

மு
துகலை முடித்தவுடன், யூஜிசி ஜே.ஆர்.ஃஎப். நிதிநல்கை பெறும் முழுநேர முனைவர் பட்ட மாணவனாக இருந்த நான், 1996-ல் என் இருபத்து நான்கு வயதிலேயே அரசுக் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக ஆகிவிட்டேன்.
இளம் வயதில் பேராசிரியராவதில் பல நன்மைகள் உண்டு. தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கலாம். சமகாலத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ளலாம். என் பணியின் ஆரம்பக் காலத்தில் நான் ஒரு மாணவன் என்ற நினைவிலேயே வகுப்பெடுத்தேன். என் மாணவர்களுக்கும் எனக்கும் ஆறு, ஏழாண்டுகள் இடைவெளியே இருந்ததால், அவர்களுடன் என்னால் உற்சாகமாகக் கலந்துரையாடவும் நெருக்கமாகப் பழகவும் முடிந்தது. அரசுக் கல்லூரிப் பணி என்பதால், பெரும்பாலும் அடித்தட்டு ஏழை எளியவர்களே என் மாணவர்களாக இருந்தார்கள்.
திருவாரூக்கு அருகில் பேருந்துகூட வராத ஓர் உள் கிராமத்தில், உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்புவரை வெறும் தரையில் அமர்ந்து படித்தவன் நான். இந்த அனுபவத்தால், நேர்த்தியற்ற ஆடைகளோடும் பதற்றமான உடல்மொழியோடும் கல்லூரிக்கு வரும் மாணவர்களிடம் என் வளர்இளம் பருவத்தையே நான் தரிசித்தேன்.
1996-2001வரை திருத்தணியில் பணியாற்றிய நான், 2001 முதல் இன்று வரை நந்தனம் அரசுக் கல்லூரியில் இருக்கிறேன். இந்த 22 ஆண்டுப் பணியில், பல வித்தியாசமான தகப்பன் சாமிகளையே என் மாணவர்களாக எதிர்கொண்டிருக்கிறேன். மாணவர்கள் ஏதும் அறியாதவர்கள், பேராசிரியர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற இறுமாப்புக்குச் சாவு மணியடித்தவர்களுள் இருவரைப் பற்றி இப்போது நினைத்தாலும் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன்.
அந்த இருவரில் ஒருவர் தனசேகர். இவர் இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவராக ஐந்தாண்டுகள் என்னிடம் படித்தார். மற்றொருவர் அரவிந்த். இளங்கலையை வேறு கல்லூரியில் படித்த இவர், நந்தனம் கல்லூரிக்கு முதுகலைத் தமிழ் படிக்க வந்தவர். இவர்கள் இருவரும் முதுகலையில் ஒரே வகுப்பில் படித்தார்கள். சர்ச்சில் வாட்ச்மேனாய் பணியிலிருந்த தனசேகரின் அப்பாவும் வீட்டு வேலை செய்த அரவிந்தின் அம்மாவும் தன் மகன்களைத் தீவிரமாக நேசித்தபோதிலும், அவர்களது மேற்படிப்புக்குப் பொருளாதாரரீதியாக உதவும் நிலையில் இருவருமேயில்லை.
நன்றாகப் படிக்கக்கூடிய இந்த இரண்டு மாணவர்களுக்கு துறைப் பேராசிரியர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டினர். ஆனாலும், அவர்கள் அதை ஏற்கவில்லை. ஒருவர் கூரியர் பையனாகவும், மற்றவர் தமிழ் தட்டச்சு அடித்தும் தம் படிப்புச் செலவைப் பார்த்துக்கொண்டார்கள். இந்த இருவரின் சிறப்பு இது மட்டுமல்ல, இரு மாணவர்களின் வகுப்புக்குப் படிக்காமல் எந்த ஆசிரியரும் போகவும் முடியாது.
ஆசிரியர் நடத்தும் பாடம், அது சங்க இலக்கியமோ தொல்காப்பியமோ சிலப்பதிகாரமோ பாரதியோ நாவலோ சிறுகதையோ எதுவானாலும், அதைக் கரைத்துக் குடித்துவிட்டு இருவரும் தயாராக வருவார்கள். கல்லூரி வகுப்புக்கு வருவது, வருவாய்க்காகப் பகுதி நேரப் பணிக்குச் செல்வது இவற்றுக்கிடையே அவர்கள் இருவருக்கும் எப்படித்தான் படிக்க நேரம் கிடைக்கிறது என வியப்பாக இருக்கும். வகுப்பில் பாடம் நடத்திய பிறகு, பேராசிரியர்களைக் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். அவை வெறும் மேலோட்டமான கேள்விகளாக இருக்காது.
