

இயற்கையின் அறியப்படாத அதிசயங்கள் உலகெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் வடக்கொளி (Northern lights). ‘அரோரா போரியாலிஸ்’ என்றழைக்கப்படும் இந்த வெளிச்சம், வட துருவப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் நாடுகளில் இரவு நேரங்களில் ஏற்படும். அண்மையில் இந்த வெளிச்சம் அமெரிக்காவை, கனடாவை ஒட்டிய வட துருவ பகுதிகளில் தெரிந்தன. மார்ச் 14-ம் தேதி ஏற்பட்ட சூரியப் புயலே இதற்குக் காரணம்.
இந்த ஒளி எப்படி ஏற்படுகிறது? பூமிப் பந்தின் மேலடுக்கில் காணப்படும் ‘அயன்’ (Ion) என்றழைக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத துகள்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த ஒளி ஏற்படுகிறது. இது வட துருவப் பகுதிகளில் மட்டுமே ஏற்படக்கூடியது.
இந்த ஒளியை ஆய்வு செய்வதில் உலகெங்கும் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம்வரை மட்டுமே நீடிக்கக்கூடிய ஒளி இது. மற்ற வகை ஒளியை ஆராய்ச்சிக் கூடங்களில் ஏற்படுத்துவதைப் போல இந்த வடக்கொளியை ஆய்வகங்களில் ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.
இப்படியான சிறப்பு வாய்ந்த வடக்கொளியை ஒளிப்படமும் வீடியோவும் எடுத்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வானியல் ஒளிப்படக் கலைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கேமராவும் கையுமாக வடதுருவ நாடுகளைச் சுற்றி வருவது வாடிக்கை. இவர்களில் ஒருவர்தான் கிறிஸ் ராட்ஷலாஃப் (Chris Ratzlaff). அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இயற்கையின் அற்புதங்களைப் படம் படிப்பதில் கைதேர்ந்தவர்.
மின்னல், சூறாவளி, சூரியப் புயல் என இயற்கையின் வெளிப்பாடுகளைப் படம்பிடித்து அவற்றைச் சமூக வலைத்தளங்களில் அதிகமான அளவில் பகிர்ந்திருக்கிறார் அவர். வடக்கொளி மீதும் தீராத ஆர்வம் கொண்டவ அவர், அண்மையில் ஏற்பட்ட வடக்கொளியைப் படம் பிடித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படிப் படம் பிடித்ததன் மூலம் கிறிஸ் ராட்ஷலாஃபுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் மழைக்கு நடுவே எப்படி ஒரு சில நிமிடங்கள் வானவில் தோன்றுகிறதோ, அதுபோலவே வட துருவப் பகுதிகள், அதன் அருகே உள்ள நாடுகளில் இரவு நேரங்களில் வடக்கொளி தோன்றுகிறது.
இது எப்படி வரும், எப்போது வரும் என்பது போன்ற தகவல்கள் வானிலை மையங்கள் அறிவித்தாலும், எதுவும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எப்போது தோன்றும் என்றே தெரியாத வடக்கொளியைத் துரத்தித் துரத்தி ஒளிப்படம் எடுத்ததற்காகத்தான் கிறிஸுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இதுவரை உலகில் அறியப்படாத வகையில் புதுவகையான வடக்கொளியைத்தான் கிறிஸ் அண்மையில் படம் பிடித்திருந்தார். இதை நாசாவுக்கும் வடக்கொளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர் அனுப்பிவைத்தார். புது வகையான வடக்கொளிக்கு ‘ஸ்டீவ்’ என்ற பெயரை கிறிஸ் சூட்டியிருந்தார்.
இந்தப் பெயர் சூட்டியதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். “புது வகையான உயிரினம் ஒன்று ‘ஓவர் தி ஹெட்ஜ்’ என்ற அனிமேஷன் படத்தில் வரும். அப்போது அந்த உயிரினத்துக்கு ஸ்டீவ் என்ற பெயர் வைக்குமாறு அந்தப் படத்தில் வரும் அணில் சொல்லும். அதைப் போன்றே இந்த புதிய வடக்கொளிக்கு ஸ்டீவ் என்று பெயர் வைத்தேன்” என்கிறார் கிறிஸ்.
இந்த ஒளியை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர்களும் புதிய வகை வடக்கொளியை ‘ஸ்டீவ் பினாமினன்’ (Steve Phenomenon) என்றே அழைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
அட்டகாசமான வானிலை உலா
இன்று (மார்ச் 23) சர்வதேச வானிலை ஆய்வு தினம். 191 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச வானிலை ஆய்வு தினத்தைக் கொண்டாடிவருகிறது. உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு இயற்கை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்த அமைப்பு முடிவெடுத்திருக்கிறது.
இதற்காக உலகம் முழுவதுமிருந்து யார் வேண்டும் என்றாலும் வானிலை தொடர்பான காட்சிகளையும் வானிலை அதிசயங்களையும் ஒளிப்படங்களாக எடுத்து அனுப்பலாம் என இந்த அமைப்பு அறிவித்தது. இதில் ஓர் ஒளிப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கண்ணைக் கவரும் வகையில், ஏராளமான ஒளிப்படங்கள் குவிந்திருக்கின்றன. இதிலிருந்து மிகச் சிறப்பான 50 ஒளிப்படங்களைத் தேர்வு செய்த சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு, அவற்றைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம், இன்ஸ்டாகிராம், ஃப்ளிக்கர் எனச் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள வானிலை ஆய்வாளர்கள், இயற்கை விரும்பிகள் மத்தியில் வாக்கெடுப்பும் நடத்தியிருக்கிறது. இதிலிருந்து ஒரு சிறந்த படம் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த 50 ஒளிப்படங்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? goo.gl/1FB83F என்ற ஃபேஸ்புக் இணைப்பில் பார்க்கலாம்.