

ஆ
ண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘என் மகன் மகிழ்வன்’ என்ற படம் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது. ஆண் ஓரின ஈர்ப்பு குறித்து தமிழில் எடுக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் இது. சமூக அக்கறை மிகுந்த குறும்படங்களை இயக்கிய லோகேஷ் குமார், இந்தப் படத்தின் மூலம் இளம் இயக்குநராகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
மெல்போர்னில் நடைபெற்ற இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், நியூயார்க்கில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல், கொல்கத்தா இண்டர்நேஷனல் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் மற்றும் வீடியோ ஃபெஸ்டிவல், கோவா ஃபிலிம் பஜார், சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, ஹைதராபாத் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், க்யூபிலிக்ஸ் பிலடெல்பியா எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல் என இதுவரை 7 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என் மகன் மகிழ்வன்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. விரைவில் புனேவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கிறது.
எல்லா வகையான திரைப்படங்களும் ஹைதராபாத் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் போட்டியிட்ட நிலையில், இப்படத்துக்கு விருது கிடைத்திருப்பது ஆச்சரியத்தையும் படக் குழுவினருக்கு மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது.
“இந்தத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதுமிருந்து பல்வேறு படங்கள் போட்டியிட்டன. அதில், எங்கள் படத்துக்குச் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்திருப்பது ஆச்சரியம்தான். இது சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம். இதற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இந்த விருது அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது” என்கிறார் இயக்குநர் லோகேஷ் குமார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி, ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம். ‘இது இயற்கைக்கு முரணானது’, ‘ஓரின ஈர்ப்பு என்பது ஒரு நோய்’ என்றே பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுக்கும் தைரியம் எப்படி வந்தது என லோகேஷிடம் கேட்டோம்.
“ஓரின ஈர்ப்பு என்பது தனிமனித உரிமை. அதைத் தவறென்று சட்டம் சொல்வது வருத்தமான விஷயம்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது போடப்பட்ட சட்டம் இது. தற்போது அவர்களே இதைப் பின்பற்றுவதில்லை. ஆனால், அவர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும் அவர்கள் போட்ட சட்டத்தையே நாம் பின்பற்றுவது நகைப்புக்குரியதுதான்.
எல்.ஜி.பி.டி. என்று சொல்லக்கூடிய பாலினச் சிறுபான்மையினரிடம் பழகிப் பார்த்தால், அவர்களுடைய வலியை உணர்ந்துகொள்ள முடியும். அந்த வலியை எல்லோரும் உணர வேண்டும், அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தப் படத்துக்கான தூண்டுதல்” என்கிறார் லோகேஷ்.
இதுபோன்ற கதைகளைப் பெரும்பாலும் ஆவணப் படமாகத்தான் எடுப்பார்கள். லோகேஷும் ஆரம்பத்தில் இதைக் குறும்படமாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அப்படி எடுத்தால் பரவலான மக்களிடம் சென்று சேருமா என்ற சந்தேகம் வரவே அதையே முழுநீளத் திரைப்படமாகப் பின்னர் மாற்றியிருக்கிறார் லோகேஷ். அத்துடன், இதைப் பற்றி நிறைய ஆவணப் படங்கள் ஏற்கெனவே வந்துவிட்டதால், பார்வையாளர்களுக்குப் புதுவித அனுபவத்தைத் தரும் முயற்சியாகவும் முழுநீளத் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒரு கட்கூட சொல்லாமல் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்திருக்கிறது சென்சார் போர்டு.
“எங்களுக்கே அது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால், சென்சார் போர்டைப் பற்றி நன்கு தெரிந்ததால், சென்சாருக்குப் போவதற்கு முன்பே நானே சில காட்சிகளை நீக்கிவிட்டேன். ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம். எனவே, அதற்கேற்றபடி எடுத்ததால் சென்சாரில் கட் கொடுக்க வேண்டிய வேலை இல்லாமல் போனது” என்று ரகசியத்தை உடைக்கிறார் லோகேஷ்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘என் மகன் மகிழ்வன்’ திரையிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த விஷயம் புதியது என்பதால், அவர்களிடமிருந்து என்ன எதிர்வினை வரப்போகிறது எனப் பயந்திருக்கிறார்கள் படக் குழுவினர். படம் பார்த்தவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருக்கவே, படக் குழுவினருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. ஓரின ஈர்ப்பையும் தாண்டி, அம்மா - மகனுக்கு இடையேயான பாசம்தான் இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். எனவே, பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே படக் குழுவினரின் ஆசை, எண்ணம், குறிக்கோள் எல்லாம்!