Published : 25 Oct 2013 03:00 PM
Last Updated : 25 Oct 2013 03:00 PM

1546 கண்களுக்கு ஒளி தந்த விழிச் சேவகர்

கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றுத் தந்து 1546 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறார்.

ரத்த தானம், கண் தானம், உடல் தானம் பற்றி மக்களிடம் சமீபகாலமாகத்தான் விழிப்புணர்வு வந்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு ரத்ததானம் செய்வதே பெரிய விஷயம். அப்படி இருக்கையில், அப்போதே கண் தானம் எப்படி சாத்தியமானது என்று கேட்டால் அடக்கமாக சிரிக்கிறார் செல்வராஜ்.

“1993-ல் சென்னை தொலைக்காட்சி யில், பார்வை இல்லாதவங்களுக்கான குறும்படம் போட்டாங்க. பார்வை இல்லாதவங்களோட கஷ்டத்தையும் அவங்களோட வலிகளையும் அந்தப் படம்தான் எனக்கு புரிய வைச்சது. அந்த ஜீவன்களுக்காக நம்மால முடிஞ்ச எதையாச்சும் செய்யணும்னு முடிவு பண்ணினேன். குறும்படம் பார்த்த மூணாவது நாள், திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரிக்குப் போனேன். கண் தானம் குடுப்பது, பெறுவது சம்பந்தமான சந்தேகங்களை தெளிவு படுத்திக்கிட்டேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, என்னை கண் தான ஊக்குவிப்பாளரா சேர்த்துக்கிட்டாங்க. கண் தானம் சம்பந்தமா சின்னச் சின்ன வாசகங்களை துண்டுப் பிரசுரமா எழுதி மக்களுக்குக் கொடுத்தேன்.

1994 டிசம்பர்ல, பெல் ஊழியர் பாஸ்டின் ஜோசப் நோய்வாய்ப்பட்டு இறந்துட்டார். தகவல் தெரிஞ்சு, அவரோட குடும்பத்தார்கிட்ட பேசுனேன். ஆனாலும், கண்களை கொடுக்க அவங்க ஒத்துக்கல. “எவன் சாவான்னு அலையுறியா?”னு கேட்டு கேவலமா பேசுனாங்க. ஒரு உயிரைப் பறிகொடுத்துட்டு நிக்கிறவங்களோட மனநிலை அந்த நேரத்துல அப்படித்தான் இருக்கும். அதனால, அவங்க பேச்சை நான் பெரிசா எடுத்துக்கல. யதார்த்தத்தை எடுத்துச் சொன்னேன். பாஸ்டின் ஜோசப் செத்ததுக்கு அப்புறமும் இந்த உலகத்தைப் பார்க்கப் போறார்னு சொல்லி புரியவச்சேன். வெற்றிகரமா முதல் ஜோடி கண்களை தானமா பெற்றுக் குடுத்தேன். அன்னைக்கி நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல’’ பசுமையான பழைய நிகழ்வுகளில் மூழ்கிப் போன செல்வராஜ் தொடர்ந்து பேசினார்.

“1998-க்கு அப்புறம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாச்சு. கண் தானம் குடுத்த குடும்பங்களுக்கு பாராட்டு விழா, கிராமங்கள்ல கண் பரிசோதனை முகாம்னு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி னேன். கண் தானம் செய்ய வயது தடையில்லை. பிறந்து அஞ்சு மணி நேரத்தில் இறந்த குழந்தையின் கண்கள் தொடங்கி 104 வயது மூதாட்டியின் கண்கள் வரை இதுவரைக்கும் 773 ஜோடி கண்களை தானமாக பெற்றிருக்கேன். இது எனக்கே வியப்பாத்தான் இருக்கு’’ விழிகளை விரிக்கிறார் இந்த விழிச் சேவகர்.

கண் தானத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டில் ‘அனைவருக்கும் பார்வை - அழைக்கிறது பெல்’ என்ற இயக்கத்தை தொடங்கிய பெல் நிறுவனம், இயக்கத்தின் துணைத் தூதராக செல்வராஜை அறிவித்தது. அப்போது திருச்சி கலெக்டர் ஜெய முரளிதரன் தனது இரண்டு கண்களையும் தானம் கொடுப்பதாக செல்வராஜ் நீட்டிய உறுதிமொழி படிவத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

கண் தான சேவைக்காக பல்வேறு விருதுகளை செல்வராஜ் பெற்றிருக் கிறார். இது மட்டுமின்றி, பார்வையற்ற 70 ஜோடிகளுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்துவைத்து, அதற்குப் பிறகு வளைகாப்பும் நடத்தி வாழவைத்துக் கொண்டிருக்கிறார் இந்த நற்பணி நாயகன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x