Last Updated : 30 Jun, 2017 11:10 AM

 

Published : 30 Jun 2017 11:10 AM
Last Updated : 30 Jun 2017 11:10 AM

யூடியூபில் ஒரு அறிவியல் சுனாமி!

நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் உடனே மீம்ஸ் போட்டுக் கலாய்த்துத் தீர்த்துவிடுகின்றன சமூக ஊடகங்கள். இதிலிருந்து சற்றே விலகி, அன்றாடம் பரபரப்பாகும் அனைத்து விஷயங்களையும் அறிவியல் பின்னணியோடு அலசி, சமூகப் பொறுப்போடு, எளிய தமிழில் வீடியோவாகத் தயாரித்து வெளியிடுகிறது சென்னையைச் சேர்ந்த எல்.எம்.இ.எஸ். அகாடமி (‘Let’s Make Engineering Simple’ - LMES Academy).

அலுவலக சுவர் முழுவதும் அறிவியல், கணித ஃபார்முலாக்கள். திரும்பிய பக்கமெல்லாம் உபகரணங்கள் என்று மினி அறிவுத் தொழிற்சாலையாகக் காணப்படுகிறது அகாடமியின் அலுவலகம். கூடவே, ஒளி, ஒலிப்பதிவுக்கான பிரத்யேக அறை, ஒளிப்பதிவுக் கருவிகள், விளக்குகள். அகாடமியின் பல்வேறு விதமான கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ள 12 பேருமே இளைஞர்கள்.

வீடியோவில் பாடங்கள்

சிக்கலான அறிவியல், தொழில்நுட்ப விஷயங்களைப் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் வீடியோவாக்கி வெளியிட்டு வருகிறார்கள் இவர்கள். தமிழகத்தில் பரபரப்பான ஹைட்ரோகார்பன், தெர்மாகோல் திட்டங்கள், ஐன்ஸ்டீன், நியூட்டன் கொள்கைகள் என 2014-ல் தொடங்கி இதுவரை 66 வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர் இந்த இளைஞர்கள்.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்களை நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இதுவரை எங்களது வீடியோக்கள் மொத்தம் 1.20 கோடி முறை பார்க்கப்பட்டிருக்கின்றன என்பதையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் இந்நிறுவனத்தை நடத்திவரும் பிரேமானந்த் சேதுராஜன்.

அமெரிக்காவில் வேலை

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்து, பிரபல ஐ.டி. நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றி உள்ளார். அந்த நிறுவனம் வாயிலாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்க, அங்கு விமானத் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். நாசா தொடர்பான பணிகளையும் சில காலம் செய்துவந்துள்ளார். வேலையில் இருந்த காலத்தில் பழைய பள்ளிக்கூட, கல்லூரிப் பாடங்களை மீண்டும் அசை போட்டுப் பார்க்க, அது அவருக்கு மிகவும் சுவாரசியமான அனுபவமாக அமைந்திருக்கிறது. அதன்பின்னர் என்ன செய்ய ஆரம்பித்தார் என்பதை அவரே சொல்கிறார்:

எப்படி படிச்சா புரியும்?

‘‘சின்ன வயசுல எதை எதுக்குப் படிக்கிறோம்னு தெரியாமலே படிச்சு, மனப்பாடம் பண்ணி, பாஸ் பண்ணிடறோம். ஆசிரியர்களும் இந்த ரூட்லயேதான் நம்மளை அழைச்சிட்டுப் போறாங்க. இந்தப் பாதையில இருந்து கொஞ்சம் வெளிய வந்து, ஆர்வத்தோடு அறிவியலைப் படிக்கிறதே தனிச் சுகம். அன்றாடம் நடக்கிற விஷயங்களோட அறிவியலைத் தொடர்புபடுத்தி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தா, நல்லா படிப்பாங்க. நம்ம மாணவர்களின் அறிவியல் ஆர்வமும், திறனும் அதிகமாகும். அதன்பிறகு அறிவியல் விஷயங்களை எளிய முறையில், தமிழில் வீடியோவாகத் தயாரித்து வெளியிடும் எண்ணம் தோன்றியது” என்கிறார் பிரேமானந்த்.

பிளாஸ்டிக் அரிசி பாடம்

2014-ல் முதல் வீடியோவை ஃபேஸ்புக், யூடியூபில் வெளியிட்டு வருகிறார் இவர். அதற்குத் தமிழ் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுவந்தார். இதையே முழுநேரப் பணியாக்கிக்கொள்ளும் முடிவில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கே திரும்பிவிட்டார்.

சமீபத்தில் இவரது குழு தயாரித்து வெளியிட்ட பிளாஸ்டிக் அரிசி தொடர்பான வீடியோ பரவலாக வரவேற்பைப் பெற்றது. 3டி பிரிண்டரில் தயாரான பிளாஸ்டிக் அரிசி, நேரடியாக வயலுக்குச் சென்று அறுவடை செய்து மில்லில் அரைத்துக்கொண்டுவரப்பட்ட நிஜ அரிசி ஆகிய இரண்டையும் தனித்தனியே கொதிக்க வைத்து அந்த வீடியோவில் விளக்கம் தந்தார் பிரேமானந்த். அந்த வீடியோவைப் போட்டுக் காட்டியபடியே நம்மிடம் பேசினார்.

‘‘அரிசியில் அமிலோஸ், அமிலோபெக்டின் என்ற 2 ஸ்டார் மூலக்கூறுகள் இருக்கின்றன. அரிசி கொதிக்கும்போது அமிலோபெக்டினில் உள்ள ஸ்டார் மூலக்கூறுகள் உடைந்து, பிரிந்து பசைபோல மாறும். இதனால்தான், வெந்த சாதத்தை ஒரு பந்து போல உருட்ட முடிகிறது. தரையில் போட்டாலும் எழும்புகிறது. இந்த அறிவியல் நமக்குப் புரியாததால், பந்துபோல எழும் சாத உருண்டையை வாட்ஸ் அப்பில் காட்டி பிளாஸ்டிக் அரிசி என்று நம்மைப் பயமுறுத்துகிறார்கள். ஒரு காலத்தில் உலகுக்கே வழிகாட்டிய அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்துக்கு, தமிழ் மாணவர்களுக்கு இதுபோல எல்லா அறிவியல் விளக்கங்களையும் எளிய முறையில், எளிய தமிழில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்கிறார் அவர்.

தொடரும் அறிவியல் வீடியோக்கள்

நடப்பு நிகழ்வுகள் மட்டுமின்றி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, நிலநடுக்கம், ‘டைம் மெஷின்’ உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது இவரது குழு. வீடியோ தயாரிப்பு தவிரப் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அறிவியல் செயல்முறை விளக்கங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ‘பிக் பேங்’ என்ற பெயரில் நடத்திவருகிறது இக்குழு.

அகாடமி இளைஞர்கள் அடுத்த வீடியோவுக்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்தனர். அது ‘ஹைப்பர்போலி பேரபோலாய்டு’. நாம் அடிக்கடி கொறிக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸின் வடிவம்தான் ஹைப்பர்போலி பேரபோலாய்டு. மொறுமொறுப்பாக, கரகரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே அந்த வடிவத்தில் தயாரிக்கிறார்கள் என்பது தெரியுமா? இப்படிப் பல கேள்விகள், விளக்கங்களுடன் அடுத்த வீடியோ தயாரிப்பில் முழுமூச்சில் இறங்கியிருந்து பிரேமானந்த் அண்ட் டீம். இதுவும் வைரலாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x