சுடச் சுட காபி எப்போது குடிக்கலாம்?

சுடச் சுட காபி எப்போது குடிக்கலாம்?
Updated on
1 min read

காபி குடிப்பது நல்லதா கெட்டதா என்பது பற்றி அநேக வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறோம். இந்த விவாதம் ஒரு புறம் இருந்தாலும் சோம்பல் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலி போக்கவும் என விதவிதமான காரணங்களுக்காக காபியைக் குடித்துக்கொண்டுதானிருக்கிறோம்.

அவ்வளவு எளிதாக காபியைத் துறக்க இயலாதவர்கள்தான் பெரும்பாலானோர். காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழல் என்பதைத் தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது. அதிலிருந்து எல்லோராலும் எளிதில் விடுபட முடியாது என்பதே யதார்த்தம்.

அதெல்லாம் சரி, காபி குடிப்பது நமது உரிமைதான். ஆனால் கண்ட கண்ட நேரத்தில் காபி குடிப்பதைவிட அதற்கென இருக்கும் சில குறிப்பிட்ட நேரம் மட்டும் காபி குடிப்பதைப் பற்றி யோசிக்கலாம் அல்லவா? அது என்ன காபி குடிப்பதற்கு உகந்த நேரம்? ஆமாம் அதற்கும் ஓர் ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார்.

காபி குடிப்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மில்லர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார். அவர் அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பெதெஸ்டா என்னுமிடத்தில் அமைந்திருக்கும் உடல்நல அறிவியல் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்தவர்.

அவர் நடத்திய ஆய்விலிருந்து காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை காபி குடிப்பது நல்லதல்ல என்பது தெரியவந்துள்ளது. அது ஏன் அந்த நேரத்தில் காபி குடிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தையும் அவர் சொல்கிறார். நமது அன்றாட நடவடிக்கைகளுக்காக

உடம்பில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கார்ட்டிசால். இந்த ஹார்மோன்தான் நமது சுறுசுறுப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணம்.

இது காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை தான் நன்கு சுரக்குமாம். ஆக அந்த நேரத்தில் நாம் சுறுசுறுப்பு பெறுவதற்காக காபி குடிப்பது வீணான செயல். மேலும் அந்த நேரத்தில் நாம் காபி குடித்தால் அது இந்த ஹார்மோன் செயல்பாட்டிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

கார்ட்டிசால் அதிகமாகச் சுரப்பது நல்லதல்ல. அது சுரக்கும் நேரத்தில் காபி குடித்தால் காபியில் உள்ள கேஃபின் வேதிப்பொருள் கார்ட்டிசாலின் சுரப்பு வீதத்தை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே அந்த நேரத்தில் காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் கார்ட்டிசால் சுரப்பு மிகக் குறைவாக இருக்கும், காலை 9.30-11.30 மணிக்குள்ளும், மாலை 1.30-5.00 மணிக்குள்ளும் காபி அருந்துவதால் சிக்கல் இல்லை என்று மில்லர் கூறியுள்ளார்.

அறிவியல்பூர்வமான ஆய்வு செய்து காபி அருந்தும் நேரத்தை அவர் சொல்லிவிட்டார். அதைக் கடைபிடிப்பதும் புறக்கணிப்பதும் நமது பாடு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in