

வாட்ஸ்அப்பின் மறைக்குறியீடு செய்யப்பட்ட செய்தித்தளத்தைக் (encrypted message platform) கண்காணிக்க அனுமதிக்குமாறு இந்திய அரசு அந்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தவறான தகவல்களால் கடந்த ஆண்டு, இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு, நாட்டில் நடைபெற்ற கும்பல் வன்முறைச் சம்பவங்களை இந்திய அரசு காரணமாக காட்டியுள்ளது.
ஆனால், இந்திய அரசின் இந்தக் கோரிக்கையைத் தற்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது. வாட்ஸ்அப் செய்திகள் மறைக்குறியீடாக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவற்றைப் பின்தொடர முடியாது என்று தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் டிஜிட்டல் கைரேகை வசதியை அறிமுகப்படுத்துமாறு இந்திய அரசு அந்நிறுவனத்திடம் கேட்டுகொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் கைரேகைகள், மறைக்குறியீடாக்கத்தை உடைக்காமல் செய்திகளைப் பின்தொடர வழிவகுக்கும்.
செய்தியை யார் அனுப்புகிறார், யார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டுப் பகிர்கிறார் என்பனபோன்ற தகவல்கள் தங்களுக்குத் தெரிய வேண்டுமென்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் போன்ற செயலிகளைக் கண்காணிக்க அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியது. சிங்கப்பூரும் போலிச்செய்திகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் கைரேகையை அறிமுகப்படுத்துமாறு இந்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் வலியுறுத்திவருகிறது. ஆனால், இந்த டிஜிட்டல் கைரேகை வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தில் ஊடுருவுவதில் தொடங்கி, பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.