

‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' இணையத்தில் மெகா ஹிட்டானது. இந்தியாவில் ‘ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரசாரம் தொடங்கியது. இந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ‘லாக்டோஜன் டின் சேலஞ்ச்'.
ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்குவதற்காக ‘லாக்டோஜன் டின் சேலஞ்ச்' தொடக்கியுள்ளனர் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள்.
மதுரை அரசு மருத்துவமனையில், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடர் தேவைப்படுவதை அறிந்துகொண்டு ‘லாக்டோஜன் டின் சேலஞ்ச்'சை இவர்கள் தொடங்கியுள்ளனர்.
“சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையான பசி, ஏழ்மைக்குத் தீர்வு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” எனக் கூறுகிறார் இந்த ‘லாக்டோஜன் டின் சேலஞ்ச்' குழுவின் தலைவராக செயல்படும் கிஷோர்.
லேக்டோஜென் டின் சேலஞ்ச் இவர்கள் சேவையின் ஒரு பகுதி மட்டுமே. கிஷோர், தான் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம், ஏழைகளுக்கு உணவு, ஆதரவற்றோர், முதியோருக்கு உணவு, மருத்துவ உதவிகள், சேரிப் பகுதிகளில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் எனப் பல்வேறு தொண்டுகளைச் செய்து வருகிறார். இவருடன் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வலர்களாகச் செயல்படுகின்றனர்.
கிஷோர், சென்னை டி.சி.எஸ் மையத்தில் பணி புரிந்து வருகிறார். ரைஸ் பக்கெட் சேலஞ்ச் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த பின்னரே அதே பாணியில் தனது ‘லேக்டோஜென் டின் சேலஞ்சையும்' முடுக்கி விட்டிருக்கிறார் கிஷோர்.
இந்தியாவில் ‘ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரசாரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) தொடங்கி வைத்தார். அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி வழங்கி, அதைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவிட வேண்டும்.
அப்போது பிற நண்பர்கள் இதைச் செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் (tag) செய்ய வேண்டும். அதன் மூலம் மேலும் பலர் இதைச் செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்.
மஞ்சுலதா கலாநிதியின் முயற்சி மதுரை இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளது. தங்கள் முயற்சியை முன்னரே உலகறியச் செய்திருந்தால் இந்தத் தொண்டுக்கு பேராதரவு கிடைத்திருக்கும் என உணரச் செய்துள்ளது. எல்லாமும் பெற்றவர்கள், எதுவுமே இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே கிஷோரின் கோரிக்கை.
சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குவதற்காக மட்டுமல்ல, தொண்டு செய்யவும் பயன்படும். அதற்கு இந்த இளைஞர்கள் வழிகாட்டிகள்.
தமிழில் : பாரதி ஆனந்த்