

“ப
ல நேரம் உங்களை நீங்களே கடுமையாக விமர்சித்துக்கொள்கிறீர்கள். ஆனால், உங்களையும் கொஞ்சம் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் அற்புதமானவர்” என்பது போன்ற மனத்துக்கு நம்பிக்கை அளிக்கும் மேற்கோள்களை அனைவரிடமும் பகிர்ந்துவருகிறது சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான ‘லோன்பேக்’ (LonePack). சமியா நஸிம், எஸ். சித்தார்த், ஹெச். நவீன் ஆகிய இளைஞர்கள் மூவர் சேர்ந்து மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்பை 2016-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பலவிதமான வழிகளில் மனநலம் பற்றிய விழிப்புணர்வை இவர்கள் ஏற்படுத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த மார்ச் மாதத்தில் ‘லோன்பேக் லெட்டர்ஸ்’ (LonePack Letters) என்ற பிரச்சாரத்தை இவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் ஆகியோரிடம் கடிதங்கள், கவிதைகள், சித்திரங்களைச் சேகரிக்கும் ‘லோன்பேக்’ குழுவினர், மக்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதைப் படித்தவுடன் படிப்பவரின் முகத்தில் புன்னகை மலர வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இவர்கள் கடிதங்களுடன் சேர்த்து தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய மேற்கோள் அட்டைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
2017-ம் ஆண்டு சென்னையில் டி.ஏ.வி. குழுமப் பள்ளிகள், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சைக்ளோ கஃபே, சத்யம் சினிமாஸ், எஸ்எஸ்என் கல்லூரி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த ‘லோன்பேக் லெட்டர்ஸ்’ பிரச்சாரத்தை, இந்த ஆண்டு சென்னையுடன் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு 6,000 பேரைச் சென்றடையும் இந்தப் பிரச்சாரம், இந்த ஆண்டு 12,000 பேரைச் சென்றடையம் என்று நம்புவதாகக் கூறுகின்றனர் இந்தக் குழுவினர்.
“நாங்கள் மூவரும் கல்லூரியில் படிக்கும்போது, மனநலனைப் பற்றி நமது சமூகத்தில் நிலவும் கற்பிதங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஏதொவொரு விதத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவே விரும்புவார்கள். அவர்கள் தனியாக இந்தக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தும்விதமாகத்தான் ‘லோன்பேக்’ என்ற பெயரை எங்கள் அமைப்புக்கு வைத்தோம்.
உடல்நலம் பாதிக்கப்படும்போது நம்மில் யாரும் அதை அவமானமாக நினைப்பதில்லை. அதேபோல, மனநலம் பாதிக்கப்பட்டாலும் எந்த அவமானமும் அதில் இல்லை என்பதை உணரவைக்கும் நோக்கத்தில்தான் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ‘லோன்பேக்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சமியா நசிம்.
22 வயதாகும் இவர், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணிநேரம் போக மீதி நேரத்திலும் வார இறுதியிலும் ‘லோன்பேக்’ தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். இவரைப் போலவே இவருடைய நண்பர்கள் இருவரும் பணிபுரிந்துகொண்டே இந்த அமைப்பின் பணிகளைத் தொடர்கின்றனர்.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ‘வால் ஆஃப் பாஸிட்டிவிட்டி’, (Wall of Positivity) ‘சேவ் தி வேல்’ (Save the Whale) போன்ற பிரச்சாரங்களையும் இவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அத்துடன், ‘லோன்பேக் படி’ (LonePack Buddy) என்ற திட்டத்தையும் செயல்படுத்திவருகிறார்கள்.
“மனத்தில் உள்ள பாரத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த ‘லோன்பேக் பட்டி’யை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள்தான் ‘லோன்பேக் பட்டி’யாகச் செயல்படுகிறார்கள். இதில் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்பவர், கேட்பவர் என இருவரின் அடையாளமும் பாதுகாக்கப்படுகிறது.
ஏனென்றால், பெரும்பாலும் ஆன்லைனில்தான் இவர்களின் உரையாடல் நிகழும். ஒருவேளை, ‘லோன்பேக் பட்டி’யிடம் பேசுபவருக்கு உண்மையிலேயே மனநல நிபுணர்களின் உதவி தேவைபட்டால், அவர்களுக்கு அதைப் புரியவைப்போம். இந்த உரையாடலில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மனநலம் சார்ந்த அடிப்படையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது” என்கிறார் சமியா நசிம்.
‘லோன்பேக்’ குழுவினருடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட நினைப்பவர்கள் ‘contact@lonepack.org’ என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். ‘லோன்பேக் லெட்டர்ஸ்’ பிரச்சாரத்தில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் டிஜிட்டல் கடிதங்களை ‘லோன்பேக்’ குழுவினருக்கு அனுப்பலாம்.
மேலும் தகவல்களுக்கு: FACEBOOK.COM/LONEPACK