

இ
ளைஞர்களது பழக்கங்களில் சுவிங்கம் மெல்லுவதும் ஒன்று. சுவிங்கத்தின் மணமும் ருசியும் இருக்கும்வரை வாயில் போட்டு மென்றுவிட்டு பிறகு அதைத் துப்பிவிடுவது அவர்களது வாடிக்கை. அப்படித் தூக்கியெறியப்படும் சுவிங்கத்தைக் கை, காலில் ஒட்டிக்கொண்டால், அதை அகற்ற படாதபாடுபட வேண்டியிருக்கும். ஆனால், பொது இடங்களில் இப்படி வீசப்படும் சுவிங்கத்திலிருந்து ஷூ, காலணிகளின் அடிப்பாகம், பந்துபோல வடிவமைக்கப்பட்ட ‘Gum drop’ குப்பைத் தொட்டி ஆகியவற்றை மறுசுழற்சி மூலம் உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த அன்னா புல்லாஸ்.
பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி படிப்பில் பட்டம் பெற்றவர் அன்னா. ஒரு நாள் பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது சாலையில் ஏராளமான சுவிங்கம் வீசப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். சாலையிலிருந்த சுவிங்கத்தைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவந்து, இதை மறுசுழற்சி செய்ய முடியுமா என இணையங்களில் மூழ்கியிருக்கிறார். ஆனால், சுவிங்கம்மை மறுசுழற்சி செய்து பயன்படுத்த எந்த வழியும் நடைமுறையில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். இதன் காரணமாகத் தன்னுடைய முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டில் சுவிங்கத்தை மறுசுழற்சி செய்வது குறித்து புராஜெக்டை மேற்கொள்ள அன்னா முடிவெடுத்தார்.
இதன்பின்னர் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு சுவிங்கத்தில் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து பயன்படுத்தி அதன்மூலம் சிறிய வடிவிலான ‘Gum Drop’ என்ற குப்பைத் தொட்டியை அன்னா உருவாக்கினார். சுவிங்கத்தை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்ற அவரது முயற்சிக்குப் பாராட்டுகள் குவிந்தன.
சுவிங்கத்தை அதிகம் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் இங்கிலாந்துவாசிகள். இதனால் பயன்படுத்தப்பட்ட சுவிங்கம் சாலைகளில் வீசப்படுவதும் அங்கு அதிகம். இவற்றைச் சுத்தப்படுத்த மட்டும் அந்நாட்டு அரசு ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை செலவு செய்கிறது. தற்போது அன்னா உருவாக்கிய ‘கம் டிராப்’ குப்பைத் தொட்டியை லண்டன் பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக அன்னா வைத்துள்ளார். ‘கம் டிராப்’ குப்பைத் தொட்டியை வைத்த பிறகு பல்கலைக்கழகச் சாலைகளில் சுவிங்கம் வீசப்படுவது 46 சதவீதம் குறைந்திருக்கிறது.
இதையடுத்து ‘Gum tech’ என்ற பெயரில் சுவிங்கத்தை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தைச் சொந்தமாக தொடங்கிய அன்னா, இங்கிலாந்தில் பூங்காக்கள், சாலையோர மின் கம்பங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், மக்கள் கூடுமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் ‘கம் டிராப்’ குப்பைத் தொட்டியை வைத்துள்ளார். இந்தக் குப்பை தொட்டிகளில் போடப்படும் சுவிங்கத்தைச் சேகரித்து மறுசுழற்சி செய்து அழகு சாதனப் பொருட்களை வைக்கும் மேக்கப் செட், காலணிகள், காபி கப், நாய்களுக்கு உணவு வைக்க பயன்படுத்தப்படும் தட்டுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார் அன்னா.
தற்போது உலக இளம் தொழில்முனைவோர் பட்டியலிலும் அன்னாவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. தூக்கியெறிப்படும் சுவிங்கத்தை வைத்து இவர் தொழில் செய்தாலும், மக்கள் அதிக அளவு சுவிங்கம் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரசாரம் செய்துவருகிறார்.