

தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’.
“தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம்.
வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொட்டாய், படிப்பும் வேலையும், உறவுகள், ஆன்மிகம், ஆட்டம் (விளையாட்டு), அரசியல் பேட்டை, ஆஹா ஆர்கானிக், நம்ம சென்னைடா, நெல்லை வாலா, மதுரை மச்சான்ஸ் என்று சுமார் 25 பிரிவுகள் இருக்கின்றன. விருப்பமான பிரிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால், அதுபற்றிய தகவல்களை அதிகமாகப் பார்க்க முடியும். கருத்திட முடியும். ‘லைக்’கிற்குப் பதில் ‘விசில்’ என்பது போன்ற மண்ணுக்கேற்ற வார்த்தைகள் இங்கே சகஜமாகப் புழக்கத்தில் இருக்கின்றன.
இதை வடிவமைத்த சாம் இளங்கோ மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவராக இருந்தவர். அவரிடம் பேசினோம்.
“அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மீம்ஸ் போடுவதற்கும், ஜோக் பதிவிடுவதற்கும் கூட தனித்தனி ஆப்கள் வந்துவிட்டன. ஆனால், தமிழின் இனிமை, பெருமை, தமிழர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்துகொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் ஒரு செயலி வந்தால் எப்படியிருக்கும்? என்று நீண்டகாலமாக எதிர்பார்த்தேன். வரவில்லை. ‘இப்படியொரு புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும் என்று கருதுகிறாயா? சரி, அப்படியானால் அந்தப் புத்தகத்தை எழுதும் தகுதி உனக்கே இருக்கிறது’ என்பார்கள். அதைப்போல நம் எண்ணத்தை நாமே செயல்படுத்தினால் என்ன என்று தோன்றியது” என்று இத்திட்டம் மனதில் உதித்த கதையைச் சொல்கிறார் சாம் இளங்கோ.
கடந்த வருடம் சிவகாசி சென்றவர், பரவலாக அனைவரது கையிலும் விலைமிக்க திறன்கைப்பேசிகள் இருப்பதைக் கவனித்திருக்கிறார். ஆனால், அதனை சாதாரண கைப்பேசியைப் போலவே பேசுவதற்கும், பாடல் கேட்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதையும், சிலர் அதிகபட்சம் வாட்ஸ்அப் பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறார் இளங்கோ. திறன் கைப்பேசியில் என்னென்ன ஆப்கள் இருக்கின்றன, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும்கூட, ‘அதெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கு சார், நமக்கு ஒத்துவராது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
“அப்போதுதான் யோசித்துப் பார்த்தேன். அமெரிக்க, ஜெர்மனி போன்ற பலநாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் பெரிய பெரிய சாப்ட்வேர்களை எழுதித்தருகிறோம். ஆனால் தமிழ் மக்களுக்காகத் தமிழ் மொழியில் என்ன செய்திருக்கிறோம் என்று. உலகத் தமிழர்களின் எண்ணிக்கை 7.5 கோடி. ஜெர்மன் மக்கள் தொகை 8 கோடி தான், பிரான்ஸ், இத்தாலி மக்கள் தொகை இதைவிடக்குறைவு. ஆனால், அவர்கள் தங்கள் கைப்பேசி செயலிகளில் தாய்மொழியைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கே என்ன பிரச்சினை என்றால், நம்மிடம் தொழில்நுட்ப அறிவு அதிகமிருந்தாலும், இந்திய மொழிகளில், முக்கியமாகத் தமிழ் மொழியில், அதிகபட்சமாக செயலிகள் உருவாக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ‘தமிழன்டா’வை உருவாக்கினோம்” என்கிறார்.
பயனர்களுக்குப் பிடித்துப்போக, ‘தமிழன்டா’ வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களில், சுமார் 5000 பேர் இந்தச் செயலியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பயனர்களால் தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள் இடப்படுகின்றன. இருந்தாலும் பயனர்களிடம் இருந்து கருத்துக்கேட்டு மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அப்டேட் வெர்ஷன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
“இந்தச் செயலியை ஆன்ட்ராய்ட் கூகுள் ப்ளே ஸ்டோர்களிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து டவுன்லோட் செய்ய முடியும்” என்ற இளங்கோவிடம் அவரது இலக்கு பற்றிக் கேட்டோம். "இரண்டு வருடத்தில், 50% சதவிகிதம் உலகத்தமிழர்கள் 'தமிழன்டா' வில் ஒருங்கிணைந்து தமிழில் பேச வேண்டும், தமிழில் படைக்க வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் ஆசை. அதற்காகக் கடுமையாக உழைப்போம்" என்றார்.
கனவு ஈடேற நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.