கதைகள் சொல்லும் காபி கப்

கதைகள் சொல்லும் காபி கப்
Updated on
2 min read

இக்காலத்து இளைஞர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருள்களில் பல விதமான டிசைன்களையும் பல விதமான நிறங்களையும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகை பொருட்களை வாங்குவதற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். அந்தவகையில் அவர்களுக்காகவே காபி கப்பிலும் பல டிசைன்கள் வந்துவிட்டன.

முன்பெல்லாம் காபி குடிக்கவோ அல்லது தண்ணீர் பருகவோ திரும்பத் திரும்பப் பயன்படுத்திச் சலித்துப்போன டம்ளர்களையே உபயோகிப்போம். ஆனால் இன்று, சீசனுக்கு ஏற்றாற்போல் பல அழகு வண்ணங்களில் காபி கப்புகள் கடைகளிலும், ஆன்லைனிலும் விற்கப்படுகின்றன.

சீசன் கப்

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பல்வேறு பண்டிகைகளின் உற்சாகத்தை முன்கூட்டியே நினைவுகூறும் வகையில் அது தொடர்பான படங்களுடன் இருக்கும் சீசனல் கப்புகள் தற்போது ஹிட்டாக ஆரம்பித்திருக்கின்றன. இளைய தலைமுறையினரைத் தவிர சிறுவர் சிறுமியருக்கும் பண்டிகைக் கால மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இந்த வகை கப் உள்ளது. இவை ரூ. 400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன.

மேஜிக் கப்

தண்ணீரோ, காபியோ, டீயோ எதுவாக இருந்தாலும் அதன் வெப்பத்தைப் பொறுத்து நிறம் மாறி, அதில் பதிக்கப்பட்டுள்ள படங்கள் வெளிப்படும் அதிசய கப்புக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த வகை கப், வெளிப்புறத்தில் உள்ள பூச்சின் காரணமாக வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்ப நிறம் மாறும். இதனை ஆங்கிலத்தில் ‘ஹீட் சென்ஸிடிவ் மேஜிக் கப்’ (Heat sensitive magic cup) என்று அழைக்கிறார்கள். இந்த அதிசய கப் ரூ. 450 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜோடி கப்

இது உங்கள் காதல் ஜோடிக்கான சரியான பரிசு! இதய வடிவிலான கைப்பிடிகளும், ஜோடியாகப் பொருந்துவதும் தான் இதன் சிறப்பு. இதில் உங்களுடைய படத்தைப் பதிப்பித்துக்கொள்ளவும் முடியும். நண்பர்கள் தினம், காதலர் தினம், திருமண நாள் போன்ற உங்கள் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கும் இது புதுமையான, கலையுணர்வுடன் கூடிய பரிசாக அமைகிறது. இவை ரூ.500 முதல் ரூ.650 வரை விற்கப்படுகின்றன.

டிசைனர் கப்

வெவ்வேறு வடிவங்களில் கைப்பிடிகளைக் கொண்டு ஒரு பொருளையோ, விலங்கையோ குறிப்பதுதான் இந்த டிசைனர் கப்பின் சிறப்பு. குழந்தைகளைக் கவரும் வகைகளில் ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, மாடு, நாய் போன்ற மிருகங்களின் உருவங்களைக் கொண்டு அழகான கைப்பிடி வடிவங்களில் இந்தக் கப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி இசைக்கருவிகளைக் கைப்பிடிகளாகக் கொண்டு தயாரிக்கப்படும் காபி கப்பும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இவை டிசைனுக்கு ஏற்றார்போல் விலை ரூ. 750 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றன.

போட்டோ கப்

இப்போது இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் பல தரப்பட்ட டிசைன்களில் காபி கப் விற்கப்பட்டாலும்கூட, அவரவரின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கச் செய்யும் விதத்தில் தனக்குப் பிடித்தமான பின்னணியைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய புகைப்படத்தை அதில் பதித்து விற்கப்படும் கப்தான் சந்தையைக் கலக்கி வருகிறது. தனக்குப் பிடித்த வாசகங்களையும் அதனோடு இணைத்து அச்சிடலாம். இந்த காபி கப் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in