

க
டை கடையாக ஏறி, இறங்கிப் பொருட்கள் வாங்கிய காலம் மறைந்துகொண்டிருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே தேவையான பொருட்களை வாங்க முடியும் என்பதை இணையம் சாத்தியப்படுத்திவிட்டது. பெருகிவரும் இணையப் பயன்பாட்டாலும் காலத்துக்கேற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்வதாலுமே ஆன்லைன் ஷாப்பிங் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் பல வசதிகள் இளைஞர்களுடன் பெரியவர்களையும் கவர்ந்திருக்கின்றன. கடைக்குச் செல்லும் நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், எப்போதும் கிடைக்கும் தள்ளுபடி, ஒரே பொருளின் விலையைப் பல இணையதளங்களில் ஒப்பிட்டுக் கொள்ளும் வசதி, என ஆன்லைன் ஷாப்பிங்கின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
மும்பையில் மட்டுமே கிடைக்கும் ஒரு புத்தகத்தை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் இரண்டே நாட்களில் சென்னையில் வீட்டுக்கே வரவழைக்க முடிகிறது. கடைக்குச் சென்றுதான் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற நிலைமையையே ஆன்லைன் ஷாப்பிங் இன்று மாற்றிவிட்டது. நேரில் பார்த்து வாங்க வேண்டிய மின் சாதனங்களைக்கூட ஆன்லைனில் வாங்கும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. பொருளை டெலிவரி செய்யும்போது, பொருளைப் பார்த்து, அது நன்றாக இருந்தால், பணம் கொடுக்கும் வசதி இருப்பதால், அதன் மீதான நம்பகத்தன்மை அதிகரித்திருக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொருட்கள் வாங்க மட்டும் பயன்படுத்தாமல் அதையே வேலைவாய்ப்பாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். சிலர் ஆன்லைன் ஸ்டோர்களுக்கான ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பித்து, அதன் மூலம் கிடைக்கும் ஆர்டர் வாய்ப்புகளைக் கொண்டு வெற்றிகரமாக ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்தப் பாணியில் டீ ஷர்ட்கள், காப்பிக் கோப்பைகள், ஒளிப்பட பிரேம்கள் என இளைஞர்களுக்குப் பிடித்த பரிசுப் பொருட்களை விற்பனை செய்வோரும் ஆன்லைனில் பெருகியிருக்கிறார்கள்.
ஆன்லைனில் வரவேற்கும்விதமான பல அம்சங்கள் இருந்தாலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இடர்பாடுகள் ஏற்படுவது, சில நேரம் மோசடிகள் நிகழ்வதும் நடைபெறாமல் இல்லை. இதுபோன்ற சில குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், ஷாப்பிங்குக்கு நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் நிச்சயம் வரப்பிரசாதம்தான்.