ஜபல்பூரிலிருந்து புறப்பட்ட அம்பு!

ஜபல்பூரிலிருந்து புறப்பட்ட அம்பு!
Updated on
1 min read

ர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) இனி வாழ்நாளில் மறக்கவே மாட்டார் முஷ்கன் கிரார். அன்றுதான் இந்தியாவுக்காக ஆசிய வில்வித்தைப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் முஷ்கன். ஆரம்ப காலத்தில் வில்வித்தைக்குத் தங்கள் மகள் செல்வதை விரும்பாத முஷ்கனுடைய பெற்றோர், இன்று அவரது சாதனை வெற்றியால் உச்சிகுளிர்ந்துபோயிருக்கிறார்கள்.

அண்மையில் தாய்லாந்து தலைநகர் பங்காக்கில், ஆசிய வில் வித்தைக் கோப்பைக்கான தொடர் நடைபெற்றது. இந்தப் போட்டிக்குச் சென்ற மகளிர் அணியில் வயது குறைந்தவர் முஷ்கன் கிரார்தான். மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த 17 வயதான அவர், தற்போது 12-ம் வகுப்பு படித்துவருகிறார். பொதுத் தேர்வைவிட வில் வித்தையில் சாதிப்பதைத்தான் தன் லட்சியமாகக் கொண்டிருந்தார்.

ஆசியக் கோப்பையில் ஆரம்ப கட்டப் போட்டிகளில் கஜகஸ்தான், இந்தோனேஷியா வீராங்கனைகளை வீழ்த்திய அவர், அரையிறுதிப் போட்டியில் மலேசிய வீராங்கனையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் மற்றொரு மலேசிய வீராங்கனையான சஷாதுல் நதீரா ஷக்காரியாவை 139 - 136 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்த வெற்றியை அவருடைய பெற்றோர் விமர்சையாகக் கொண்டாடி வருகிறார்கள். “தன் மகளின் வெற்றி தொடரும். இன்னும் நிறைய பதக்கங்கள் வாங்கி நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்” என்கிறார் முஷ்கனுடைய தந்தை வீரேந்திரா கிரார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வில் வித்தை பயிற்சிக்கே செல்ல வேண்டாம் என்று தடை விதித்தவரும் இவர்தான்.

ஆனால், மகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, தனது மனத்தை மாற்றிக்கொண்டார். இது குறித்து முஷ்கனின் பயிற்சியாளர் ராஜ்பால் சிங் கூறும்போது, “முஷ்கன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் வில் வித்தை பயிற்சியில் சேர்ந்தார். ஆனால், அவருடைய பெற்றோர் முஷ்கனை மருத்துவராக்க வேண்டும் என விரும்பினார்கள். இதனால், இடையிலேயே பயிற்சியிலிருந்து முஷ்கன் நிறுத்தப்பட்டார்.

பின்னர் அவரின் ஆர்வம் வில் வித்தையில் இருப்பதைப் புரிந்துகொண்ட முஷ்கனின் பெற்றோர், அவரை மீண்டும் பயிற்சிக்கு அனுப்பினார்கள்” என்கிறார்.

ஆசிய கோப்பையில் சாதித்ததையடுத்து, 2020-ல் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் வீராங்கனைகளின் பட்டியலில் முஷ்கனும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in