ஆழ்ந்த சிந்தனையையும் பாடம் தொடர்பான மீள்வாசிப்பையும் கோருபவையாக இருக்கும். இவர்களுக்குப் பயந்து வகுப்பைச் சிலர் மாற்றியது உண்டு. இடதுசாரிச் சிந்தனையின் இளம்பருவக் கோளாறுகளுக்குப் பதிலாக, அதன் ஆரோக்கியமான அம்சங்களுடன் இவர்கள் வினா எழுப்புவார்கள்.
அந்த அளவுக்கு உள்வாங்கி கேள்வி எழுப்புவதை அறியாமல், ஆசிரியர் என்ற அதிகாரத்தை அவன் மீது பிரயோகிக்கப் பார்த்தால், மாணவர்கள் நடுவே மூக்கு உடைபட வேண்டியிருக்கும். ‘பெரு நம்பிக்கையைப் பேசுவதே பேரிலக்கியங்களின் சாரம்’ என வகுப்பெடுத்தால், “அப்படியானால் ‘நாளை மற்றுமொரு நாளே’” எழுதிய ஜி.நாகராஜனைப் படைப்பாளியாக நீங்கள் ஏற்க மாட்டிர்களா?” எனக் கேட்டுச் சிரிப்பான் அரவிந்த். நவீனத்துவத்தைச் செவ்வியலுடன் இணைப்பதிலுள்ள இடர்பாடுகளைப் பற்றி விரிவாக விவாதித்துத்தான் அவனிடமிருந்து தப்ப முடியும்.
இவர்கள் படித்த வகுப்பின் அனைத்து மாணவர்களும் இவர்களால் உத்வேகம் பெற்றார்கள் என்று சொல்வது சற்றும் மிகையில்லாத உண்மை. இவர்கள் வகுப்புக்குச் சென்ற ஆசிரியர்கள் வகுப்பு முடிந்து செல்கையில், “தாம் படித்தது போதாது, இன்னும் ஆழமாகக் கற்க வேண்டும்” என்ற உணர்வுடன்தான் போவார்கள். ஆனால், இவர்கள் வேறுவேறு அரசியல் நோக்குடையவர்கள். இருவருமே தம்முள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். கருத்துச்சண்டைதான்; இவரை அவர், ‘அராஜகவாதி’ என்பார். அவரை இவர் ‘புனைவுவாதி’ என்பார். இவர்கள் முதுகலை படித்த அந்த இரண்டு வருடங்களைத்தான் என் ஆசிரிய வாழ்வின் சிறந்த காலமாக இப்போதும் நினைத்துக் கொள்வேன்.
இப்போது தனசேகர், ‘க.நா.சுப்ரமண்யம்’ பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறான். ஜே.ஆர்.ஃஎப். பாஸ் செய்துவிட்டு, ஆய்வுக்குத் தலைப்புத் தேடிக்கொண்டிருக்கிறான் அரவிந்த் (தற் சமயம் திரைத்துறையில் உதவி இயக்குநராகவும் பணி செய்துகொண்டிருக்கிறான்).
கல்வி என்பது ஒருகை ஓசையல்ல; ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து புரிந்துகொள்வதும், பின் ஐயமறப் பகிர்ந்துகொள்வதுமாகப் பாட வேளைகள் உருமாற வேண்டும். இப்படிப்பட்ட கல்விதான் கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் மகிழ்வளிக்கும். இத்தகைய மகிழ்ச்சியை என் வாழ்வில் சாத்தியப்படுத்தியதற்காக, இருவருக்கும் என் நன்றி. இவர்களுக்குக் கற்பித்த காலத்தில், இவர்களிடமிருந்தும் நான் கற்றுள்ளேன். எனவே, இவர்கள் என் குருநாதர்கள். நான் இவர்களின் சீடன்.
கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு ஆடவர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), நந்தனம், சென்னை.