

செ
ன்ற வாரம் வட இந்திய மக்கள் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார்கள் அல்லவா? அதுபோலவே கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு நகரிலும் ஹோலிப் பண்டிகையைப் போல வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடும் பாரம்பரிய பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பண்டிகையை ஏன் அங்கு கொண்டாடுகிறார்கள்?
இந்தக் கொண்டாட்டத்துக்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால், சுமார் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கேலக்ஸிடி (Galaxidi) நகரம். கிரேக்கர்கள் சிறந்த கடலோடிகள் என்று வரலாற்றில் இடம்பிடிக்கக் காரணமான நகரம் இது.
1820-ம் ஆண்டுக்கு முன்பு ஓட்டோமேன் ஆட்சிக் காலத்தில் கிரேக்கத்தில் எந்தக் கொண்டாட்டத்தையும் நடத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு கேலக்ஸிடி நகர மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த கேலக்ஸிடி நகர மக்கள் சாம்பலை முகத்தில் பூசியும் சாம்பலைக் காற்றில் வீசியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், நாளடைவில் விழாவாக மாறியது. ஆண்டுகள் செல்லச் செல்ல சாம்பலுக்குப் பதிலாக வண்ணப் பொடிகள் இடம்பிடித்தன. இன்று அது இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையைப் போல் மாறிவிட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அண்மையில் கேலக்ஸிடி நகரில் நடைபெற்ற விழாவில், சுமார் ஒன்றரை டன் வண்ணப் பொடியைப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால், வண்ணப் பொடிகளால் வீடுகள் பாதிக்கப்படாமல் இருக்க வீடுகளின் மேல் பகுதியை பாலித்தீன் உறைகளைக் கொண்டு மக்கள் மூடி விட்டனர். அதே நேரம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் நிறமிகளையே, இந்தக் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் கேலக்ஸிடி நகர மக்கள்.