

“இப்ப நாம எங்க போறோம்? காடு, மலை, டோராவோட வீடு!”
இப்படிக் குரல் ஒலிக்காத தமிழக வீடுகளே இன்று இல்லை. ஒலிப்பது டோராவின் குரல் மட்டுமா... நம் வீட்டு வாண்டுகளின் குரலும்தானே!
டோராவின் அந்த மழலை ததும்பும் குரலுக்குப் பின் ஏதோ ஒரு குழந்தைதான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், ஸாரி... அந்தக் குரலுக்கு வயது 25!
“1999ம் வருஷம். என்னோட அஞ்சு வயசுல, டப்பிங் துறைக்கு வந்தேன். முதல்ல திரைப்படங்களில் குழந்தைக் கதாபாத்திரங்களுக்கு டப் செய்யத் தொடங்கினேன். அப்புறம் டோரா, சோட்டா பீம், சுட்கீ போன்ற கார்ட்டூன் கேரக்டர்களுக்குக் குரல் கொடுத்தேன்” என்பவர், ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'வீர ஜெய் அனுமான்', ராஜ் டி.வி.யின் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' போன்ற தொடர்களில் வரும் குழந்தைக் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் செய்கிறார்.
‘தி காஞ்சூரிங் 2’ எனும் பிரபல ஹாரர் படத்தின் தமிழாக்கத்தில் 'ஜானட்' என்ற பெண் கதாபாத்திரத்திற்கும் இவரே குரல் கொடுத்திருக்கிறார்.
“பலரும் ‘டப்பிங்’ செய்யறதை ரொம்ப ஈஸியான விஷயமா நினைக்குறாங்க. ஆனா அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரல் கொடுக்க முடியலைன்னா, ‘ரிஜெக்டட்’தான். அதனால ஆடிஷன் மூலமாத்தான் டப்பிங் செய்யறதுக்கான ஆர்ட்டிஸ்ட்டுகளைத் தேர்வு செய்வாங்க.
ஆணோ பெண்ணோ எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, குரலோடு சேர்ந்து உடல் மொழியும் ஒத்துப்போகணும். அப்போதான் குரலில் உயிர் இருக்கும். டப்பிங் செய்யுறப்போ சில சமயம் உச்சரிப்பு
சரியா வரலைன்னா, டப்பிங் ட்ராக்கரும் சவுண்ட் இஞ்ஜினியரும் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்பவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் தன் குரலைப் பதிவு செய்து வருகிறார்.
கலக்குங்க குரலழகி!