Last Updated : 21 Sep, 2018 11:36 AM

 

Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM

வெல்லுவதோ இளமை 22: அந்த ஒரு நிமிடம்

சானியாவை நீச்சல் வகுப்பில் சேர்க்கவந்திருந்தார் நசீமா. அந்த நீச்சல் குளத்தின் அருகில் ஒரு டென்னிஸ் மைதானம் இருந்தது. அங்கு இந்திய அணியின் முன்னாள் டென்னிஸ் வீரர் ஸ்ரீகாந்த் குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சியளித்துக்கொண்டிருந்தார்.

சானியாவை டென்னிஸ் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று நசீமாவுக்கு எப்போதும் ஆசை. இந்த மைதானத்தைப் பார்த்ததும், ஆவலுடன் அங்கு சென்று விசாரித்தார்.

ஆறு வயதுக் குழந்தையான சானியாவைப் பார்த்ததுமே பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் நிராகரித்துவிட்டார். "ரொம்பச் சின்னப்பொண்ணு. இந்த வயசுல டென்னிஸ் விளையாடறது கஷ்டம். இன்னும் கொஞ்சநாள் கழிச்சு வாங்க, பார்க்கலாம்!"

இதைக் கேட்டதும் சானியாவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. காரணம், அவளுடைய தோழி சாமியாவுக்கு அதே பயிற்சி வகுப்பில் இடம் கிடைத்திருந்தது. ஆனால், சானியாவைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார் ஸ்ரீகாந்த்.

சாமியாவுடன் ஒப்பிடும்போது, சானியாவின் உயரம் குறைவு. அதனால்தானோ என்னவோ, ஸ்ரீகாந்துக்கு அவள் மீது நம்பிக்கை வரவில்லை.

ஆனால், நசீமாவுக்குத் தன் மகள் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவளுக்காகப் பயிற்சியாளருடன் சண்டைபோடத் தொடங்கிவிட்டார். "அவளால விளையாட முடியாதுன்னு நீங்களே தீர்மானிச்சா எப்படி? என் மகளுக்கு டென்னிஸ் சொல்லித் தரணும்னு நான் விரும்பறேன். நீங்க வேணாம்னு சொன்னா வேறொரு பயிற்சி வகுப்புக்கு அழைச்சுகிட்டுப் போய்டுவேன்."

சானியாவால் நன்கு விளையாட இயலும் என்று நசீமா திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். ஆகவே, ஸ்ரீகாந்துக்கு வேறு வழி தெரிய வில்லை. ‘ஒருதடவை விளையாடட்டும், பார்க்கலாம்' என்று ஒப்புக்கொண்டார்.

அந்த முதல் பந்தை சானியா நம்பிக்கையுடன் எதிர்கொண்டாள். முறையான பயிற்சி இல்லாவிட்டாலும், அவள் பந்தை அடித்தவிதம் ஸ்ரீகாந்துக்குப் பிடித்திருந்தது. அவளைத் தன்னுடைய வகுப்பில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானித்தார்.

அடுத்தடுத்த நாட்களில், சானியா அவரை இன்னும் வியப்பில் ஆழ்த்தினாள். அந்தச் சிறு உருவத்துக்குப் பொருந்தாத ஒரு வேகமும் வலிமையும் திறமையும் அவளுக்குள் இருந்தன. மிக விரைவில், அந்த டென்னிஸ் வகுப்பிலிருந்த மற்ற எல்லாரையும்விடத் திறமையாக விளையாடத் தொடங்கிவிட்டாள்.

இதைப் பார்த்த ஸ்ரீகாந்த் மகிழ்ந்தார். அவளுக்கு இன்னும் கடினமான பயிற்சிகளைத் தந்தார். தொழில்முறைப் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவளைத் தயார்செய்தார்.

சானியாவுக்கும் டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. நீச்சல், ஸ்கேட்டிங் போன்றவற்றிலும் அவள் ஆர்வத்துடன் ஈடுபட்டாள். ஆனால், அவற்றையெல்லாம்விட டென்னிஸ்தான் அவளை வெகுவாக ஈர்த்தது. அதனை இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டாள். ஒவ்வொரு நுணுக்கத்தையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டாள்.

அதே நேரம், மற்ற விளையாட்டுகளையும் அவள் மொத்தமாக நிறுத்திவிடவில்லை. குறிப்பாக, ஸ்கேட்டிங்கிலும் அவள் சிறந்து விளங்கினாள். மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் அவளைச் சேர்க்கலாமா என்றுகூட நசீமா யோசித்துக் கொண்டிருந்தார். இதனால், அவ்வப்போது ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சானியா டென்னிஸ் வகுப்புகளிலிருந்து விடுமுறை எடுக்க வேண்டியிருந்தது.

ஒரு நாள், ஸ்கேட்டிங் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்த சானியா திடீரென்று கீழே விழுந்து மயக்கமாகிவிட்டாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த நசீமா பதறிப்போனார். ஓடிச்சென்று மகளைத் தூக்க முயன்றார்.

