

“காலையில் சீக்கிரம் எழுந்து நடப்பதா. அட போங்க பிரதர்!” எனக் கூறி விட்டுப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போரே அதிகம். அதிலும் இரவெல்லாம் இணையத்தில் அலைந்துவிட்டு அதிகாலையில் படுக்கைக்குச் செல்லும் இளையோரே அதிகம். மனஅழுத்தம் தொடங்கிப் பலவிதமான உடல் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில் வயதானாலும் தொடர்ந்து இளைஞர்களாக வலம் வருவோர்கள் சில இளையோருக்கு ரோல்மாடல்களாக இருக்கின்றனர்.
அந்த ‘ரோல்மாடல்’களை, புதுச்சேரி அருகே ஆரோவில் சர்வதேச நகரில் ஆரோவில் உதயதினத்தையொட்டி பத்தாவது ஆண்டாக நடந்த மாரத்தான் போட்டியில் பார்க்க முடிந்தது.
இந்த மாரத்தானின் விசேஷமே, ஆரோவில் நகரில் வசிக்கும் வெளிநாட்டவர் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுதான். மாரத்தான் போட்டிகளைப் பொறுத்தவரை முதல், இரண்டு, மூன்றாம் இடங்கள் என்றெல்லாம் இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தூரத்தை உங்களால் அடைய முடிந்தால், அதுவே வெற்றிதான். அடுத்த மாரத்தானில், அந்த தூரத்தை விட கூடுதலாக இன்னும் கொஞ்ச தூரத்தை அடைந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளலாம்!
உடல்வலிமை, மனித ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்போட்டி நடந்தது. 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., என 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு ஆர்வத்துடன் ஓடினர். குறிப்பாக தமிழகத்தின் 50 வயதைக் கடந்த பிரபல முகங்களும் இப்போட்டியில் முழு தொலைவான 21 கி.மீ. ஓடிக் கடந்தனர். 54 வயதான தமிழக ஏடிஜிபி சைலேந்திரபாபு 15 கமாண்டோ வீரர்களுடன் இந்த மாரத்தானில் கலந்து கொண்டு 42 கி.மீ. நிறைவு செய்தார்.
“மாரத்தான் போட்டி எங்கு நடந்தாலும் நானும், எனது வீரர்களும் பங்கேற்கிறோம். இந்த ஆண்டிலேயே 5-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். நீச்சலும், ஓட்டமும் உடலைக் கட்டுகோப்பாக வைக்க உதவும். எங்களைப் போன்று போலீஸார் பலரும் தற்போது அதிக அளவில் பங்கேற்றுவருகின்றனர்” சில டிப்ஸ்களையும் தந்தார்.
“மனஅழுத்தத்திலிருந்து குழந்தைகள், இளைஞர்கள் விடுபட விளையாட்டு அவசியம். குறிப்பாக ஓட்டம் நல்ல மருந்து. விளையாட்டில் சிறப்பிடம் பிடிக்கும் குழந்தைகள், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்” என்றார் உற்சாகத்துடன். அதேபோலத் தனது 50-வது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார் 57 வயதான முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியன்.
சென்னை சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வான இவர், கடந்த 15 ஆண்டுகளாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2004-ம் ஆண்டு பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இவரின் இடது கால் மூட்டு பல துண்டுகளாக உடைந்ததால், அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
“எனது காலில் மாற்று மூட்டு பொருத்தப்பட்டது. அதனால் வேகமாக நடக்கக் கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். முதலில் நடக்க முயற்சித்தேன். அதுவே மிகவும் கடினமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து யோகா கற்றேன். பின்னர் மெதுவாக ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். கடந்த
2014-ம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டிதான் நான் பங்கேற்ற முதல் போட்டி. எனது 50-வது மாரத்தான் போட்டியிலும் இங்கேயே பங்கேற்பது சந்தோஷமாக இருக்கிறது” என்றவர், தனது 50-வது மாரத்தான் குறித்து ஆர்வமுடன் பேசினார்.
“புதுச்சேரியில்தான் முதன்முதலில் மாரத்தான் ஓடத் தொடங்கினேன். அங்கு ஓடத் தொடங்கிய என் கால்கள் ஆஸ்திரேலியா, மும்பை, சிம்லா, சென்னை, கோவை எனப் பல ஊர்களிலும் ஓடியது. குறுகிய காலத்தில் 50 மாரத்தானில் பங்கேற்றுள்ளேன். உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே எனது விருப்பம்.
காலையில் தினமும் 5 மணிக்கு எழுந்து ஓட்டப் பயிற்சி எடுக்கிறேன். தினசரி பயிற்சியால் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தித்தான் ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன். 60 வயதுக்குள் நூறாவது மாரத்தானில் ஓடுவேன்” என்கிறார் நம்பிக்கை மிளிர.
சுமார் 70 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் முகமெல்லாம் புன்னகையுடன் வியர்வை வழிய மாரத்தானை நிறைவு செய்தப்படி இருந்தனர். எதற்காக ஓடுகிறீர்கள் என்று கேட்டால், “சந்தோஷத்துக்காகதான்!” என்கிறார்கள்.
நாமும் ஒரு ‘ரன்’ போவோமா..?