குரு - சிஷ்யன்: உதவும் உள்ளம்!

குரு - சிஷ்யன்: உதவும் உள்ளம்!
Updated on
2 min read

சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில் 1984-ம் ஆண்டு அக்டோபரில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 27 ஆண்டு காலக் கல்விப் பணியில், எனது கல்லூரி மாணவிகளோடு தோழமையோடு பழகும் தோழியாகவே இருந்திருக்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் பல நூறு மாணவிகளுக்குத் தமிழ், தமிழின் பெருமைமிக்க சங்க இலக்கியங்களைக் கற்பித்து இருக்கிறேன். கல்லூரிக்குப் படிக்க வருகிற அனைத்து மாணவிகளும் ஒரே மாதிரியான குணத்தோடும் மனநிலையோடும் இருப்பதில்லை. பலவிதமான குடும்பச் சூழல்கள், பொருளாதாரத் தடைகள், பெண்ணாக இருப்பதால் கல்லூரிப் படிப்புக்குத் தடைபோடும் பெற்றோர், அந்தத் தடையை மீறி போராடிப் படிக்க வரும் பெண்கள் என வகுப்பில் சந்தித்த ஒவ்வொரு மாணவியின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையான அனுபவத்தை எனக்குத் தந்தன.

என்னைக் கவர்ந்த மாணவி யாரென நினைக்கும் இந்தக் கணத்தில், பல நூறு மாணவிகளின் முகங்கள் என் நினைவுக்கு வருகின்றன. இதில் யாரைச் சொல்ல, யாரைவிட? “அம்மா… நலமா..?” என்று நேரில் அன்பொழுகக் கேட்கும் நிர்மலா, “அன்றைக்கு உங்கள் வார்த்தைகளைக் கேட்டதால், இன்றைக்கு இந்த உயர்ந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன்” என்று அலைபேசி வழி நெகிழும் பரிமளம் எனப் பலரும் என் நினைவில் வந்தாலும், என்னால் என்றும் மறக்கவே முடியாத மாணவிகளில் ஜெ.மாலாவுக்கு முதலிடம் உண்டு.

1990-களில் எங்கள் கல்லூரியில் பொருளாதாரம் படிக்கவந்த மாணவி ஜெ.மாலா. நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது நடவடிக்கைகளில் அதை ஒருபோதும் காட்டாதவர். அவரைச் சுற்றி எப்போதும் குறும்புக்கார மாணவிகள் கூட்டம் ஒன்று இருக்கும். வகுப்பில் ஒரு நாள் முதல் இருக்கையில் அமர்ந்திருப்பார். இன்னொரு நாள் நடு இருக்கையில் இருப்பார். வேறொரு நாள் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருப்பார். எந்த இடத்தில் இருந்தாலும் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களைக் கூர்ந்து கவனிப்பதில் மாலாவுக்கு நிகர் மாலாதான். தனக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள்மீது நல்ல மரியாதையும் அவர்களை எப்போதும் உயர்வாகப் பார்க்கும் பண்பும் அவரிடம் இருந்தன.

‘ஒரு நல்ல ஆசிரியரின் கவனம் அனைத்து மாணவர்கள் மீதும் சமமாக இருக்க வேண்டும்’ என்பார்கள். நான் வகுப்பில் பாடம் நடத்தியபோது, அனைத்து மாணவிகளின் மீதும் என் கவனம் இருக்கும்.

கொஞ்சம் குறும்புக்கார மாணவி என்றாலும், பாடம் நடத்தும்போது அமைதியாக அமர்ந்து பாடத்தைக் கவனிப்பார் மாலா. தேவையான நேரத்தில் தனது ஐயங்களை எழுப்புவார். என்னிடம் மிகவும் அன்போடு பழகுவார். என்னிடம் மட்டுமல்ல; எல்லோரிடமும் அவர் அன்பும் மரியாதையும் செலுத்துகிறார் என்பதை மற்றவர்கள் மூலம் நான் அறிந்திருக்கிறேன்.

அது மட்டுமல்ல; வகுப்பில் மாலாவின் அறிவுப்பூர்வமான பங்கேற்பு, மற்ற மாணவிகளிடமும் உற்சாகத்தைத் தொற்றிக்கொள்ளச் செய்துவிடும்.

யாராவது துன்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அதைக் குறிப்பால் உணர்ந்து உதவும் குணம் மாலாவுக்கு உண்டு. ஆனால், தான் உதவியதை ஒருநாளும் யாரிடமும் சொன்னதேயில்லை. அவரது உதவியைப் பெற்ற பல மாணவிகள் என்னிடம் இதைச் சொல்லியிருக்கிறார்கள். வெறும் புத்தகப் புழுவாகப் பாடங்களை மட்டும் அவர் படிக்கவில்லை.

padmavathi பத்மாவதிright

கல்லூரியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் பங்களிப்பைச் செலுத்தியதோடு, தன்னோடு போட்டிகளில் பங்கேற்கும் சக மாணவிகளுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பவராக இருந்தார்.

கல்வியின் பயன் குறித்தும், அரசியல் போக்குகள் குறித்தும் தெளிவும் புரிதலும் மாலாவிடம் இருந்தன. படித்து முடித்து, பல ஆண்டுகள் கடந்த பின்னும் தன் பேராசிரியர்கள் பலரோடும் தொடர்பில் இருந்தார்.

இன்றைக்கு அவர் சென்னையிலுள்ள புகழ்மிக்க தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவராக, சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றிவருகிறார். உயர்ந்த நிலைக்கு வருபவர்கள் தனது கல்லூரி கால நண்பர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்று பொதுவான கருத்து ஒன்று உண்டு.

ஆனால், மாலா அதிலும் விதிவிலக்கானவர். தனது கல்லூரித் தோழியான நிர்மலாவைத் தனது கல்வி நிறுவனத்திலேயே முக்கியப் பொறுப்பில் பணியமர்த்தியிருக்கிறார். இவர் என்னிடம் படித்த மாணவி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

கட்டுரையாளர்: பேராசிரியர், தமிழ்த் துறை,
மீனாட்சி கல்லூரி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in