

பண்ருட்டி என்றால் பலாப்பழம் நினைவுக்கு வரும். இங்கு விளையும் பலாப்பழத்திற்கு உலக அளவில் வரவேற்பு உண்டு. தேன் சுவைமிக்க பழங்களைத் தரும் பலா மரம் தேனினும் இனிய இசையை உண்டாக்கவும் பயன்படுகிறது.
பலா மரங்களைக் கொண்டு வீட்டுக் கதவு, ஜன்னல், கட்டில், பீரோ, நாற்காலி, மேஜை போன்றவற்றைத் தயாரிப்பதைக் குறித்துப் பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவை மட்டுமல்ல... இசைச் கலைஞர்கள் பயன்படுத்தும் தவில், தபேலா, மிருதங்கம், கஜூரா, உடுக்கை, பம்பை, உருமி மற்றும் வீணை உள்ளிட்ட இசைக் கருவிகள்கூட தயாரிக்கவும் பலா மரத்தில் செய்யப்படுகின்றன. அதுவும் பண்ருட்டிப் பலா மரத்தில் செய்யப்படும் இசைக் கருவிகளுக்குத் தனித்துவமான வரவேற்பு உண்டு. இது தவிர கேரள இசைக் கலைஞர்கள் பயன்படுத்தும் செண்டை, உடுக்கை, துடி உள்ளிட்ட இசைக் கருவிகளும் பண்ருட்டிப் பலா மரத்தில்தான் செய்யப்படுகின்றன.
பண்ருட்டி நகரம்,காடாம்புலியூர், சாத்திப்பட்டு, மாம்பட்டு, காட்டுக்கூடலூர் உள்ளிட்டக் கிராமங்களிலும் இத்தொழில் குடிசைத்தொழிலாக தற்போது இயங்கிவருகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் காடாம்புலியூரைச் சேர்ந்த ஏழுமலை பண்ருட்டிப் பலா மரம் குறித்த சில அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: “இசையுடன் இணைந்த மரங்களில் முதன்மை இடத்தை வகிப்பது பண்ருட்டிப் பலா மரங்கள், அதற்கு முக்கியக் காரணம் வறண்ட பூமியான செம்மண் கொண்ட பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்குக் கடினத் தன்மை அதிகம், இதிலிருந்து ஒழுகும் பாலின் தன்மையும் அடர்த்தியானது.இத்தகைய சிறப்பு பண்ருட்டியில் விளையும் பலா மரங்களுக்கே உண்டு என்பதால், இசை வித்வான்கள் எதிர்பார்க்கும் நாதமும், சுருதியும், பிசகின்றி, துல்லியமாகக் கிடைக்கும். இது இறைவன் கொடுத்த வரம் என்றால் மிகையல்ல. மேற்கண்ட இசைக் கருவிகள் வேறு பல மரங்களில் தயார்செய்யப்பட்ட போதிலும், அவற்றில் இசைக் கலைஞர்கள் திருப்திப்படுத்தும் ஒலிகள் கிடைப்பதில்லை.மேலும் இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர் உதவியுடன் புதிய இசைக் கருவிகள் வந்த பின்பும், பலா மரத்திலான இசைக் கருவிகளுக்கும் இன்றளவும் கிராக்கி உள்ளது.
அதனால்தான் பண்ருட்டிப் பலா மரத்திலான இசைக்கருவிகளுக்கு கேரளாவிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இன்றளவும் எனக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், என்னால் தயார் செய்யமுடியவில்லை. காரணம் இத்தொழிலில் இன்றைய இளம் தலைமுறையினர் வர தயங்குகின்றனர்.மேலும் போதிய நிதி வசதி இல்லாததால் இத்தொழிலை பெரிய அளவிற்கு கொண்டு செல்லமுடியவில்லை இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடையே நிலவும் பொறாமையும் இத்தொழில் மேலும் சிறகடிக்க முடியாததற்கு முக்கியக் காரணம்.
போதிய கல்வியறிவு இல்லாத இப்பகுதி மக்களுக்கு உள்ளூர் மரத்தின் அருமை பெருமை தெரியவில்லை என்றே கூறலாம்.எனவே வெகு சிலர் மட்டுமே இத்தொழிலை செய்துவருகிறோம்.”
அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்து இசைக் கருவிகள் வேண்டி ஆர்டர் வந்தாலும் அவற்றை அனுப்புகின்ற கூலி, விற்கும் பொருளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. இதனால் பலர் இத்தொழிலை தொடர்ந்து செய்ய தயங்குகின்றனர் என்கிறார் பண்ருட்டியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர்.
பண்ருட்டி இசைக் கருவிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகின்ற போதிலும், அதன் அருமை பெருமை தெரியாத நிலையில் பண்ருட்டி வாசிகள் பலா பழம் விற்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துகின்றனர்.
பண்ருட்டிப் பலா மரங்களில் தயார் செய்யப்படும் இசைக் கருவிகள், அண்டை மாநிலமான கேரளாவில் சந்தைப் படுத்தப்படுத்தப்ப டுகின்றன,அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் பண்ருட்டி வாசிகளுக்கு அவற்றின் பயனும், பணமும் அறியாமல் போனது விந்தை தான். அரசும், திறன்மிக்கத் தொழில் முனைவோர்களும் களமிறங்கினால் பட்டாசுக்கு சிவகாசி எப்படியோ, அதுபோல இசைக் கருவிக்குப் பண்ருட்டி என மாற்ற முடியும்.