சார் பேப்பர்!

சார் பேப்பர்!
Updated on
3 min read

அதிகாலையில் ஓர் அழைப்பு. எதிர்முனை பெரியவர் சொன்னவற்றின் சுருக்கம்: பிரபல வங்கியின் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இரண்டு மகன்களும் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். மிகப் பெரிய தோட்டத்துடன் அமைந்த பங்களாவில் அவரும் மனைவியும் வசிக்கிறார்கள். பேப்பர் போடுகிற பையனின் முகத்தைப் பார்த்தாலே எரிச்சல் வருவதாகச் சொன்னார். அவன் முகத்தில் முழிக்கிற தினம் மோசமானதாக இருக்கிறதாம். இனிய முகம் கொண்ட ஒருவரைப் பேப்பர் போடும் பணியில் அமர்த்தும்படி ஏஜெண்டிடம் பல முறை சொல்லியும் பலனில்லை என்று அலுத்துக்கொண்ட அவர், நான் நடவடிக்கை எடுக்காவிட்டால் பேப்பரே வேண்டாம் என்று சொன்னார்.

எனக்கு மட்டுமல்ல. சர்குலேசன் ஆபீஸராக நாளிதழ்களில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் விடிகாலைப் பள்ளியெழுச்சியே வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் இது போன்ற விநோதப் புகார்கள்தான்.

அவர் சொல்லும் பையனைத் தனிப்பட்ட முறையில் அறிவேன். சின்ன வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட குடும்பம். அம்மாவும் நோயாளி. தினமும் பள்ளி சென்று திரும்பியதும் சோப்பு, ஷாம்பு, க்ளினிங் பவுடர் போன்றவற்றை ஏஜெண்ட் எடுத்துள்ள ஒருவரின் குடவுனில் ஸ்டாக் எடுக்கும் வேலை. அதை முடித்ததும் ஒரு நாளிதழின் டெஸ்பேட்ச் பிரிவில் பார்சல்களைக் கட்டும் வேலை. இரவு இரண்டு மணிக்குப் பிரிண்டிங் முடித்ததும் அங்கேயே நான்கு மணிவரை உறக்கம். நான்கு மணிக்கு மேல் நாளிதழ் முகவரிடம் 250 பேப்பர்களை எடுத்து இலவச இணைப்புகளைச் சொருகி வீடுகளுக்கு விநியோகம். ஆறரை மணிக்கு மேல் எட்டு மணிவரை ஒரு பிராய்லர் கோழிக்கடையில் கொதிக்கும் வெந்நீரில் கோழிகளை முக்கித் தோலுரிக்கும் பணி. அதை முடித்த பின்னரே குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்வான். எப்போது தூங்குவான். எப்போது படிப்பானென்று தெரியாது. சனி, ஞாயிறுகளில் மேலதிகமாக அடுக்ககங்களின் வசிப்போரின் கார்களைக் கழுவுவதைப் பார்த்திருக்கிறேன்.

மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாத உழைப்பு. யாரிடமும் ஏழ்மையைச் சொல்லிக் கையேந்த விரும்பாத வைராக்கியம். நான் அந்தச் சிறுவனின் அபார உழைப்பைப் பற்றியும், ஏழ்மையைப் பற்றியும் அந்தப் பெரியவரிடம் பக்குவமாகச் சொன்னேன். இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குபவனின் முகம் அது என்று சொன்னேன். உங்களைப் போன்றவர்களின் பரிவும், அனுசரணையும் அவனுக்குத் தேவை என்று சொன்னேன். “ஐயாம் நாட் பாதர்ட் அபவுட் ஹிம். ஐ வில் ரைட் டு தி எடிட்டர்” எனக் கோபமாகச் சொல்லிப் போனைத் துண்டித்துவிட்டார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது. ‘அமெரிக்க எஜமானர்களின் க்ளோரிபைஃடு வாட்ச்மேன்... புல் ஷிட்’ என மனதிற்குள் திட்டிக்கொண்டேன். அவ்வளவுதானே நம்மால் முடியும்.

அரை மணி நேரம் கழித்து அதே பெரியவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ஸாரி... நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்... அந்தப் பயலை என்னைப் பார்க்கச் சொல்லுங்க.. அவன் ஃப்ரீயா இருக்கறச்சே கொஞ்சம் இங்க்லீஷெல்லாம் கத்துக்கொடுக்கலாம்னு நெனைக்கறேன். ஒரு பையன் இந்த வயசிலேயே குடும்பத்த காப்பாத்தறது எவ்ளோ பெரிய விஷயம்” என்றார். நான் ஆடிப்போய் விட்டேன். ஒருவேளை நான் மனதிற்குள் சொல்லிக்கொண்ட ‘க்ளோரிஃபைடு வாட்ச்மேன்’ அவர் காதில் விழுந்திருக்குமோ?! டெலிபதி?!

