உலகம் -700 ஆண்டுகளுக்குப் பின்னர்

உலகம் -700 ஆண்டுகளுக்குப் பின்னர்
Updated on
1 min read

உலகிலேயே அதிக விலை கொண்ட வீடியோ கேமாக உருவாகியிருக்கும் டெஸ்டினி, கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இது வீடியோ கேம்ஸ் துறையையே புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மாணவர்கள் நெருக்கடியாக சேர்ந்து வாழும் சிகாகோ குடியிருப்பு அறையில்தான் இந்த வீடியோ கேமுக்கான ஐடியா தோன்றியுள்ளது. ஜேசன் ஜோன்ஸ், அலெக்ஸ் செரோபியன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.

இரண்டு பேராகத் தொடங்கிய ‘பங்கி’ நிறுவனம் தற்போது ஐநூறு ஊழியர்களைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது. பங்கி தயாரித்துள்ள ‘டெஸ்டினி’ தான் அதிகபட்ச பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு ரூ.375 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹாலிவுட் படமான அவதாரைவிட இதன் பட்ஜெட் அதிகம். உலகிலேயே அதிக விலை கொண்டது.

இன்றிலிருந்து 700 ஆண்டுகளுக்குப் பிறகான கற்பனை உலகில் மனிதர்களுக்கும், மனிதகுலத்தை வேரறுக்க வரும் வேற்றுகிரக வாசிகளுக்கும் இடையில் நடக்கும் போர் தான் ‘டெஸ்டினி’. இந்த வீடியோ கேமை வாங்குவதற்கு முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துவிட்டது.

வீட்டுக் கணிப்பொறி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் ப்ளேஸ்டேஷன் என எல்லாவற்றிலும் விளையாடும் வடிவத்தில் இந்த வீடியோ கேம் சந்தையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2,250.

இந்த சயின்ஸ் ஃபிக் ஷன் வீடியோ கேமை விளையாடுபவர்கள் தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்து முப்பரிமாண வெளியில் பயணித்து வேற்றுக் கிரக வாசிகளைத் தேடிக் கொல்லும் அனுபவத்தை ‘நிஜமாக’ப் பெற முடியும்.

டெஸ்டினியை வடிவமைத்துள்ள டெரிக் கரோல், டெஸ்டினி வீடியோ கேமை இணையத் தொடர்பில் மட்டுமே விளையாட முடியும் என்பதே அதன் தனித்துவம் என்கிறார். டெஸ்டினியின் பிரபஞ்சத்துக்குள் எல்லாரும் சேர்ந்து இன்னொருவரின் விளையாட்டுடன் தொடர்புகொள்ள முடியும் என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in