வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்காரச் செடிகள்

வீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்காரச் செடிகள்
Updated on
1 min read

அடுக்குமாடி வீடுகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், தோட்டம் அமைப்பது என்பதே பலருக்கும் கனவாகிவிட்டது. ஆனாலும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் தங்கள் ஆசையைத் தீர்த்துக்கொள்ள வீட்டுக்குள்ளே அலங்காரச் செடிகளை வளர்க்கவும் தவறுவதில்லை. வீட்டில் வளர்க்க நிறைய அலங்காரச் செடிகள் உள்ளன.

பீஸ் லில்லி:

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்படுபவர்களின் சாய்ஸ் இதுதான். பீஸ் லில்லியை வீட்டில் வளர்த்தால் வீடு அழகாகக் காட்சியளிப்பதோடு சுத்தமாக இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

மார்ஜினட்டா:

மிகவும் அழகான அலங்காரச் செடிகளில் ஒன்று மார்ஜினட்டா. நீளமான புற்கள் போல வளரும் இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால் தூசி எளிதில் அண்டாது என நம்பப்படுகிறது.

ஸ்னேக் பிளாண்ட்:

உள் அலங்காரத்திற்கு ஏற்ற செடிகளுள் ஸ்னேக் பிளாண்ட் முக்கியமானது. இந்தச் செடியை வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் வைக்கலாம். இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால் அழகு கூடும்.

கற்றாழை:

பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் தொங்கவிடப்படும் அலங்காரச் செடி கற்றாழை. மருத்துவ குணம் உள்ள இந்தச் செடியை ஆர்வமாகப் பலரும் வளர்ப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தச் செடி வீட்டில் உள்ள நச்சுகளை உள்வாங்கிக் கொள்ளும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது.

கமுகு மரம்:

இந்தச் செடியின் இலைகள் பார்ப்பதற்குத் தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் இந்தச் செடி வீட்டுக்குள் இருந்தால், குளிர்ச்சியான காற்று வீசுவது போன்ற உணர்வு ஏற்படும்.

ஐவி:

மணி பிளாண்ட் போல இதுவும் ஒருவகையான படர்கொடி. வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்காரச் செடிகளில் மிகவும் பிரபலமானது. செடி சுவரில் படர்ந்து வளர்வது பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

ஃபேர்ன்ஸ்:

கோழி இறகுகள் போலக் காணப்படும் இந்தச் செடியின் இலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் வைத்து இந்தச் செடிகளைப் பராமரிக்கலாம்.

வீட்டை அலங்கரிக்க இந்தச் செடிகள் சில சாம்பிள்கள் மட்டுமே. இவை போல இன்னும் ஏராளமான செடிகள் வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in