டு இது.
சராசரியாக, ஒரு டென்னிஸ் மேட்ச் முடிய அது ஆண் வீரர்களாக இருந்தாலும் சரி, பெண் வீரர்களாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் இரண்டே முக்கால் மணி நேரம் எடுக்கும். இவற்றில், வீரர்கள் தங்களின் மட்டையை மாற்றுவதற்கான நேரம், வீரர்கள் பரஸ்பரம் தாங்கள் ஆடும் ‘சைடு’ மாறுவதற்கான நேரம், அவ்வப்போது விடப்படும் ‘ப்ரேக்’ ஆகியவற்றை எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், மீதி இருக்கும் நேரமெல்லாம் டென்னிஸ் கோர்ட்டில் பந்தைத் துரத்தி ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
இப்படியான நிலையில், ஒரு வீரரின் எதிராளி கொஞ்சம் பலமானவராகவோ அல்லது கொஞ்சம் இளமையானவராகவோ இருக்கும்பட்சத்தில், விளையாட்டின் நேரம் கூடுவதுடன், விளையாடுவதற்கான சக்தியும் அதிகமாகத் தேவைப்படும். நல்ல ஃபிட்னஸ், பல ஆடுகளங்களைக் கண்ட அனுபவம் ஆகியவை இருந்தால் மட்டுமே வயதில்
மூத்த வீரர்கள் தங்களின் சக்தியை சேமித்து வைத்து நீண்ட நேரம் ஆட முடியும். வெற்றி, தோல்வி எல்லாம் அதற்குப் பிறகுதான்.
இவை ஒரு புறம் இருக்க, கை, கால், தொடை, பாதங்கள், முதுகு, தோள்பட்டை என சகல இடங்களிலும் காயங்கள் ஏற்படுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டது இந்த விளையாட்டு. காயம் என்றால் சாதாரணமான காயம் அல்ல. மூட்டு தேய்ந்து போகக்கூடும். எலும்புகள் உடையலாம். தசைநார்கள் கிழிந்து போகலாம். நரம்புகள் திருகிக்கொள்ளலாம். இந்தக் காயங்கள் தரும் மனவேதனையோடு, ‘இவருக்கு வயதாகிவிட்டது. இனி இவரால் இளைய வீரர்களைச் சமாளிக்க முடியாது. எனவே இந்தக் கட்டத்தில் ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது’ என்று வரும் விமர்சனங்கள் தரும் மன உளைச்சலையும் சந்தித்தாக வேண்டும்.
ஃபெடரரும், செரீனாவும் இந்தக் கஷ்டங்களை எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறார்கள். அதனால்தான் டென்னிஸ் உலகில் வயதில் மூத்த கிராண்ட் ஸ்லாம் வீரர் என்று ஃபெடரரும் (18 பட்டங்கள்), வயதில் மூத்த கிராண்ட் ஸ்லாம் வீராங்கனை என்று செரீனாவும் (23 பட்டங்கள்) போற்றப்படுகிறார்கள். அதிலும் செரீனா இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால் முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை (24 பட்டங்கள்) சமன் செய்வார். அதற்குப் பிறகு இன்னும் ஒரு ‘டைட்டில்’ வென்றால், நிறைய பட்டங்கள் வென்ற மூத்த கிராண்ட் ஸ்லாம் வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுவார். ஃபெடரரைப் பொறுத்தவரையில் அவர் ஏற்கெனவே அந்தச் சிறப்பைப் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
டென்னிஸ் விளையாட்டில், இதற்கு முன்பு வயதில் மூத்தவர்கள் விளையாடியதே இல்லையா என்றால், விளையாடியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுக்குப் பிறகு வந்த இளையோரிடம் விளையாடித் தோல்வியடைந்தவுடன் ‘குட்பை’ சொல்லிவிட்டவர்கள். ஃபெடரரும் செரீனாவும் இதுபோன்ற தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்றாலும், அதிலிருந்து மீண்டு, மீண்டும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். ஓய்வைப் பற்றி அவர்கள் இன்னும் சிந்திக்கவில்லை. இதுதான் அவர்களின் சாதனையைத் தனித்துவமாக்குகிறது.
ஆக, இவர்கள் இருவரிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்... வயது என்பது வெறும் எண். அவ்வளவே!
