

ஃ
பேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். ஃபேஸ்புக்கை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக் சேவையைக் கண்டு வியக்காமல் இருந்திருக்க முடியாது. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய நண்பர்களை ஃபேஸ்புக் பரிந்துரைக்கும்போதோ அல்லது உங்கள் ஃநியூஸ்பீடில் மிகப் பொருத்தமான தகவல் தோன்றும்போதோ, ஃபேஸ்புக்குக்கு இது எப்படித்தெரியும்? என நீங்கள் மனதுக்குள் வியந்திருப்பீர்கள். ‘இது என்னடா வம்பா போச்சு; ஃபேஸ்புக்கிற்கு இதெல்லாம் எப்படித் தெரியும்’ என்றும் திகைத்தும் போயிருப்பீர்கள்.
உண்மை என்னவெனில், ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி இன்னும் நிறைய தெரியும் என்பதுதான். இதன் தாக்கத்தைதான் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடிலும் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். ஆனால், இது ஃபேஸ்புக் பயன்பாட்டோடு முடிந்து போகவில்லை என்பது கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள், தவறான விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த விவகாரம், இணைய உலகில் ஃபேஸ்புக்கின் மீதான விவாதத்தை சூடாக்கியிருக்கிறது. ஃபேஸ்புக் என்றால் லைக்குகளும் பகிர்வுகளும்தான் என நினைத்துக்கொண்டிருந்த பலரும், தங்கள் தகவல்கள் சேகரிக்கப்படுவது குறித்தும் அவை மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தபடுவது குறித்தும் கவலைப்படத் தொடங்கியிருக்கின்றனர்.
முக்கியமாக ஃபேஸ்புக் தகவல்கள், தேர்தல்களில் தாக்கம் செலுத்த பயன்படுத்தப்படலாம் என கூறப்படுவது திகைப்பை அதிகரித்திருக்கலாம். இந்தப் பின்னணியில் ஃபேஸ்புக் பயனாளிகளிடமிருந்து எந்த வகையான தகவல்களைத் திரட்டுகிறது, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது நல்லது.
முதல் விஷயம், ஃபேஸ்புக் பயனாளிகளிடமிருந்து சகலவிதமான தகவல்களையும் அது திரட்டுகிறது. இரண்டாவது பயனாளிகள் பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது ஆகியவற்றை மட்டும் கொண்டு தகவல்களைச் சேகரிப்பதோடு ஃபேஸ்புக் நிற்கவில்லை, அநேகமாகப் பயனாளிகளின் ஒவ்வோர் இணைய நடவடிக்கையையும் பின்தொடர்ந்து அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் திரட்டுகிறது.
ஆனால், ஃபேஸ்புக் இதை சட்ட விரோதமாக செய்யவில்லை (நிபந்தனை மற்றும் விதிகளில் தகவல்கள் சேகரிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது). விளம்பர நோக்கத்தில் செய்கிறது. இதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு நுட்பமாகச் செய்கிறது. அதைவிட முக்கியமாக இந்த விளம்பர வலை எப்படி எல்லாம் பயன்படுத்தப்படலாம் என்பதும்தான் பிரச்சினையாகி இருக்கிறது.
ஃபேஸ்புக் தனது சேவையை இலவசமாக வழங்குவதால் விளம்பரம் மூலம்தான் வருவாய் ஈட்டுகிறது. இதனால், பயனாளிகளைச் சுற்றி விளம்பர வலையைப் பின்னி வைத்திருக்கிறது. அமேசானில் ஒரு புத்தகத்தை தேடினால், அந்தப் புத்தகம் தொடர்பான விளம்பரம் ஃபேஸ்புக் நியூஸ்பீடில் எட்டிப் பார்க்கிறது.
சுவாரசியமான, பயனுள்ள, பொருத்தமான விளம்பரங்களை தோன்றச் செய்வதே குறிக்கோள் என ஃபேஸ்புக் கூறினாலும், இது செயல்படுத்தப்படும் விதம் அப்பாவி ஃபேஸ்புக் பயனாளிகளை திகைப்பில் ஆழ்த்தும். ஏனெனில், பொருத்தமான விளம்பரங்களை வழங்குவதற்காக ஃபேஸ்புக் அந்த அளவுக்குத் துல்லியமாகத் தகவல்களைச் சேகரிக்கிறது.
