Last Updated : 08 Feb, 2014 12:56 PM

 

Published : 08 Feb 2014 12:56 PM
Last Updated : 08 Feb 2014 12:56 PM

பெரிய மேளம்:
 மக்களின் கலை

பெரிய மேளம் நிகழ்ச்சி, கங்கையம்மன் அடியுடன் தொடங்கியது. அடுத்து அடுத்து என ஒன்பது அடிகள் பெரிய மேளத்தில் இருக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பட்டி முனுசாமி குழுவினர் தொடர்ந்து பறையடிக்க, மேடையில் புழுதி பறந்தது.

மூன்றாவது அடியான பெரு நடையில், கர்ணம் அடிக்கும் முறை இருக்கிறது. பிரம்மாண்டமான இசைக் கருவியுடன் இருவர் கர்ணம் அடித்து எழுந்தவுடன் மீண்டும் பறை இசைத்ததைப் பார்வையாளர்கள் வியந்து ரசித்தார்கள். வைரம் பதிந்ததைப் போல வலுவான உடற்கட்டுடன் இசைக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரும் தளர்வே இல்லாமல் பறையைத் தொடர்ந்து இசைத்தனர்.

கிட்டதட்ட இந்த இசை நிகழ்ச்சி 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. பூவுலகின் நண்பர்கள் - என்விரோ கிளப் ஒருங்கிணைத்த சுற்றுச்சூழல் தொடர்பான விழாவில் வட தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலையான ‘பெரிய மேளம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பறை தமிழ்நாட்டின் மரபான கலை வடிவம். பறையைக் கொண்டு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளின் பலவகையான கலை வடிவம் தோன்றி நிலை பெற்றுள்ளன. பறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைகளே சாமனிய மக்களின் கலையாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
பெரிய மேளம், திருவண்ணாமலை மற்றும் ஆற்காடு மாவட்டங்களில் பிரசித்து பெற்ற நாட்டுப்புறக் கலை.

தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா போன்ற இசைக்கருவிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. கக்கையம்மன் அடி, கல்பாளம் அடி, பெருநடை அடி, காத்தவராயன் அடி, காளி அடி, ஒத்தை அடி, சாவடி உள்ளிட்ட ஒன்பது வகையான அடிகள் இதில் இருப்பதாகச் சொல்கிறார் முனுசாமி. இசையுடன் இணைந்து நடனமாகவும் இதை நிகழ்த்துகிறார்கள்.

அம்மன் திருவிழாக்களில், கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழாக்கள், இறந்த வீடுகளிலும் இது நிகழ்த்தப்படுகிறது. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுக்குப் பிறகு பெரிய மேளம், திருவிழாக்கள் தவிர்த்து இம்மாதிரியான பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. முனுசாமி இதுவரை தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மேடை ஏறியுள்ளார்.

டெல்லி, பம்பாய் போன்ற வெளி மாநிலங்களிலும் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் மூன்று தலைமுறையாக இந்தக் கலையைத் தொடர்ந்து செய்து வருகிறார். இப்போது இவரது பேரப் பிள்ளைகளும் கூட ஆடுகிறார்கள். இவர்கள் இதன் ஐந்தாவது தலைமுறையாகும்.

முனுசாமியின் குழுவில் 25 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரமாகவே இக்கலை இருக்கிறது. இன்றைக்குப் பெரிய மேளம் ஆடுபவர்களில் பலர் இவரது சீஷ்யர்களே. இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.


ஒரு சமூகத்தின் கொண்டாட்டத்திற்கான, சோகத்திற்கான, முறையீடலுக்கான, போராட்டத்திற்கான வடிவமான இந்த மக்கள் கலைகள், காலமற்றத்தில் வெவ்வேறு கலை வடிவங்களை உள்வாங்கிக்கொண்டு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x