

‘ஹலோ, பீட் ஆல் ஸ்போர்ட்ஸ் கம்பெனிங்களா?'
'ஆமாங்க, நீங்க?'
‘நான் பரம்ஜித் சிங், ராஞ்சியிலேர்ந்து பேசறேன்!'
இதைக் கேட்டதும், மறுமுனையில் ஒரு பழகிய சிரிப்பொலி. பிறகு, 'நீங்க முதலாளிகிட்ட பேசணும், அப்படித்தானே?'
‘ஆமாங்க' என்றார் பரம்ஜித். உடனே இணைப்பு கொடுக்கப்பட்டது.
ரமேஷ், சோமி இருவரும் சகோதரர்கள். லூதியானாவிலிருக்கும் BAS (Beat All Sports) நிறுவனத்தின் உரிமையாளர்கள். இவர்கள் தயாரிக்கும் கிரிக்கெட் மட்டைகளுக்கு இந்தியா முழுக்கப் பிரமாதமான வரவேற்பு இருந்தது.
ராஞ்சியிலிருந்து பரம்ஜித் சிங் என்ற இளைஞர் இந்த இரு சகோதரர்களையும் அடிக்கடி தொலைபேசியில் அழைத்தார். "எங்க ஊர்ல மஹின்னு ஒரு பிரமாதமான கிரிக்கெட் ப்ளேயர் இருக்கான்; ஆனா, அவனுக்குச் சரியான கிரிக்கெட் கிட் இல்லை. நீங்க அவனுக்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும்."
பெரிய நிறுவனங்கள் இளம் திறமையாளர்களுக்கு இதுபோன்ற உதவிகளைச் செய்வது வழக்கம்தான். ஆனால், ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி முன்பின் தெரியாத ஓர் இளைஞனுக்குப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் உபகரணங்களைக் கொடுக்க முடியுமா?
ரமேஷும் சோமியும் எவ்வளவுதான் பொறுமையாக இதை விளக்கிச் சொல்லி மறுத்தபோதும், பரம்ஜித் கேட்பதாகத் தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட்டாலும், சில நாள் கழித்து மறுபடி அழைப்பு வரும். மறுபடி அதே கோரிக்கை.
“சார், எங்க ஊர்ல...”
பரம்ஜித்தும் கிரிக்கெட் விளையாடுகிறவன்தான். ஆனால், மஹி அளவுக்கு இல்லை. அவன் கிரிக்கெட்டுக்காகவே பிறந்தவன், பிரமாதமான திறமைசாலி.
இத்தனைக்கும், மஹியிடம் முறையான கிரிக்கெட் உபகரணங்கள்கூட இல்லை. அவனுடைய ஏழைக் குடும்பத்தால் விலை உயர்ந்த மட்டைகளை வாங்கித் தர இயலாது. ஆகவே, அவன் கிடைப்பதை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்தான்.
அவ்வப்போது, தன்னிடம் சரியான கிரிக்கெட் உபகரணங்கள் இல்லை என்பதைச் சொல்லி வருந்துவான் மஹி. அவனுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் பரம்ஜித் கவலையுடன் தலையாட்டுவான்.
பரம்ஜித் ராஞ்சியில் விளையாட்டுப்பொருட்களை விற்கும் கடை ஒன்று வைத்திருந்தான். ஆனால், மஹிக்கு வேண்டிய தரமான பேட்கள் அவனிடம் இல்லை. அப்படியே இருந்தாலும், அதையெல்லாம் நண்பனுக்கு இலவசமாகத் தந்துவிட மனம் உண்டு, வசதி இல்லை.
எப்படியாவது மஹிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தான் பரம்ஜித். ஆனால், அதற்கான வழி தெரியவில்லை.
ஒரு நாள், பரம்ஜித்துடைய தந்தை அவனுக்கு திருபாய் அம்பானியைப் பற்றிச் சொன்னார். “அம்பானி முதன்முதலா தொழில் தொடங்கின நேரம். அவருக்கு ஒரு பெரிய தொகை கடனாகத் தேவைப்பட்டது, ஆனா, பதிலுக்கு அடமானம் வைக்க அவர்கிட்ட சொத்து எதுவும் இல்லை, வங்கிக்காரன் எதை நம்பிக் கடன் கொடுப்பான்?”
“ஆனாலும், அம்பானி சோர்ந்துபோகல; வங்கி அதிகாரிங்க கிட்ட பேசிப்பேசி நம்பிக்கையை வளர்த்தார். அதுக்கப்புறம், அடமானம் இல்லாமலே அவரை நம்பி அவங்க கடன் கொடுத்தாங்க!”
தந்தை சொன்னதைக் கேட்ட பிறகு, பரம்ஜித்துக்கு ஒரு புதிய நம்பிக்கை வந்தது. ‘BAS’ நிறுவனத்தைத் தொலைபேசியில் அழைத்து மஹிக்காக உதவி கேட்கத் தொடங்கினான். அவர்கள் மறுக்க மறுக்க, திரும்பத்திரும்ப அழைத்துக்கொண்டே இருந்தான். கேட்டுக்கொண்டே இருந்தான்.
இவனுடைய தொல்லை தாங்காமலோ என்னவோ, ‘BAS’ நிறுவனம் மஹிக்கு வேண்டிய கிரிக்கெட் உபகரணங்களைத் தருவதாக ஒப்புக்கொண்டது. “ஆனா, அதை அனுப்பற கட்டணத்தை நீங்கதான் தரணும்!”