கடந்த ஆண்டு ‘வாஷிங்டன் போஸ்ட் ’ வெளியிட்ட கட்டுரையின் படி, விளம்பரங்களை குறி வைப்பதற்காக பயனாளிகளிடமிருந்து 98 விதமான முனைகளிலிருந்து ஃபேஸ்புக் தகவல்களை சேகரிக்கிறது. இந்த அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் ஃபேஸ்புக் பயனாளிகளின் இருப்பிடம், பாலினம், வயது, மொழி, கல்வித் தகுதி, பள்ளி, வீட்டின் மதிப்பு உள்ளிட்ட 16 அம்சங்களின் அடிப்படையில் குறி வைக்க முடியும். அதனால்தான் சென்னையில் ஒருவர் வாங்க விரும்பும் மியூசிக் ஆல்பம் தொடர்பான விளம்பரத்தை ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் தோன்றச் செய்ய முடிகிறது.
பொதுவாக ஃபேஸ்புக் மூன்று விதமாக பயனாளிகளின் தகவல்களைச் சேகரிக்கிறது. ஃபேஸ்புக்கில் சக நண்பர்களுடன் உரையாடும் விதம், அவர்கள் விரும்பி வாசிக்கும் உள்ளடக்கம், எந்த வகை பகிர்வுகளுக்கு விருப்பம் தெரிவிக்கின்றனர், கருத்து தெரிவிக்கின்றனர் ஆகியவை மூலம் தகவல்கள் சேகரிக்கிறது. இதற்காக ஃபேஸ்புக் பகிர்வுகளையும் விருப்பங்களையும் கவனிப்பதோடு, குறிப்பிட்ட பதிவில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்பதையும் குறிப்பெடுக்கிறது.
சரி, இவை எல்லாம் நாம் பகிர்ந்துகொள்வதுதானே என நினைக்கலாம். ஆனால், பேஸ்புக் தனது தளத்தில் பயனாளிகள் செய்வனவற்றை மட்டும் கவனிப்பதோடு நிற்கவில்லை, ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களை அது விடாமல் பின்தொடர்கிறது. இங்கு முக்கியமான ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாகவே இணையத்தில் உலவும்போது மூன்றாம் தரப்பினரால் நாம் பின்தொடரப்படுவதிலிருந்து தப்பிக்கவே முடியாது. ஏனெனில் இணைய சேவை வழங்கும் நிறுவனம், நாம் பார்க்கும் இணையதளம், கூகுள், ஃபேஸ்புக் ஆகியவை இணையவாசிகளை விடாமல் கவனித்து விளம்பர வலைப்பின்னலை மேற்கொள்கின்றன.
ஃபேஸ்புக் என்ன செய்கிறது என்றால், பயனாளி வெளியேறிய பிறகும் அவர் எந்த வகை தளங்களுக்கு செல்கிறார், அங்கு என்ன செய்கிறார் என்றெல்லாம் குறிப்பெடுக்கிறது. ஃபேஸ்புக் பகிர்வு பட்டன் அல்லது லைன் பட்டன் கொண்ட இணையதளங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அது கவனிக்கிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலும் அது பயனாளிகள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கிறது.
இவைத் தவிர தனது விளம்பர வலைப்பின்னலில் உள்ள நிறுவனங்கள் ஃபேஸ்புக் பயனாளிகள் தொடர்பான தகவல்களைப் பெற வழி செய்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் யாருக்கு பிறந்த நாள் வருகிறது, யாருக்கு திருமணம் நடைபெற உள்ளது, அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் யார் என்பது போன்ற தகவல்களை எல்லாம் சேகரிக்க முடியும்.
