

திரைப்படத்துறையில் இயக்குநராகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்காக நான்கு ஆண்டுகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் திருமணமும் ஆகிவிட, குடும்பத்தின் நிலையான வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து அவர் தொடங்கிய யூடியூப் சேனல்தான் ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’(Village Food Factory). இந்த சேனலின் பிரபலம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த சேனலைத் தற்போது 3,65,000-க்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். கிராமிய சமையலை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இந்த சேனலில் கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் சமைக்கும் ஸ்டைலுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. இவர் சமைத்த 300 முட்டை பொடிமாஸ், 100 கோழிக் கால்கள் குழம்பு, ஒரு முழு ஆட்டுக்கறிக் குழம்பு போன்ற வீடியோக்களை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட சமையல்
திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத்துக்குத் தற்போது 26 வயது. இந்த சேனலில் பதிவிடப்படும் வீடியோக்களின் தயாரிப்பு வேலைகளை இவரும் இவருடைய தம்பி மணிகண்டனும் இணைந்து செய்கின்றனர். முதலில், தமிழ்த் திரைப்படத் துறை பற்றிய செய்திகளை வழங்கலாம் என்ற நோக்கத்தில் ‘தமிழ் ஃபேக்டரி’என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறார் அவர். ஆனால், ஊரில் இருந்துகொண்டு திரைப்படச் செய்திகளை வழங்குவது அவ்வளவு எளிதானதாக இல்லை.
அதனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயத்தை வைத்து ஒரு சேனலை உருவாக்கலாம் என்று யோசித்தபோதுதான் சமையலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த சேனல் இவ்வளவு பிரபலமாவதற்குக் காரணம் அவருடைய தந்தை ஆறுமுகம் பிரம்மாண்டமான சமையலைக் கையாளும் விதம்தான். அத்துடன், இவர்கள் சமையல் செய்யும் இயற்கையான சூழலும் பார்வையாளர்களை அதிகமாக வசீகரிக்கிறது.
“சமையலை அடிப்படையாக வைத்துதான் சேனலைத் தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன் எனக்கு இயங்குநர் ஷங்கரின் படங்கள்தான் ஞாபகத்துக்கு வந்தன. அவருடைய படங்கள் வெற்றிபெறுவதற்கு முக்கியக் காரணம் பிரம்மாண்டம். திரைப்படத்துறையில் பயன்படுத்தும் அந்தப் பிரம்மாண்ட உத்தியை ஏன் சமையலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தேன். அப்படி யோசித்துதான் 100 கோழிக்கால்கள் குழம்பு, 300 முட்டைக் குழம்பு, 1000 முட்டை பொடிமாஸ், 100 கிலோ தர்ப்பூசணி சாறு எனப் பிரம்மாண்டமாகச் சமைத்தோம்.
எங்கள் குடும்பத்தில் எல்லோருக்குமே சமையலில் ஆர்வம் அதிகம். நான், அம்மா, அப்பா, தம்பி என எல்லோருமே நல்லா சமைப்போம். முதலில் வீடியோவில் ஆட்களைக் காட்டாமல் சமையலை மட்டும் காட்டலாம் என்றுதான் முடிவுசெய்தேன். ஆனால், அப்பா சமைக்கும் விதம் யதார்த்தமாக கேமராவில் பதிவானதைப் பார்த்தபோது அதில் ஒரு தனித்துவம் இருப்பதை உணர்ந்தேன். அதற்குப் பிறகு, அப்பாவை வைத்தே எல்லா வீடியோக்களையும் எடுக்க ஆரம்பித்தேன். “ என்கிறார் கோபிநாத்.
இவர்கள் சமையல் செய்து அதை அக்கம்பக்கத்தில் இருக்கும் எளிய மக்களுக்குக் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் காட்சிகள் முதல்கட்டமாக எடுத்த வீடியோக்களில் இடம்பெறவில்லை. அதனால் பல பார்வையாளர்களும் ஏன் இவ்வளவு உணவைச் சமைத்து வீணடிக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டிருக்கிறார்கள். “இந்த சேனல் ஆரம்பித்ததிலிருந்தே சமைத்த பொருட்கள் எதையும் வீணாக்கவில்லை. ஆனால், பார்வையாளர்கள் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை எழுப்பியதால், சமைத்த உணவை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதையும் வீடியோவில் சேர்த்துவிட்டோம். அதற்குப் பிறகு, எங்களுடைய சேனலுக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்தது” என்கிறார் அவர்.
உயர்ந்தது வாழ்க்கைத் தரம்!
இவர்களுடைய சேனலில் ஆரம்பக் கட்டத்தில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்களுக்கு மாத வருமானமாக 40,000 ரூபாய் கிடைத்திருக்கிறது. பின்னர், கொஞ்சம்கொஞ்சமாக ‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’யின் ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் பதிவேற்றும் வீடியோக்கள் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடக்கின்றன. இப்போது இவர்களுடைய மாத வருமானம் லட்சங்களைத் தொட்டிருக்கிறது. இந்த சேனலில் 86 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் புதுமையான சமையல் வீடியோக்களைப் பதிவேற்றுகிறார்கள்.
“இது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி. என்னுடைய தம்பி மணிகண்டன், அப்பா, அம்மா, மனைவி இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாயிருக்காது. எங்களுடைய குடும்பம் சாதாரணக் குடும்பம். என்னுடைய அப்பா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். பெயிண்ட்டிங், ஜவுளி வியாபாரம் போன்ற தொழில்களைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். ஜவுளி வியாபாரத்துக்காக இந்தியா முழுக்கச் சுற்றியதால், அப்பாவுக்குப் பதினெட்டு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியும். இந்த சேனல் ஆரம்பித்துப் பிரபலமான பிறகு, ஊரில் அப்பாவின் மரியாதை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அப்பாவுக்கு இப்படியொரு அடையாளத்தைத் தேடித்தரும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் உதவி இயக்குநராக இருந்தபோது முப்பது குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால், ‘போஸ்ட் புரொடக் ஷன்’ செலவுக்குப் பணம் இல்லாமல் அந்தப் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இப்போது இந்த யூடியூப் சேனல் பெரிய ஊக்கத்தை எனக்கு அளித்திருக்கிறது. என்னுடைய திரைப்படக் கனவைப் பின்தொடர்வதற்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கோபிநாத்.
‘வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி’யைப் பின்தொடர:>https://www.youtube.com/channel/UC-j7LP4at37y3uNTdWLq-vQ/videos