

நமது நாட்டில் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானது ‘கையால் மலம் அள்ளும்’ முறை. மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே அகற்றும் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு எதிரான கண்டனக் குரல் நீண்ட காலமாகவே ஒலித்துவருகிறது. இருந்தாலும், ‘செஃப்டிக் டேங்க்’ மரணங்களை இன்னமும் தடுக்க முடியவில்லை. தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டிருக்கிற இந்தக் காலத்திலும் இத்தொழிலுக்கு மனிதர்களைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் விஷ்ணுப்ரியா இயக்கியிருக்கும் ‘மீள்’ என்ற ஆவணப்படம் அதுசார்ந்து வேறொரு கோணத்தை முன்வைக்கிறது.
மதுரையைச் சேர்ந்த விஷ்ணுபிரியா கட்டிடவியல் முடித்துவிட்டு பெங்களூருவில் வேலைசெய்துகொண்டிருந்தார். சிட்னி பல்கலைக்கழகத்தில் மாஸ்டெக் படிக்கவும் அவருக்கு சீட் கிடைத்தது. ஆனால், ‘மீள்’ ஆவணப் படத்துக்காக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிறார் விஷ்ணுபிரியா.
“சிட்னிக்குப் படிக்கப் போகாவிட்டாலும், மரபு சார்ந்த கட்டிடங்கள் தொடர்பா ஆராய்ச்சி செய்ய விரும்பினேன். அந்த நேரத்துலதான் ‘குக்கூ’ அமைப்பைச் சேர்ந்த சிவராஜைச் சந்தித்தேன். கழிவறை இல்லாததால எழுந்த சில பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டார். கழிவறை வசதி இல்லாததால், பொதுவெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் காரணமாக ஒரு பெண் மலத்தை அடக்கிவைப்பதைப் பழக்கமாகவே வைத்திருந்திருக்கிறாள். நாளடைவில் அது உபாதையை ஏற்படுத்தி அவள் இறந்துவிட்டாள்.
கிராமப்புறப் பள்ளியில் பருவமடைந்ததும், பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த சரியான கழிவறை வசதி இல்லாததே அதற்குக் காரணம். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமலும், பூட்டி வைத்தபடியும் இருக்கு. தண்ணீர் வசதி இல்லைங்கிறதுதான் இதுக்கு முதன்மையான காரணம்ணு பல விஷயங்களை சிவராஜ் சொன்னார். அப்போதுதான் குறைவான தண்ணீர் பயன்பாட்டில் கழிவறையை உருவாக்கணுங்கிற எண்ணம் வந்துச்சு” என்கிறார் விஷ்ணுபிரியா.
இதன் பின்னர் ஆராய்ச்சியில் இறங்கிய விஷ்ணுபிரியா, மலத்தை எருவாக்குவது பற்றி நிறைய கட்டுரைகளைப் படித்திருக்கிறார். திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் மனிதக் கழிவை எருவாக மாற்றும் கழிவறை பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்றிருக்கிறார். மனிதக் கழிவை எருவாக மாத்துற சூழல் மேம்பாட்டுக் கழிவறை (Ecosan Toilet) அங்கு நடைமுறையில் இருப்பதைப் பார்த்த பிறகுதான் அவருக்கு ‘மீள்’ என்ற படம் எடுப்பதற்கான யோசனையும் ஏற்பட்டிருக்கிறது.
“முசிறியில் சூழல் மேம்பாட்டுக் கழிவறையை அறிமுகப்படுத்திய பிறகு கழிவை எருவாக்கும் விஷயத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்துச்சு. நான் போனப்ப அந்த எருவைக் கொண்டு விளைவித்த நெல்லில் பொங்கல் வைத்தார்கள். பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அந்த எரு மிகவும் பாதுகாப்பானதுன்னு நிரூபிக்கப்பட்டிருக்கு. இந்தக் கழிவறையைத் தமிழ்நாட்டின் பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பார்வையிட்டிருந்தாலும் பெரிய மாற்றம் நடக்கல. இது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக எடுத்துட்டுப் போகவே ‘மீள்’ ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தேன்” என்கிறார் விஷ்ணுபிரியா.
இந்தக் கழிவறை அமைப்புப்படி மலத்துக்கான குழியில் சாம்பல், உமி, மரத்தூள், காய்ந்துபோன இலைகள், சாணம், மண் போன்றவற்றைப் போட்டு வைக்கிறார்கள். அது நாளடைவில் எருவாகிவிடுகிறது. அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். சிறுநீர், சுத்தப்படுத்திய நீரை வீட்டுத் தோட்டத்துக்கும் பயன்படுத்தலாம். இந்தியக் கழிவறை, மேற்கத்திய கழிவறையைவிடச் சூழல் மேம்பாட்டுக் கழிவறையில் தண்ணீர் பயன்பாடு மிகவும் குறைவு. அதுபோக ‘செஃப்டிக் டேங்க்’ கான்செப்டையே ஒழிக்க முடியும். இதுதான் இந்த ஆவணப் படத்தின் கரு. ‘மீள்’ ஆவணப் படத்துக்காகப் பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறார் விஷ்ணுபிரியா.
“2016-ம் ஆண்டு ஆகஸ்டுல இதுக்கான வேலைகளை ஆரம்பிச்சேன். பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, லடாக், புதுச்சேரி, திருச்சி, கோவை, சிவகாசின்னு பல பகுதிகளுக்கும் போய் அங்குள்ள கழிப்பறை முறைகளைப் பதிவுசெஞ்சோம். லடாக் காஷ்மீரில் இருக்கு. அங்க 8 மாதங்கள் பனிப்பொழிவு இருக்கும். தண்ணீரெல்லாம் பனிக்கட்டியாக மாறிடும். அதனால ஃபிளஷ் டாய்லெட் அமைக்கவே முடியாது.
பல காலமா அங்க சூழல் மேம்பாட்டுக் கழிவறையைத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்காங்க. கழிவு எருவாவதற்கு ஆட்டுப் புழுக்கையையும் யாக் மாட்டு சாணத்தையும் பயன்படுத்துறாங்க. அவங்க சுத்தம் செஞ்சுக்க காகிதத்தைப் பயன்படுத்துறாங்க. இந்த மக்களால் ‘உலர் கழிவறை’ன்னு (Dry toilet) சொல்லப்படுற சூழல் மேம்பாட்டுக் கழிவறையைப் பத்தி ஒரு வாரம் லே மாவட்ட கிராமங்களுக்குப் போய் ஆவணப்படுத்தினோம்” என்கிறார் விஷ்ணுபிரியா.
இந்தக் கழிவறை முறை சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அது குறித்த ஆழமான புரிதலை இந்த ‘மீள்’ஆவணப் படம் எல்லோருக்கு ஏற்படுத்தும் என்று நம்பலாம்.