

பிறரிடம் மிகவும் நட்பாக இருப்பதுகூட சில நேரம் பெரும் அவஸ்தைகளைக் கொடுக்கலாம் என்பது நண்பர் ஒருவரின் அனுபவத்திலிருந்து தெரியவந்தது. எந்த நண்பர் அவரிடம் கடன் கேட்டுவிடவில்லை. பிரச்சினை வேறு மாதிரி.
“அலுவலகத்தில் என்னை எல்லோருக்கும் பிடிக்கும். உயர் அதிகாரி என்ற போதிலும் நான் அவர்களிடம் கொஞ்சம் ஒட்டுதலோடு இருப்பேன். சொல்லப்போனால் இதன் காரணமாகவே எனக்கு நல்ல பெயர். என் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல; அக்கம் பக்கத்திலுள்ள மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும்கூட எனக்கு நண்பர்கள்தாம். இது எனக்குப் பெருமையான விஷயம்.
ஆனால், சங்கடம் என்னவென்றால் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தால் போதும், என்னிடம் வந்து பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பேசத் தொடங்கினால் வெகு நேரம் நீண்டுவிடுகிறது. அவரவரும் தன்னுடைய பிரச்சினையை என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் அலுவலக வேலைகளைக் குறித்த நேரத்துக்குள் செய்ய முடியாமல் போகிறது. என்ன செய்யலாம்?’’ என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.
நான் பதில் சொல்வதற்கு முன்னதாகவே இன்னொரு கோணத்தையும் பகிர்ந்துகொண்டார்.
“என்னால் அவர்களிடம் கண்டிப்பாக இருக்க முடியாது. அதாவது ‘அலுவலகப் பணிகளைச் செய்யும் நேரத்தில் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று என்னால் அவர்களிடம் கூற முடியாது’’ என்பதையும் குறிப்பிட்டார். அது அவரால் முடியாது என்பது எனக்கும் தெரியும். உடனே தோன்றிய ஓர் ஆலோசனையைச் சொன்னேன்.
“அப்படிப் பேச வருபவரைப் பார்த்துப் புன்னகைத்தவுடன் சட்டென்று கண்களை அவரிடமிருந்து திருப்பிவிடு. அதாவது, ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்து அவரைச் சந்தித்ததன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சட்டென்று உன் வேலையைத் தொடர்ந்து செய். அப்போது தானாகவே அவர்கள் உன்னிடம் வந்து பேசுவது குறைந்துவிடும்’’ என்றேன்.
சில நாட்கள் கடந்தன. “நீ கூறியதைச் செயல்படுத்தினேன். சிலரைப் பொறுத்தவரை பலன் இருந்தது. அவ்வளவுதான்’’ என்றார்.
அதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு அந்த நண்பனின் அலுவலகத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நிமிடங்கள் மட்டுமே அவனிடம் பேசிவிட்டு வெளியேறினேன்.
அடுத்த நாள் அவன் என் வீட்டுக்கு வந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டேன். “உன் பிரிவில் 30 பேர் வேலை செய்கிறார்கள். உன்னுடைய இருக்கை உன் பிரிவில் நுழையும் பகுதிக்கு நேர் எதிராக இருக்கிறது. உன் துறையில் இருக்கும் பிறரும், உன் துறையைத் தாண்டிச் செல்லும் மற்ற நபர்களும் உன்னை நேரடியாகப் பார்க்க முடியும். அதனால், நீ அவர்களைத் தற்செயலாகப் பார்ப்பதும், நட்பாகச் சிரிப்பதும் இயற்கை. பார்த்துச் சிரிக்கும்போது நாலு வார்த்தை பேசவில்லை என்றால் நன்றாக இருக்குமா?’’ என நினைத்து அவர்கள் உள்ளே நுழையலாம்’’ என்றேன்.
கூடவே ஒரு சின்னத் தீர்வையும் சொன்னேன். “உன் இருக்கையின் திசையை மாற்றிக்கொள். உன் அறையைத் தாண்டிச் செல்பவர்கள் உன்னை நேருக்கு நேர் பார்க்க முடியாதபடி செய்தால் பிரச்சினை ஓரளவு தீரும்’’ என்றேன்.
ஒரு மாதம் கழித்து சந்தித்தபோது “சிக்கல் பெருமளவு தீர்ந்துவிட்டது’’ என்றான்.
(மாற்றம் வரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com