தூரிகை தீட்டிய கதைகள்

தூரிகை தீட்டிய கதைகள்

Published on

பொதுவாக ஓவியங்கள் அழகானவை. ஆனால், அழகு மட்டும் திருப்தியைத் தந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி, பிறரது கவனத்தை ஈர்க்கும் ஒன்றை ஓவியத்தில் கொண்டுவர வேண்டும் என விரும்புவார்கள் ஓவியர்கள். அப்படியான விருப்பத்தால், தன் மனதைப் பாதித்த ஒரு சம்பவத்தைத் தனது ஓவியத்தில் கொண்டுவரும் எண்ணம் வரும். அதை ஓவியமாகப் பார்க்கும் பலருக்கும் அந்தச் சம்பவம் உணர்த்தும் விஷயம் மனதைத் தைக்கும். இப்படியான சமூக நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் ஓவியங்களை உருவாக்குகிறார் ராமமூர்த்தி.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கலையில் முதுகலைப் படித்துள்ள ராமமூர்த்தி, தற்போது பல்வேறு நிறுவனங்களுக்கு ஃப்ரீலான்சர் முறையில் ஓவியங்களை வரைந்துவருகிறார். மேலும், நண்பர்களுடன் இணைந்து லலித் கலா அகாடமி உட்பட பல்வேறு இடங்களில் தான் வரைந்த ஓவியங் களைக் கண்காட்சிக்கு வைத்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி படித்தது எல்லாம் அரசுப் பள்ளியில்தான். விளம்பரப் பலகை (signboard artist) கலைஞரான ராமமூர்த்தியின் தந்தைதான் அவருக்கு முதல் உந்துதலை அளித்திருக்கிறார். தந்தை செய்யும் கலையைப் பார்த்து வளர்ந்த காரணத்தால் சிறுவயது முதலே ராமமூர்த்திக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் உருவாகியுள்ளது. பள்ளி ஆசிரியர்களும் அவரது ஓவிய ஆர்வத்தை ஊக்குவித்திருக்கிறார்கள்.

“என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். ஓவியம் மீது ஆர்வம் இருந்தாலும் அதனை முறையாக வெளிப்படுத்த உதவியவை கல்லூரி நாட்கள். அதற்கு உறுதுணையாக எங்கள் கல்லூரி முதல்வர் சந்துரு சார்தான் உடனிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் நடத்திய ‘மையம்’பட்டறைதான் என்னைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவி இடம்” என்கிறார் ராமமூர்த்தி.

ஆதிகாலத்தில் மனிதர்கள் தாங்கள் பார்த்த காட்சிகளை ஓவியம் மூலமாகத்தான் வெளிப்படுத்தினார்கள். இதற்குச் சான்றுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்றளவும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

“ஒரு சமூகத்தின் வெளிப்பாடாக ஓவியம் இருந்துள்ளது. மொழி எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு மனிதனுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக ஓவியம்தான் இருந்துள்ளது” என்கிறார் அவர்.

ஓவியத்தின் தேவை

இன்றைக்கு எல்லோர் கைகளிலும் கைபேசி உள்ளது. கையால் கிளிக் செய்தால் போதும்; கணப் பொழுதில் படம் எடுத்துவிடலாம். ஆனால், இன்றைக்கும் ஓவியத்தின் தேவை இருக்கத்தான் செய்கிறது.

“ஒரு புகைப்படத்தின் மூலம் ஒருவரின் பிம்பத்தைப் படம் எடுக்க முடியும். ஆனால், ஒரு ஓவியத்தால் மட்டும்தான் அவரின் உணர்ச்சிபூர்வமான மனநிலையை வெளிப்படுத்த முடியும். எல்லாருடைய வீடுகளிலும் டிவி வந்துவிட்டாலும், தியேட்டருக்குச் சென்று பார்க்கும் அனுபவம்போல் கிடைக்காது. அதுபோல்தான் ஓவியமும். அதிநவீன புகைப்படக் கருவிகள் வந்தாலும் ஒரு ஓவியம் அளவுக்கு வர முடியாது”

ராமமூர்த்தியின் ஓவியங்கள் பெரும்பாலும் நாம் அன்றாடம் கடந்து போகும் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. குறிப்பாக, மனிதக் கழிவை மனிதனே சுத்தம் செய்யும் ஓவியம், குழந்தைத் தொழிலாளியின் கனவை வெளிப்படுத்தும் ஓவியம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் தொடர்பான ஓவியம், மனிதர்களின் முக பாவனைகள் ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை. மொத்தத்தில், சாதாரண மக்களின் அடிமட்ட குரலை வெளிப்படுத்துகின்றன ராமமூர்த்தியின் ஓவியங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in