

நீதிபதி குருசாமி:அமைதி! அமைதி! அமைதி!. இப்போது ரசிகர்களை ஏமாற்றியதாக சிவகாசி நிறுவனத்துக்கு எதிராக காமிக்ஸ் உலகம் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சிவகாசி நிறுவனம் சார்பாக பாரிஸ்டர் ரஜினிகாந்தும், காமிக்ஸ் உலகம் சார்பாக வக்கீல் கண்ணனும் வாதாடுவார்கள். வாதம் தொடங்கட்டும்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: கனம் கோர்ட்டார் அவர்களே, தமிழில் பல ஆண்டுகளாக காமிக்ஸ் கதைகளை வெளியிட்டு வருபவர் எனது கட்சிக்காரர். சொல்லப்போனால், தமிழ் காமிக்ஸின் தற்போதைய முகமாக இருப்பவர். இவரைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது.
கண்ணன்: அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். இது இந்த வழக்குக்குத் தேவையில்லாத விஷயம். தமிழில் காமிக்ஸ் 1945-லிருந்து வெளியாகிவருகிறது. 1984-ல்தான் காமிக்ஸ் உலகத்துக்கு இந்நிறுவனம் வந்தது.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: பழைய கதையெல்லாம் வேண்டாம், யங் மேன். ஆதாரம் ஏதாவது இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். இல்லையென்றால், நஷ்டஈடு கேட்டு, உங்கள் மீது வழக்கு தொடருவோம்.
கண்ணன்: ஆதாரம்தானே? இதோ கொடுக்கிறேன் யுவர் ஆனர். அதற்கு முன்பாக ஒரு கேள்வி. உங்களுக்கு ரோஜர் மூர் என்பது யாரென்று தெரியுமா?.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: அவர் ஜேம்ஸ்பாண்ட் 007 பாத்திரத்தில் நடித்து, சர் பட்டம் பெற்ற ஒரு பிரபல நடிகர். நேரத்தை வீணடிக்காமல், விஷயத்துக்கு வரவும்.
கண்ணன்: விஷயமே அதுதான், யுவர் ஆனர். நமது சிவகாசி நிறுவனம் திடீரென்று ‘ரோஜர் மூர் சாகசம்’ என்று காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. சமீபத்தில்கூட இவர் இப்படி ‘ரோஜர் மூர்’காமிக்ஸ் கதைகளை வெளியிட்டது.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: இதிலென்ன குற்றம் கண்டீர்? பிரபலமான ஒருவரது காமிக்ஸ் கதைகளை வெளியிட்டோம். அவ்வளவுதானே? இதில் சட்டப்படி என்ன தவறு இருக்கிறது?.
கண்ணன்: அவர் நிஜமாகவே ரோஜர் மூரின் காமிக்ஸ் கதைகளை உரிமம் பெற்று வெளியிட்டிருந்தால், அதில் பிரச்சினையில்லை, யுவர் ஆனர். ஆனால், இந்த நிறுவனம் என்ன செய்தது, தெரியுமா? இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான பால் டெம்பிள் என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்தை ரோஜர் மூர் என்று சொல்லி பெயரை மாற்றி, தமிழில் கதைகளை வெளியிட்டிருக்கிறது.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: வேற்று மொழிக்கதைகளைத் தமிழில் வெளியிடும்போது, பெயரை மாற்றுவதில் என்ன பிரச்சினை? இது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தானே?.
கண்ணன்: அப்படி இல்லை, யுவர் ஆனர். லண்டன் ஈவ்னிங் நியூஸ் பத்திரிகையில் வெளியான பால் டெம்பிள் என்ற காமிக்ஸ் தொடரை, அதுவும் இன்றளவும் காப்புரிமை பெற்ற ஒரு தொடரைத் தமிழில் வெளியிடும்போது, என்ன பெயரில் வேண்டுமென்றாலும் வெளியிடலாம். ஆனால், சட்டப்படி காப்புரிமை பெறப்பட்ட, வணிக ரீதியில் முன்னுரிமை பெற வேண்டிய ஒரு பெயர், ரோஜர் மூர். சர்வதேச அளவில் இவருக்கு வியாபார சந்தை மதிப்பு இருக்கிறது.
இப்படி காப்புரிமை பெறப்பட்ட நிறுவனத்தின் கதாபாத்திரத்தை, வேறு ஒரு ரெஜிஸ்டர்டு காப்பிரைட் உரிமம் கொண்ட பிரபல ஹீரோவாகப் பெயர் மாற்றம் செய்வது The Copyright (Amendment) Act 2012, No 27 of 2012-ன்படி தண்டனைக்குரிய குற்றமில்லையா, யுவர் ஆனர்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: இதற்கு என்ன ஆதாராம்?.
கண்ணன்: ரோஜர் மூரின் புத்தம் புதிய சாகசம் என்று அந்நிறுவனம் வெளியிபட்ட காமிக்ஸ் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறேன், யுவர் ஆனர். அதைப் போலவே, அந்தக் கதைகளின் ஒரிஜினலான பால் டெம்பிள் கதைகளையும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: தமிழின் ஒரே காமிக்ஸை இப்படிக் குற்றம் சாட்டலாமா?.
கண்ணன்: அப்படிச் சொல்வதற்கு முன்பாக உரிமம் பெற்று, பால் டெம்பிள் என்ற பெயரிலேயே வெளியிட்டிருக்கலாமே?.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்: கண்ணா?.
கண்ணன்: மாமா. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நியாயமும் சட்டமும்தானே, மாமா.
நீதிபதி குருசாமி:ஆர்டர், ஆர்டர். இந்த உறவுமுறையெல்லாம் கோர்ட்டுக்கு வெளியில் இருக்கட்டும். இப்போதைக்கு கோர்ட் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.