

மூன்று வயதில் அம்மை நோய் ஏற்பட்டு, அதன் காரணமாகப் பார்வையை இழந்தவன் நான். என் குழந்தைப் பருவத்திலேயே தந்தையும் மறைந்துவிட, அம்மாவாலும் என்னைப் படிக்க வைக்க இயலாத நிலை. என் அண்ணனும் அண்ணியும்தான் என்னைப் படிக்க வைத்து இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள்.
மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையிலும் படித்த நான், திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்து, தமிழ் கற்பிக்கும் பணியைத் தொடங்கினேன். விருத்தாசலம், செய்யாறு ஆகிய இடங்களிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும் பணியாற்றியுள்ளேன். கடந்த 28 ஆண்டுகளாக அரசு கலைக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளில் பணியாற்றி இருக்கிறேன்.
பார்வை கிடையாது என்பதை ஒருபோதும் எனக்கான தடைக் கல்லாக கருதியதே இல்லை. எதையும் முயன்றால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் வெற்றி எனும் இலக்கை நோக்கி, தொடர்ந்து பயணிக்கும் குணமுடையவன் நான். அப்படியான எண்ணம் கொண்டவர்கள் கல்லூரி வகுப்பிலும் என் மாணவர்களாக இருந்தனர்.
என்னிடம் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களில் என் தம்பிகளாக, என் பிள்ளைகளாக இன்றும் என்னோடு அன்பிலும் தொடர்பிலும் பல நூறு மாணவர்கள் இருக்கிறார்கள். வறுமையான குடும்பச் சூழலில் இருந்து நானும் மேலெழுந்து வந்தவன் என்பதால், கிராமத்திலிருந்து கல்லூரிக்குப் படிக்கவந்து, ஏழ்மை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் போகும் பிள்ளைகள், தொடர்ந்து கல்வியைத் தொடர்வதற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வது என் வழக்கம். இதை உதவி என்று கருதாமல், என்னால் அத்தகைய மாணவர்களுக்குத் துணை நிற்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணியே செய்துவந்தேன்.
என் வீட்டில் எப்போதும் கல்லூரி மாணவர்கள் நிறைந்திருப்பார்கள். அதிலும் சில பிள்ளைகள் என் வீட்டிலேயே தங்கி, என் குழந்தைகளாகவே என்னோடு இணைந்திருப்பார்கள். அவ்வாறிருந்த என் மாணவர்களில், இல்லையில்லை… என் பிள்ளைகளில் ஒருவன்தான் கு.சீனிவாசன்.
1990-93 கல்வியாண்டில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை மாணவனாகச் சேர்ந்தான். சீனிவாசனுடைய தந்தை தேநீர்க் கடை நடத்திவந்தார். தன் மகனை நன்கு படிக்க வைக்க விரும்பினாலும், அவரது குடும்பப் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. எப்பாடுபட்டாவது படித்தாக வேண்டும் என்ற கல்வி மீதான ஆர்வத்தால், தன் தந்தையை எப்படியோ சமாதானம் செய்து கல்லூரிப் படிப்பில் சேர்ந்தான் சீனிவாசன்.
அன்பான, ஆர்வமான மாணவனாக அவன் இருந்தான். வகுப்பில் நான் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் என்னிடம் பாடம் தொடர்பாக எந்தச் சந்தேகம் வேண்டுமானாலும் கேட்கலாம். பாடம் நடத்திய பிறகு, பாடம் தொர்டர்பான சீனிவாசனின் ஐயங்கள் அறிவுபூர்வமானவையாக இருக்கும்.
சீனிவாசனைச் சுற்றி நண்பர்கள் வட்டம் ஒன்று எப்போதும் இருக்கும். அனைவரிடமும் அன்பாகப் பழகுவதுடன் இரக்கக் குணமும் ஒருங்கே பெற்றவன் சீனிவாசன். என்னோடு என் வீட்டிலேயே இருப்பான். கல்லூரிக்கு என்னை அழைத்து வருவான். கல்லூரி முடிந்து மீண்டும் என்னை வீட்டுக்கு அழைத்துப் போவான். என் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் அன்போடு பழகினான். என் நிழல்போல் என்னை எப்போதும் பின்தொடர்ந்தான்.
சீனிவாசனிடம் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் பிடிக்கும். ஒன்று, நேரம் தவறாமை. மற்றொன்று, சொன்ன சொல் தவறாமை. எங்கேயாவது ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், சொன்ன நேரத்தைவிட ஓரிரு நிமிடங்கள் முன்கூட்டியே சென்றுவிடுவான். அதேபோல், ஏதாவது செய்வதாக யாரிடம் வாக்குறுதி கொடுத்திருந்தாலும், அதை மறக்காமல் சொன்னபடி செய்து முடிப்பான். தனது குறிக்கோளை அடையும் நோக்கத்தோடு இருந்த சீனிவாசன், ஏனைய மாணவர்களைப்போல தேவையற்ற வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தியது இல்லை. எனது ஒவ்வொரு பிறந்த நாள், திருமண நாளில் சீனிவாசனின் வாழ்த்தும் ஒரு புத்தகப் பரிசும் எனக்காகக் காத்திருக்கும்.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்ற பின்னரும், என்னோடு அடிக்கடி உறவாடிக்கொண்டிருந்தான் சீனிவாசன். தனது இளமுனைவர் பட்ட ஆய்வை ‘ஆனந்த விகடன் - சிறுகதைகள் ஓர் ஆய்வு’ எனும் தலைப்பிலும், முனைவர் பட்ட ஆய்வை ‘தமிழ்ப் பேரகராதியில் வட்டார வழக்கு’ எனும் தலைப்பிலும் மிகச் சிறப்பாகச் செய்து முடித்தான்.
அவ்வப்போது என்னை நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் தக்க ஆலோசனைகளைக் கேட்பான். என் குடும்பத்தினருக்கும் பிடித்தமானவனாக இருந்தான் சீனிவாசன்.
திருச்செங்கோட்டிலுள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றிய சீனிவாசன், தற்போது அவன் படித்த, நான் முன்பு பணியாற்றிய செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணி செய்துவருகிறார். மாணவர்கள் வறுமை கண்டு கலங்கி நிற்கக் கூடாது; ஏதாவது ஒரு குறிக்கோளை மனத்தில் ஏந்தி, தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்குச் சரியான உதாரணம் எம் மாணவன் சீனிவாசன் என்பதை என்றும் பெருமையோடு சொல்வேன்.
கட்டுரையாளர்:தமிழ்த்துறைத் தலைவர்,
மாநிலக் கல்லூரி, சென்னை.
ஓவியம்: வாசன்