ஏற்கெனவே ஃபேஸ்புக் பயனாளிகள் பற்றி திரட்டி வைத்திருக்கும் தகவல் சித்திரத்தில், இந்தக் கூடுதல் விவரங்களைப் பொருத்தினால், அவர்களை நெத்தியடியாக குறி வைக்கும் விளம்பரங்களையும் தகவல்களையும் இடம்பெற வைக்க முடியும். இதன்மூலம் ஒருவரின் ஆர்வம், ஷாப்பிங் தேர்வு, வைத்திருக்கும் வாகனம், என்ன வேலை செய்கிறார் என்பது போன்ற தகவல்களையும் ஊகித்து அறிய முடியும். இவை ஊகங்களாக இருந்தாலும், விளம்பரங்களைக் குறி வைக்கப் போதுமானதாக இருக்கிறது.
இவை மட்டுமல்ல, ஒருவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் இயங்குதளம், பிரவுசர், இமெயில் சேவை, விளையாடும் ஆன்லைன் கேம்கள், கிரெடிட் கார்டு வைத்திருக்கிறாரா என்பது போன்ற தகவல்களையும் ஃபேஸ்புக் அறிந்துகொள்கிறது. இத்தனை முனைகளில் தகவல்களைச் சேகரிப்பதால் பயனாளிகளுக்கு ஏற்றது என பேஸ்புக் கருதும் விளம்பரங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை பயனாளிகள் மனதில் சலனத்தையும் சார்பு நிலையையும் ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
விளம்பரங்கள் மட்டும் விஷயமல்ல, பயனாளிகளின் நியூஸ்ஃபீடில் என்ன வகை உள்ளடக்கம் தோன்றுகிறது என்பதையும் ஃபேஸ்புக் தனது அல்காரிதம் மூலம் தீர்மானிப்பதாகச் சொல்லப்படுவது வில்லங்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கின் முகப்பு பக்கத்தில் நடுப்பகுதியாக அமையும் நியூஸ் ஃபீடில் தோன்றும் பதிவுகளும் பகிர்வுகளும் தானாக அமைபவை அல்ல. எல்லாம் ஃபேஸ்புக் தீர்மானத்தின் அடிப்படையில் அமைபவை. பயனாளிகள் தெரிவிக்கும் விருப்பங்கள், கருத்துகள், பகிர்வுகள் அடிப்படையில் ஃபேஸ்புக் அல்காரிதம் மேற்கொள்ளும் அனுமானத்தின்படியே தோன்றுகின்றன.
உதாரணத்துக்கு ஒருவர் குறிப்பிட்ட அரசியல் கோட்பாட்டில் ஆர்வம் உள்ளவர் எனில், அதுதொடர்பான தகவல்களே அவருக்கு அதிகம் முன்வைக்கப்படும். இதனால் அவரது சார்பு நிலை வலுப்பெறுவதோடு, மாற்று கருத்துகளை தெரிந்துகொள்வதற்கான சாத்தியம் குறைந்து விடுகிறது. அது மட்டுல்ல, ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் சார்ந்த தகவல்களை இடைவிடாமல் அளிப்பதன் மூலம் ஒருவரின் மனதில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தலாம். ஃபேஸ்புக் நியூஸ்ஃபீட் நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்களை செய்து மிகவும் கவனமாக இருந்தாலும், சம்பந்தம் இல்லாத மூன்றாம் தரப்பினர் இதில் விளையாட வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்படிதான் போலிப் பக்கங்களை அமைத்து, அதன் மூலம் பயனாளிகள் நியூஸ்ஃபீடில் நுழைந்து, வாக்களிப்பு தொடர்பான முடிவில் தாக்கம் செலுத்த முயன்றதுதான் இன்று பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. அதேநேரம் விளம்பரங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு குறித்து புரிந்துகொள்ளவும், முடிந்தவரை அவற்றை பயனாளிகள் தங்கள் விருப்பம்போல் கட்டுப்படுத்தவும் ஃபேஸ்புக் வாய்ப்பளிக்கவும் செய்கிறது. இது தொடர்பான தகவல்களை பெற அணுகவும்: goo.gl/xBimqZ