

எனக்கு வயது 75. நான் தினமும் மாலையில் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதுபோல் ஒருநாள் சென்றபோது பூங்கா பூட்டியிருந்தது. ஏமாற்றமாக இருந்தது. சரியெனத் திரும்ப நினைத்தபோதுதான் பூங்காவிற்கு வெளியே ஒரு பெண் இருப்பதைக் கவனித் தேன். அவளுக்கு 35வயது இருக்கும். ஏனோ அவள் அழுதுகொண்டிருந்தாள். நான் அவள் அருகில் சென்று, “என்னம்மா உடம்பு சரி யில்லையா, பசியா, ஏதாவது கஷ்டமா, என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமானால் செய்கிறேன். தயங்காமல் சொல்” என்றேன். உடனே அவள், “என் கஷ்டத்தை யாராலும் தீர்க்க முடியாது. உங்க வேலையைப் பார்த்திட்டுப் போங்க. உங்க உதவி ஒன்றும் வேண்டாம்” எனச் சொல்லிவிட்டாள்.
அவள் ஏதோ கஷ்டத்திலும் கோபத்திலும் இருக்கிறாள் என நினைத்து நகர்ந்தேன். சிறிது தூரம் நடந்தவுடன் கால் வலித்தது. ஒரு கடை வாசலின் படியில் அமர்ந்தேன். அந்தப் பெண்ணின் நினைவு வந்தது. நான் ஆண்டவனிடம் அவளுக் காக வேண்டிக் கொண்டேன். யாரிடமும் சொல்ல முடியாத அவளின் கஷ்டத்தை இறைவா நீ தீர்க்கக் கூடாதா எனக் கேட்டுக் கொண்டேன். எனக்கு அழுகை வந்துவிட்டது.
அப்போது அந்த வழியாக அந்தப் பெண் போய்க்கொண்டிருந்தாள். நான் அழுவதைப் பார்த்து “சார் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைக் கடுமையாகப் பேசிவிட்டேன்” என்றாள்.
“இல்லையம்மா, நான் அதற்காக வருந்தவில்லை.
நானும் உன் மாதிரி எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன். இன்று நான் உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்” என்றேன்.
உடனே அவள் முகத்தில் ஒரு தெளிவு தோன்றியது. அவள் என் கைகளைப் பற்றி, “நான் பத்து நிமிடம் முன்புதான் உங்களைப் பார்த்தேன். என் பிரச்சினையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. என்றாலும் அறிமுகமில்லாத எனக்காக நீங்கள் வேண்டிக்கொள்வதைப் பார்க்கும்போது அந்தப் பிரச்சினையின் தாக்கம் குறைந்துவிட்டது” என்று சொல்லி நன்றி கூறினாள்.
- பி. ஆர். அனந்த வெங்கடேசசார்,சென்னை -91.