ஊரின் பொது இடத்தில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் இறுகிக் காணப்படுகின்றன. நடுநாயகமாக நின்றிருந்தவனின் கையில் ஒரு செப்பேடு பளபளக்கிறது. அனைவரின் கண்களும் செப்பேட்டையே இமைக்காமல் பார்க்கின்றன. அதை அவன் தன் கைகளால் உடைக்கத் தொடங்குகிறான். செப்பேடு முறியத் தொடங்க, சுற்றி நின்றவர் களின் கண்களில் ஆசுவாசம் பெருகுகிறது. ஆர்ப்பாட்டமும் கூச்சலும் இல்லாமல் செப்பேட்டினைச் சிதைத்தவர் தன் கடமை நிறைவேறியதுபோல் நகருகிறார். அரசனின் அதிகாரம் சிதைக்கப்பட்டு மண்ணில் துண்டுகளாகக் கிடந்தது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற காலம் 7ஆம் நூற்றாண்டு. இடம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகில் உள்ள திருமங்கலக்குறிச்சி. செப்பேட்டைச் சேதப் படுத்தி அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவன் மறவர் குலத் தலைவன் கம்பலை. அவன் எதிர்த்த அரசன் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன்.
மன்னர்கள் தங்கள் ஆட்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் தாங்கள் வழங்கும் தானங்களையும் பதிவு செய்து வைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளனர். செய்திகளை பனை ஓலையிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதிந்து வைத்துள்ளனர். சில நேரங்களில் ஒரே செய்தியை மூன்றிலும்கூட பதிவு செய்துள்ளனர். அப்படிப்பட்ட அரசனின் முத்திரை பதித்த ஒரு செப்பேட்டைத்தான் கம்பலை உடைத்தெறிகிறார்.
அரசனை எதிர்க்கக் காரணம் என்ன?
தங்களுக்குச் சொந்தமான நிலங்களை சோமாயாஜு என்ற ஒரு பிராமணருக்குத் அனுமதி இல்லாமல் நிலதானம் வழங்கியதை எதிர்த்து, அதற்குரிய ஆவணமான செப் பேட்டைச் சிதைத்தார் கம்பலை.
இம்மாதிரி பொதுமக்களின் நிலங்கள் அனுமதியில்லாமல் தானமாக வழங்கப்படும்போது அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று இடம் வழங்கப்படுவது இல்லை. எனவே தங்களின் உரிமையான நிலத்தை அரசன் எடுத்ததை எதிர்த்துக் கம்பலை கிளர்ச்சி செய்தார். இச்செய்தி பாண்டியர்களின் இளையான்புத்தூர் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பழமையானது. 3 இதழ்கள் கொண்ட இச்செப்பேட்டில் மொத்தம் 65 வரிகள் உள்ளன. கம்பலையிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசன் சோமாயாஜுவுக்கு ‘இளையான்புத்தூர்’ என்று பெயரிட்டு வழங்கியுள்ளார். இது இளையான்புத்தூர் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது.

கி.பி.676 - இல் இந்தச் செப்பேடு வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்போது கம்பலை அந்தச் செப்பேட்டை மறக்கேடு (செப்பேட்டை அழிப்பது அல்லது சிதைப்பதற்குப் பெயர் மறக்கேடு) செய்ததால் இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு 100 ஆண்டுகள் கழித்து, அந்தச் செய்தி மாறாமல், பின்னர் வந்த பாண்டிய அரசர்களால் எழுதப்பட்டிருக்கலாம். எனவே கம்பலையின் காலம் கி.பி.576 ஆக இருக்கலாம்.
சோமாயாஜு பற்றியும் செப்பேடு விவரிக்கிறது. காவிரிக்கரையைச் சேர்ந்த அவர் வளமான பெருமருதூரைச் சேர்ந்தவர். ஆனால் கம்பலையின் எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே கம்பலையும் ஆயுத பலத்தால் அடக்கப்பட்டார்.