பரம்ஜித்துக்கு அதுவே பெரிய தொகைதான். ஆனாலும் அவன் ஒப்புக்கொண்டான். எப்படியோ பணத்தைப் புரட்டி அந்தத் தொகையைச் செலுத்தினான்.
சில நாட்களில், மஹியின் கிரிக்கெட் உபகரணங்கள் வந்துசேர்ந்தன. பரம்ஜித்தின் தொடர்முயற்சிக்கு வெற்றி! இனி மஹி அரைகுறை மட்டைகளை வைத்துக்கொண்டு திணற வேண்டியதில்லை, அவனுக்கென்று சொந்தமாகப் பிரமாதமான தரத்தில் ஒரு கிட் வந்துவிட்டது!
உடனடியாக, மஹியைத் தன்னுடைய கடைக்கு அழைத்தான் பரம்ஜித். ஆனால், கிரிக்கெட் கிட் வந்திருக்கிற விஷயத்தைச் சொல்லவில்லை. சும்மா அரட்டையடிப்பதுபோல் பேச ஆரம்பித்தான்.
மஹி வேறென்ன பேசுவான்? சுற்றிச்சுற்றி அவர்கள் கிரிக்கெட்டைப் பற்றிதான் பேசினார்கள். நல்ல கிரிக்கெட் உபகரணங்கள் கிடைக்காமல் தான் படுகிற அவஸ்தையை மஹி விவரிக்க, பரம்ஜித் குறும்புச்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “மஹி, கொஞ்சம் எழுந்திரு” என்றான் பரம்ஜித்.
“என்ன விஷயம்?” என்றபடி குழப்பத்துடன் எழுந்தான் மஹி.
“இவ்ளோ நேரமா நீ உட்கார்ந்திருந்தியே, அந்த பெட்ஷீட்டுக்குக் கீழே என்ன இருக்குன்னு கொஞ்சம் பாரு!”
ஒன்றும் புரியாமல் அந்தப் படுக்கைவிரிப்பை நீக்கினான் மஹி. அதனடியில், அவன் இத்தனை நாளாகக் கனவு கண்டுகொண்டிருந்த கிரிக்கெட் உபகரணங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை நம்ப முடியாமல் தொட்டுப் பார்த்தான். இதெல்லாம் உண்மையா, கனவா என்றுகூட அவனுக்குப் புரியவில்லை.
முக்கியமாக, இது எப்படி பரம்ஜித்துக்குக் கிடைத்தது என்று மஹிக்குக் குழப்பம். தன் நண்பனிடம் அன்பும் அக்கறையும் ஏராளமாக உண்டு. இவ்வளவு பணம் இல்லையே.
“அதைப் பத்திப் பேசக் கூடாது, இனிமே இது உன்னோட கிட்!” என்றான் பரம்ஜித். “சரி, கிளம்பு, நான் கடையை மூடணும்!”
பெரு மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் கிட்டை எடுத்துக்கொண்டு நடந்தான் மஹி. ‘இனி அவனுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது’ என்று பெருமிதப்பட்டான் பரம்ஜித், இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த ‘மஹி’, இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி. கிரிக்கெட் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளெல்லாம் அவருடைய அதிரடி ஆட்டத்தைக் கவனித்துத் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்வதற்குமுன்பே அவருடைய திறமையை அடையாளம் கண்டவர் பரம்ஜித்.
“என் நண்பன் பிரமாதமான திறமைசாலி” என்று ஊரெல்லாம் சொன்னவர் பரம்ஜித் சிங்.
பரம்ஜித் சொன்னதைக் கேட்டு தோனி மீது நம்பிக்கை வைத்த BAS நிறுவனமும் அதற்கு நல்ல பலனைப் பெற்றது. “தோனி பிரபலமான பிறகு ‘BAS’ கிரிக்கெட் மட்டைகளுடைய விற்பனை இன்னும் அதிகரித்தது” என்கிறார் பரம்ஜித். “பல பெற்றோர், தங்கள் பிள்ளையும் தோனிபோல் வர வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்கு ‘BAS’ பேட்களை வாங்கித் தந்தார்கள்!'
“இந்த கிரிக்கெட் கிட்தான் தோனியைப் பெரிய ஆளாக்கியதா?” என்று சிலர் கேலிச்சிரிப்புடன் கேட்கக்கூடும். திறமையுள்ளவர் எந்த மட்டையை வைத்தும் விளையாடியிருப்பார். ஆனால், பதினைந்து வயதில் ஓர் இளைஞர் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு திறக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், பெரிய கிரிக்கெட் வீரர்களெல்லாம் பயன்படுத்துகிற அதே சாதனங்கள் தன்னிடமும் இருக்கின்றன என்ற உணர்வு அவருடைய தன்னம்பிக்கையை எப்படி அதிகரிக்கச்செய்திருக்கும் என்று யோசித்தால், அந்த கிரிக்கெட் கிட்டின் பங்களிப்பும் புரியும்!
ஒருவேளை, அன்றைக்கு பரம்ஜித்தின் தொடர்முயற்சிகள் பலனளித்திருக்காவிட்டால்?
அப்போதும், தனக்காக இப்படி ஊரெல்லாம் உதவி கேட்கிற ஒரு தோழனைச் சம்பாதித்திருக்கிறோம் என்ற எண்ணமே தோனிக்குப் பெரிய உத்வேகத்தைத் தந்திருக்கும். அவரை வேகமாக முன்னேற்றியிருக்கும். வெற்றியை நோக்கிய கடினமான பயணத்தில், இதுபோல் நம்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுடைய ஆதரவுதானே மிகப் பெரிய பலம்!
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com