

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று முறையிட்டான், “என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை குருவே. கோபத்திலிருந்து மீள ஏதாவது வழி சொல்லுங்கள்.”
குரு அவனிடம்,“கோபம் கோபம் என்கிறாயே, அந்த உனது கோபத்தை எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். கோபத்தை எப்படிக் காட்டுவது என சீடனுக்குக் குழப்பமும் ஆச்சரியமும். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது” என்று பதில் சொன்னான்.
குரு அதற்குப் பொறுமையாக, “அதனால் பிரச்சினை இல்லை. உனக்குக் கோபம் வரும்போது என்னிடம் வந்து காட்டினால் போதும்” என்று மறுமொழி தந்தார்.
சீடனுக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது, “கோபம் வந்தவுடன் என்னால் கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாதே” எனக் கத்தினான்.
மேலும் “எதிர்பாராத வேளையில் எனக்குக் கோபம் வரும். அப்போது உடனடியாக உங்களிடம் வந்து காட்டுவதற்குள் நிச்சயமாக அது மறைந்தே போய்விடும்” என்றான் சீடன்.
“நீ சொல்கிறபடி பார்த்தால் கோபம் என்பது உனது இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு.
“கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும்பட்சத்தில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது இருக்க வாய்ப்பில்லை. உனது தாய் தந்தையரும் அதை உனக்குத் தரவில்லை. அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். அதனால் உன்னால் எளிதாக விரட்ட முடியும்” என்றார் குரு.