இந்தப் பெரியவராவது பரவாயில்லை அரைமணி நேரத்தில் மனம் திருந்தியவரானார். ஆனால், எனக்கு வரும் பெரும்பாலான அழைப்புகளில் அவர்களது வீட்டுக்குப் பேப்பர் போடுபவர்களின் பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இருபது வருடங்கள், முப்பது வருடங்கள் பேப்பரைப் போட்டுக்கொண்டிருப்பவரை ‘பேரெல்லாம் தெரியாது சார். ஒரு கெழவன்தான் ரொம்ப நாளா போடுறாரு’ என்பார்கள். நம்மைப் பொருத்தவரை நாம் பேப்பருக்குப் பணம் கொடுக்கிறோம். அவர் சப்ளை செய்கிறார். அவ்வளவுதான். அதைத் தாண்டிய ஒரு உறவு இருப்பதில்லை. ஆனால், பேப்பர் போடுகிறவர்கள் நம்மை அப்படி நினைப்பதில்லை. ஒரு தெருவில் உள்ள ஒவ்வொருவரையும் அவர்கள் அறிவார்கள்.

நாளிதழ்களுக்கு ‘லிவிங் டெக்ஸ்ட் புக்’ என்றொரு சிறப்புண்டு. பாடப் புத்தகங்கள்கூடக் காலமாற்றத்தில் காலாவதியாகிவிடும். ஆனால், நாளிதழ்கள் அறிவைச் சுமந்து வருபவை. நாளிதழைச் சுமந்து வருபவன் நமக்கு அறிவைச் சுமந்து வருகிறான். நாம் சமகாலப் பிரக்ஞையோடு உறவாட வகை செய்கிறவன் அவனே என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். போப் பிரான்சிஸ் பதவியேற்ற சில தினங்களில் அர்ஜெண்டினாவில் தான் வசித்த தெருவில் தனக்குப் பேப்பர் சப்ளை செய்த சிறுவனைத் தொலைபேசியில் அழைத்து, தான் போப் ஆகிவிட்டதால் வாடிகனுக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்தார். தன் வீட்டிற்கு இனிமேல் பேப்பர் டெலிவரி செய்ய வேண்டாம் என்றும் சொன்னார். நேரில் சந்தித்துத் தகவல் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன் என்றும் இத்தனை நாள் எனக்கு வழங்கிய சேவைக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, அறிவியல் புனைகதை மன்னன் ஐசக் அசிமோவ், நடிகர் டாம் க்ரூஸ், மார்ட்டின் லூதர் கிங், நார்மன் வின்சென்ட் பீலே, பங்குச்சந்தைப் புலி வாரன் பஃபெட் துவங்கி நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்வரை பல பிரபலங்கள் சிறு வயதில் நாளிதழ் விநியோகம் செய்துவந்தவர்கள். சிறு வயதில் பேப்பர் போடும் தொழில் செய்தவர்களுக்கு மக்கள் தொடர்பு, சுறுசுறுப்பு, வாடிக்கையாளர்களைக் கையாளும் திறன் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவர்களது வாழ்வை ஆய்வுசெய்து ஜெஃப்ரி பாக்ஸ் எழுதிய மேலாண்மை நூல் 'Rain: What a Paper boy Learned About Business' உலகப் புகழ் பெற்றது.

வேலைக்கு விண்ணப்பிக்கையில் சிறு வயதில் பேப்பர் டெலிவரி பாயாகப் பணியாற்றியதையும் தங்களது சுய விவரப் பட்டியலில் இணைத்துக்கொள்ளும் வழக்கம் ஐரோப்பா முழுவதும் உண்டு. அவர்களுக்குப் பணிவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் உண்டு. கோவையில் இனக்கலவரம், குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த காலம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் நாளிதழ்கள் சீராக விநியோகம் ஆயின. ஊட்டியில் மலைச்சரிவு ஏற்பட்டு எந்த வாகனங்களும் அங்கே செல்ல முடியாத நிலை. தினசரிகள் சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று அங்கிருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்குச் சென்று சீராக விநியோகம் ஆயின. ஏழரை மணிக்கு முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு, ஆறரை மணிவரை பேப்பர் போட்டுவிட்டு வந்து தாலி கட்டிய மணமகன்கள் உண்டு. பேப்பர் போட வேண்டுமே என்பதால் இறந்த தகப்பனை அன்றே எரியூட்டிய மகன்களும் இருக்கிறார்கள்.

கோவையில் சுமார் மூன்றாயிரம் பேர் இந்தப் பேப்பர் போடும் தொழிலில் இருக்கிறார்கள். வருடத்திற்குச் சுமார் ஐந்து முதல் பத்து நபர்கள் வரை சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். அதிகாலையிலே எழுந்திருப்பது, பகலெல்லாம் வெயிலில் சுற்றுவது, சரிவரத் தூக்கமின்மை ஆகியவற்றால் நாற்பது வயதைத் தாண்டிய பெரும்பாலானவர்கள் இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். தெரு நாய்களிடம் கடிபடுபவர்களின் எண்ணிக்கையோ நூற்றுக்கணக்கில். ஒரே ஒரு நாள் பேப்பர் தாமதமாக வந்துவிட்டால், ஒரு நாள் இணைப்பிதழ் இல்லாமல் வந்து விட்டால், ஒரு நாள் நாம் படிக்கும் நாளிதழுக்குப் பதிலாக வேறு நாளிதழ் வந்துவிட்டால், ஒரே ஒரு நாள் அவர்கள் வீசியெறியும் பேப்பர் செடிக்குள் விழுந்துவிட்டால், ஒரே ஒரு நாள் அவர்கள் தரும் பேப்பர் மழையில் நனைந்திருந்தால் நாம் எவ்வளவு கோபித்துக்கொள்கிறோம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in