தமிழ்வாணனின் திகிலூட்டும் கதை

தமிழ்வாணனின் திகிலூட்டும் கதை
Updated on
1 min read

கிராஃபிக் நாவல் எனப்படும் சித்திரக்கதை வடிவம் மூலம் நெடுங்கதைகளைக் கூறும் முயற்சி உலக அளவில் இன்றைக்குப் பிரபலமாக உள்ளது. சர்வதேச அளவில் இந்த வடிவம் நீண்டகாலமாகப் புகழ்பெற்றிருந்தாலும், தமிழில் இந்த முயற்சிகள் இப்போதும்கூட அபூர்வமாகவே உள்ளன. இந்தப் பின்னணியில் நீண்ட காலத்துக்கு முன்பே ஒரு துப்பறியும் கதை தமிழ் சித்திரக்கதையாக வெளியாகியுள்ளது.

தமிழில் துப்பறியும் கதைகளுக்கு ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தமிழ்வாணன். அவர் உருவாக்கிய துப்பறிவாளர் சங்கர்லால் மிகவும் பிரபலம். அவர் எழுதிய ‘திரும்பி வரவில்லை’, 1958-ல் கல்கண்டு வார இதழில் சித்திரத் தொடர்கதையாக வெளியானது. அதுவே பின்னர் மேம்படுத்தப்பட்டு 1986-ல் தனிப் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தமிழில் சித்திரக்கதைகள் சாத்தியம் என்பதைச் செல்லம் உள்ளிட்ட பல ஓவியர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று சொல்லலாம். இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ராமு. தமிழ்வாணனின் பெரும்பாலான அட்டைப்படங்களுக்கு ஓவியம் வரைந்தவரும் ஓவியர் ராமு தான்.

சரி, கதை? சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்த் தொழிலதிபர் தனபாலரின் மகன் துரைவேலன், சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். படித்து முடித்த பிறகு கப்பல் மூலமாகச் சிங்கப்பூருக்குத் திரும்புகிறான். இந்தப் பயணத்தில் கப்பல் புயலில் சிக்கிக்கொள்கிறது. புயலில் பெரிய பாதிப்பைச் சந்திக்காத கப்பல், சிங்கப்பூரைச் சென்றடைந்துவிடுகிறது.

ஆனால் கப்பலில் துரைவேலனைக் காணாமல் அவனுடைய அப்பா தனபாலர் ஏமாற்றமடைகிறார்.

செல்வந்தரின் மகனான துரைவேலன் என்ன ஆனான்? இறந்துவிட்டானா, இல்லை தப்பித்துவிட்டான் என்றால் எங்கே இருக்கிறான் என்பதே கதை?

இந்தக் கதையில் ஒரு பேராசிரியரின் தலைமையில் மூன்று பேர் புதைபொருள் ஆராய்ச்சி சாகசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களோடு ஒரு குரங்கும் சேர்ந்துகொள்கிறது. பழங்குடிகளைப் பற்றி சில பழமையான மூடநம்பிக்கைகள் இந்தக் கதையிலும் உண்டு. சித்திரக்கதை பெரிதும் வளராத காலத்தைச் சேர்ந்த தடுமாற்றங்கள் இருக்கவே செய்கின்றன.

துரதிருஷ்டம் என்னவென்றால் 30 ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் புத்தகம் முழுமையாக விற்றுத் தீரவில்லை என்பதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in