பென்னு விண்கல்லும் ஹாலிவுட் படங்களும்

பென்னு விண்கல்லும் ஹாலிவுட் படங்களும்
Updated on
2 min read

‘உ

ச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை, அச்சமில்லை..’ என்று பாடினார் பாரதி. அந்தப் பாடலை நாமும் வீரம் பொங்க பாடி வருகிறோம். ஆனால், 2135-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அந்தப் பாடலை அப்படிப் பாடமுடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், அன்று 500மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் நம் பூமியை தாக்கக்கூடும் என்று நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு ‘பென்னு’ என்று திருநாமமும் சூட்டியிருக்கிறார்கள்.

அந்தக் கல்லால் ஏற்படும் பாதிப்பு, அமெரிக்கா வசம் இருக்கும் அனைத்து அணு ஆயுதங்களையும் ஒருசேர பயன்படுத்துவதால் நேரும் ஆபத்தைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஹீரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 80,000 மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக அந்த விண்கல் இருக்குமாம்.

ஆனால், இதற்கெல்லாம் பயம் கொள்ள தேவையில்லை. இதற்கான சாத்தியம் வெறும் 0.004 சதவீதம்தான் உள்ளது. ஒரு வேளை அப்படி நிகழ்ந்தால் உலகைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று முண்டாசுக் கட்டுகிறது நாசா விஞ்ஞானிகள் குழு. அதை எப்படித் தடுக்க போகிறோம் என்பதையும் நாசா விளக்கி இருக்கிறது. ஆனால், அந்தச் செயல் திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது திரைப்படங்களிலிருந்து ‘சுட்ட’வை. ஆம், அது 1998-ம் வருடம் வெளிவந்த புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான ‘ஆர்மெக்கெடோன்’, ‘டீப் இம்பாக்ட்’ ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கி, அந்தத் திட்டத்துக்கு அவர்கள் ‘ஹம்மர்’ (HAMMER) என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

‘ஹம்மர்’ என்றவுடன் விண்வெளி வீரர்கள் கையில் சுத்தியல் கொடுத்து அதன்மூலம் அந்த விண்கல்லை நூறு ஆண்டுகளுக்குள் உடைப்பதுதான் அவர்களின் திட்டமோ என்று நினைக்க வேண்டாம். ‘Hypervelocity Asteroid Mitigation Mission for Emergency Response vehicle’ என்பதுதான் இதன் சுருக்கம். ‘ஹம்மர்’ என்றழைக்கப்படும் விண்கலம் ஒன்பது மீட்டர் உயரமும் 8.8 டன் எடையும் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தின்படி இந்த விண்கலன்கள் சீரான இடைவெளியில் அந்த விண்கல்லின் மீது தொடர்ச்சியாக மோதி வெடித்துச் சிதறுச் செய்யும். ‘அடிக்கஅடிக்க அம்மியும் நகரும்’ என்பதுபோல் இந்த மோதல்களால் பென்னு எனும் அந்த விண்கல்லின் சுற்றுவட்ட பாதை மாற்றியமையும்.

இந்தத் திட்டத்தை 2135-லிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பாகச் செயல்படுத்த தொடங்கினால் அதற்கு 34 முதல் 53 விண்கலங்கள் தேவைப்படுமாம். அதுவே 25 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கினால் அதற்கு 7 முதல் 11 விண்கலன்களே போதும். ஆண்டுகளையும் செலவையும் எப்படிக் குறைக்கலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சி நடந்துவருகிறது.

‘ஆர்மெக்கெடோன்’ திரைப்படத்தில் அதன் நாயகன் புரூஸ் வில்லிஸ் பூமியில் மோத வரும் விண்கல்லில் அணுகுண்டைச் செருகி வெடிக்க வைப்பதுபோல் ஏன் செய்யக் கூடாது என்றும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், ஒருவேளை அதனால் சிதறும் விண்கல் பூமியின் மீது விழுந்துவிட்டால் ஆபத்து பன்மடங்காக அதிகரித்துவிடும். இதனால் அணுகுண்டை விண்கல்லில் வெடிக்க வைக்காமல், அதன் அருகில் விண்வெளியில் வெடிக்க வைப்பதன்முலம் விண்கல்லை சிதறச் செய்யாமல் அதன் பாதையை மட்டும் மாற்றியமைக்கலாமே என்று சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டங்கள் எல்லாம் இன்னும் வரைவுகளாகவே உள்ளன.

இதற்கிடையே ‘ஆஸ்ரிஸ்-ரெஸ்’ எனும் விண்கலம் பென்னுவைக் கண்காணிக்க 2016-ம் ஆண்டே நாசாவால் அனுப்பப்பட்டுள்ளது. பென்னுவின் பாதையைக் கண்காணிப்பதும் அதன் கனிம வளத்தைக் கண்டறிவதும் முடிந்தால் அந்தக் கனிம வளத்தின் மாதிரியைப் பூமிக்கு அனுப்பி வைப்பதும்தான் இதன் முக்கிய பணி. ஸ்பேஸ்-எக்ஸ், டீப் ஸ்பேஸ் இண்டஸ்டீரிஸ், பிளானட்டரி ரிசோர்சஸ் போன்று நிறைய தனியார் நிறுவனங்களும் இந்த ஆராய்ச்சியில் தற்போது குதித்துள்ளன. ஆனால், அவற்றின் நோக்கம் பூமியைக் காப்பாற்றுவது அல்ல, அதன் கனிம வளங்களை அறுவடைச் செய்யவே.

வெறும் 0.004 சதவீத சாத்தியமுள்ள ஆபத்துக்கு இந்த அளவு அலப்பறை தேவையா என்று யோசிக்காதீர்கள். பென்னுவைப் போன்று சுமார் 18,000 விண்கற்கள் நம் பூமியின் பாதையில் வருவதற்குச் சாத்தியமுள்ளதாம். அதில் 1000 விண்கற்களின் அளவு, சுமார் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகம் என்று பீதியைக் கிளப்புகிறார்கள். எனவே இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் வருங்காலத்தில் விண்கற்களால் நேரும் அனைத்துவிதமான ஆபத்துகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

திரைப்படங்களில் பாய்ந்துவரும் தோட்டாக்களையும் ஏவுகணைகளையும் நம் சூப்பர் ஹீரோக்கள் தங்கள் பார்வையாலோ கழுத்தில் அணிந்திருக்கும் காப்பினாலோ திசை திருப்பி அனுப்பும் காட்சிகளைப் பார்த்து இனி ஏளனமாகச் சிரிக்க வேண்டாம். யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் அதன் அடிப்படியிலும் புது கண்டுபிடிப்புகள் நிகழலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in