

சாலையோரம் அனாதையாகத் திரியும் குட்டி நாய்களையோ பூனைகளையோ கண்டால் நாம் என்ன செய்வோம்? அட, அழகாக இருக்கிறதே என்று ஒருமுறைக்கு இருமுறை பார்த்துவிட்டுச் செல்வோம். ஆனால், சென்னை அடாப்ஷன் டிரைவ் அமைப்பினர் பார்த்தால், உடனே அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் நினைக்கக்கூடும். வாகனங்களில் அடிபட்டு நாய்களும், பூனைகளும் இறப்பதைத் தடுக்கவே இப்படிச் செய்வதாகக் கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
ஆங்காங்கே கிடைக்கும் தகவல்கள் மூலமாகச் சாலையோரங்களில் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீடுகளுக்குக் கொண்டு வந்து தடுப்பூசி போட்டு, நல்ல உணவு வகைகளைக் கொடுத்து வளர்க்கிறார்கள். இரண்டு மாதங்கள் வரை வைத்திருக்கும் இவர்கள், பின்னர் குட்டி நாய்கள் தத்து கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு வருவோர் தங்களுக்குப் பிடித்தமான குட்டி நாய்களைக் கொண்டு சென்று வீட்டில் வளர்க்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 19 முறை தத்து கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 700 முதல் 800 குட்டி நாய்களுக்கும், 100 முதல் 200 பூனைகளுக்கும் அடைக்கலம் தரப்பட்டிருக்கிறது என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த முரளி.
குட்டி நாய்களையோ குட்டிப் பூனைகளையோ தத்து கொடுப்பதோடு மட்டும் இவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. தத்து கொடுக்கப்பட்ட வீட்டில் அவை எப்படி இருக்கின்றன என்பதையும் அவ்வப்போது கண்காணிக்கிறார்கள். ஆயிரம் ஆயிரமாக செலவுசெய்து உயர் ரக நாய்களை வாங்கி அதன் பராமரிப்புக்கும் ஆயிரங்களைச் செலவழிப்பதற்குப் பதில் நமக்கு அந்யோன்யமான இதுபோன்ற நாய்களை வாங்கி வளர்க்கலாம்