Last Updated : 29 Mar, 2014 02:43 PM

 

Published : 29 Mar 2014 02:43 PM
Last Updated : 29 Mar 2014 02:43 PM

கண்ணோடு காண்பதெல்லாம்

பறப்பதற்கும் தண்ணீரில் நடப்பதற்கும் எல்லோருக்கும் ஆசை தான். ஆசை இருந்தாலும் அதைச் செயல்படுத்த எல்லோராலும் முடியாதே. ஒருசிலரால் தான் அற்புதங்களை நிகழ்த்த முடிகிறது. அப்படியொருவர் 2011 ஜூன் 25 அன்று லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்து சென்று மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் டைனமோ என்னும் புகழ்பெற்ற மாஜிக் நிபுணர்.

இதைப் போல மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். ஒரு முறை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உயரமான டைம்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரில் நடந்தே தரைக்கு இறங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் டபுள் டக்கர் பஸ்ஸின் கூரை மீது தரையிலிருந்து 15 அடி உயரம் - வலது கையைத் தொட்டபடி உடல் முழுவதையும் அந்தரத்தில் தொங்கவிட்டுவந்தார். கண்ணாடி வழியே ஊடுருவுவார். விரலைக் கையிலிருந்து ஒடித்து மீண்டும் பொருத்துவார். இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளே.

சாதாரண மனிதன் நினைத்தே பார்க்க முடியாத சாகசச் செயல்களை அநாயாசமாகச் செய்து காட்டியுள்ளார் டைனமோ. ஹிஸ்டரி சேனலில் ஒளிபரப்பான இவரது மேஜிசியன் இம்பாஸிபிள் நிகழ்ச்சியை 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்குச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி விருதும் இருமுறை கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிவிடி வடிவில் விற்பனையானபோதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவையெல்லாம் இவரது திறமைக்குச் சான்றுகள்.

ரசிகர்களால் டைனமோ என அழைக்கப்படும் ஸ்டீவன் பிரேய்ன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் 1982இல் பிறந்திருக்கிறார். இவரது தந்தை அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுவாராம். எனவே தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்துவந்திருக்கிறார். தந்தையின் இடத்தில் இருந்து இவரைப் பார்த்துக்கொண்டவர் இவருடைய தாத்தாவான கென். இவர்தான் டைனமோவின் ரோல் மாடல். இவரும் சிறு அளவிலான மந்திர தந்திர வித்தைகளில் ஈடுபட்டவர். இவரிடமிருந்து தான் மாயாஜால வித்தைகளை டைனமோ கற்றுக்கொண்டுள்ளார்.

2012இல் தாத்தா காலமானது தனது வாழ்வின் பெருந்துக்கம் என்கிறார் டைனமோ. தொடக்க காலத்தில் ஸ்டீவன் சீட்டுக் கட்டுகளை வைத்துப் பல தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டுப் பார்ப்போரைக் கவர்ந்திருக்கிறார். இவருக்குப் பிடித்த கதாநாயகப் பாத்திரங்களில் ஒன்று சூப்பர் மேன். சூப்பர் மேனின் சாகசங்கள் எல்லாம் உண்மையானவை என நம்பியுள்ளார் இவர். டைனமோ என்ற பிரபலமான மாஜிக் நிபுணரானபோது தன்னையும் சூப்பர் மேன் போல் நினைத்துக்கொண்டே தந்திர நிகழ்ச்சிகள் ஈடுபட்டதாக இவர் சொல்கிறார்.

டீன் ஏஜில் ஏற்பட்ட குடல் அழற்சி நோயின் பாதிப்பையும் மீறி ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் டைனமோ. சாதாரணமாக வீதியில் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்திவந்த இவருக்கு இப்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x