

இசைஞானி இளையராஜா தேர்ந்த புகைப்படக் கலைஞரும் கூட. அவரது பயணங்களில் எல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியோடு புகைப்படக் கருவியும் பயணிக்கும். நெடு நாட்களுக்குப் பிறகு நீண்ட தயக்கத்துக்குப் பிறகு தனது ஆயிரக்கணக்கான புகைப்படங்களிலிருந்து நூறு புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து சென்னை ஆர்ட் ஹவுஸ் கேலரியில் கண்காட்சிக்கு வைத்துள்ளார் இளையராஜா.
இனி இளையராஜா தனது புகைப்படங்களைப் பற்றி சொல்வது…
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு யாத்திரை செல்லும்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை. அங்குள்ள கிராமங்களில் படம் எடுப்பதற்கு நான் இறங்கினால் கூட்டம் கூடாது. கார் பயணத்தில் ஒரு காட்சியைக் கண்டால் உடனடியாக இறங்கி எடுப்பேன். ஒரு நொடிக்கும் குறைவான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. ஷட்டர்வேகம், எக்ஸ்போசர் பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. அதையெல்லாம் மாற்றாமலே எடுத்ததை எடுத்தது போல் கண்காட்சியில் வைத்துள்ளேன். நான் எதைப் பார்த்தேனோ அதைத்தான் நீங்களும் பார்க்கவேண்டும்.
டிஜிட்டல் காமிரா வந்தபிறகு யாரும் நல்ல படங்களை எடுக்க முடியும். சிரமமான வழிமுறைகள் வாயிலாக ஒரு காரியத்தை செய்வதிலேயே தனித்திறமை அடங்கியுள்ளது. அதனால்தான் டிஜிட்டல் புகைப்படக் கருவிகள் வந்தவுடன் நான் புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டேன்.