சில விநாடிகள்தாம், சானியா விழித்தெழுந்துவிட்டாள். ஆனால், நசீமாவின் பதற்றம் குறையவில்லை. 'இது ஆபத்தான விளையாட்டு' என்று அவருக்குத் தோன்றியது. “இனிமே நீ ஸ்கேட்டிங் விளையாட வேண்டாம்” எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

ஒருவிதத்தில் இதுவும் நல்லதுதான். ஸ்கேட்டிங் பயிற்சிகள் இல்லாததால், சானியாவால் முழுக்க முழுக்க டென்னிஸில் கவனம்செலுத்த முடிந்தது. நன்கு பயிற்சிபெற்றுப் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெல்லத் தொடங்கினாள்.

விளையாட்டைப் போலவே, படிப்பிலும் சானியா முதலிடத்தில் இருந்தாள். பள்ளியில் எந்நேரமும் பாடப்புத்தகத்தையோ வேறொரு புத்தகத்தையோ புரட்டியபடிதான் இருப்பாள். எல்லாத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களை வாங்குவாள்.

ஆனால், விளையாட்டுக்காக அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்கிய பிறகு, சானியாவின் படிப்பில் சுணக்கம் ஏற்பட்டது. டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அவள் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுக்க வேண்டியிருந்தது. இதனால், வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்ல இயலவில்லை, பாடங்களைப் பின்பற்ற இயலவில்லை. இது அவளுக்குப் பிடிக்கவில்லை. விளையாட்டுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு படிப்பில் அதிகக் கவனம் செலுத்தலாமே என்று யோசிக்கத் தொடங்கினாள்.

இதைக் கேள்விப்பட்ட சானியாவின் பள்ளித் தலைமையாசிரியர் அவளை அழைத்துப் பேசினார். “டென்னிஸ் திறமை எல்லாருக்கும் சாதாரணமாக் கிடைச்சுடாது. உனக்கு அந்த அரிய வாய்ப்பு வந்திருக்கு. அதை வீணடிக்காதே. தொடர்ந்து போட்டிகள்ல கலந்துக்கோ” என்று ஊக்கப்படுத்தினார்.

அவர் தந்த ஊக்கத்தால், சானியா இன்னும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். 14 வயதுக்குட்பட்ட டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தேசியக் கோப்பையை வென்றார். அதன்பிறகு, டென்னிஸே அவருடைய வாழ்க்கையாகிவிட்டது.

ilamai 2jpg

சிறு வயதில், சானியாவின் உறவுக்காரப் பிள்ளைகளெல்லாம் அவளைப் பார்த்துப் பொறாமைப்படு வார்களாம். “உனக்கென்ன? ஜாலியாப் போய் விளையாடிகிட்டிருக்கே, நாங்கதான் கஷ்டப்பட்டுப் படிக்கறோம்” என்பார்களாம்.

அவர்களுக்குப் புரியாத விஷயம், சானியா ‘ஜாலி’க்காக விளையாடவில்லை. புத்தகங்கள், தேர்வுகள், வினாக்கள், விடைகளுக்குப் பதிலாக அவர் மைதானத்தில் டென்னிஸ் பந்துகள், ராக்கெட்களுடன் கடினமாக உழைக்கிறார். இதுவா அதுவா என்ற கேள்வி வந்தபோது, அவரே விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அது.

உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் சிறுவயதில் இதுபோன்ற குழப்பங்களைச் சந்தித்திருக்கிறார்கள், டென்னிஸா, கிரிக்கெட்டா, கால்பந்தா, சதுரங்கமா, நீச்சலா, குத்துச்சண்டையா, ஓட்டமா, ஹாக்கியா என்பதுபோன்ற கடினமான கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். ‘இவை இரண்டுமே எனக்குப் பிடித்திருக்கிறதே. இதில் எதைத் தேர்ந்தெடுத்தால் நான் நன்றாக வர இயலும்?' என்று திகைத்திருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, 'நல்லாப் படிச்சாதான் மேல வரமுடியும், விளையாட்டெல்லாம் எதுக்கு?' என்ற சமூகத்தின் கேள்வியையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘விளையாடுகிற எல்லாரும் பெரிய ஆள் ஆக முடியுமா? பேசாம படிப்பைக் கவனி, நல்ல மதிப்பெண் வாங்கு, வேலைக்குப் போ, அப்புறமா ஓய்வுநேரத்துல விளையாடிக்கலாம்' என்கிறது உலகம்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் தாண்டி, தன் மனத்துக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் முழுக் கவனத்துடன் ஈடுபட்டதால்தான் அவர்கள் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். நீச்சலா, டென்னிஸா, ஸ்கேட்டிங்கா, படிப்பா என்ற கேள்விகளைச் சந்தித்து, அவற்றில் ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு, டென்னிஸில் மட்டும் மொத்த உழைப்பையும் கொட்டியதால்தான், சானியா மிர்ஸா இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாக முடிந்தது. இரட்டையர் டென்னிஸில் பல கோப்பைகள், 'கிராண்ட்ஸ்லாம்' கெளரவங்களை வெல்ல முடிந்தது.

ஒருவர் என்னதான் திறமையாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல விஷயங்களில் ஈடுபடுகிறபோது, அந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் அவருடைய மூளையின் ஒரு பங்குக் கவனத்தைக் கோருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைமட்டும் தேர்ந்தெடுத்து, முக்கியத்துவமில்லாத மற்றவற்றை விலக்கும்போது, மொத்தக் கவனமும் ஒரே இடத்தில் குவிகிறது. உழைப்பு பல மடங்காகிறது, வெற்றி உறுதியாகிறது

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x