

இளைஞர்கள் வாழ்வில் சினிமாப் பாடல்களுக்குப் பிரதான பங்கு இருக்கிறது. அவர்கள் உணர்வோடும் உயிரோடும் ஒட்டி உறவாடுபவையாக அப்பாடல்கள் உள்ளன. அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நாட்களில் அவர்களது மகிழ்ச்சியை அதிகரிப்பதில் அல்லது தனிமை எண்ணங்களை அகற்றுவதில் பாடல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் எல்.பி. ரெக்கார்டுகள், அதைத் தொடர்ந்து ஆடியோ கேஸட்டுகள், சிடிக்கள், இந்த வளர்ச்சி அதிவேகம் எடுத்தது எம்பி 3யின் வருகைக்குப் பின்னரே. ஒரு சிறிய தகட்டில் நூற்றைம்பது பாடல்கள் என்ற தொழில்நுட்பம் காதில் தேன் பாய்ச்சியது. பெரிய பாடல்களுக்கு எல்.பி. ரெக்கார்டைத் திருப்பிப்போட வேண்டும் என்ற செய்தியே இந்தத் தலைமுறையினருக்குப் புதிராக இருக்கும்.
இப்போதெல்லாம் மெமரி கார்டு என்னும் மந்திரத் தகட்டில் ஏராளமான பாடல்கள் மாயமாய் மறைந்து கிடக்கின்றன. தேன் குரல்களைத் தேக்கிவைத்திருக்கும் அந்தச் சிறிய மந்திரத் தகட்டை மொபைலில் பொருத்திவிட்டால் போதும், பொழுது போவதே தெரியாமல் பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
பஸ்ஸிலோ ட்ரெயினிலோ பாருங்கள். பத்துக்கு ஐந்து பேர் காதில் இயர் ஃபோன் செருகப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான பாட்டு அவர்களை இன்று தாலாட்டிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட ரேடியோ அதன் அந்திமக் காலத்தை நெருங்கிய வேளையில் எஃப். எம் மூலமாக டெக்னாலஜி அதை உயிர்ப் பித்துவிட்டது. பித்துப் பிடித்தது போல் பாடல்களைக் கேட்டு மயங்குகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகள்கூடப் பாடல்களுக்கு அடிமையாகவே உள்ளனர்.
என்னவென்றே புரியாமல் எல்லா வரிகளையும் குழந்தைகள் சத்தமாகப் பாடுகிறார்கள். தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர்களுக்குத் தனி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வெற்றியாளர்களைப் பார்வையாளர்களே தங்கள் மொபைல் மெசேஜ் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சேனல் நிகழ்ச்சிக்கு ஆறு ரூபாய், ஏழு ரூபாய் செலவில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது பற்றி அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை பாடல்களில் அவர்கள் எதையோ கண்டடைகிறார்கள். பாடல் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்கள் கடவுளைக் கண்டது போல் அரற்றுகிறார்கள்; அழுது புலம்புகிறார்கள், உணர்ச்சிமயமான சூழல் அரங்கை மட்டுமல்ல தொலைக்காட்சிகள் வழியாக அநேக தமிழ்க் குடும்பங்களின் இளைஞர்களையும் அரவணைத்துக்கொள்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது பாட்டு மீதான நமது மோகம் தீரவே தீராது என்றே தோன்றுகிறது.