தமிழனா இருந்தா ஃபீல் பண்ணு!

தமிழனா இருந்தா ஃபீல் பண்ணு!
Updated on
2 min read

சமூக வலைதளங்களில் உலவும் ஒவ்வொருவரும் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு வாசகம் ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு'. உண்மையில் தமிழ் உணர்வோடு தமிழகத்துக்குப் பயன்படக் கூடிய தகவலாக இருந்தால், ஷேர் செய்ய தாராளமாகச் சொல்லலாம். ஆனால், தமிழிலேயே தவறான தகவல்களையும் கட்டுக் கதைகளையும் எழுதி, அவற்றை ஷேர் செய்ய சொல்வது தற்போது டிரெண்டாக சமூக வலைத்தளங்களில் உள்ளது.

அண்மையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்தபோது, அவரை முறைப்படி வரவேற்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதைப் பற்றி பலரும் விமர்சித்தனர். தமிழர்கள் பலரும் கனடா பிரதமரை வரவேற்பதாக ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளில் எழுதினார்கள். மீம்ஸ்களையும் உலவவிட்டனர். ஆனால், அந்த நேரத்தில் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரூடோவை வாழ்த்தியதை ஷேர் செய்யும் 50 ஆயிரம் தமிழர்களுக்கு கனடா அரசு விசா வழங்க ட்ரூடோ முடிவு செய்துள்ளார். எனவே இந்தப் பக்கத்தை தமிழனாக இருந்தால், ஷேர் செய்யவும் என்று உலவவிட்டனர்.

Canada_PM_Fb

இதேபோல 'குரங்கணி காட்டுத் தீ விபத்தை அறிந்த கனடா பிரதமர் தன் நாட்டு வசமுள்ள ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார். அதில் தானும் ஒரு ஹெலிகாப்டரை ஓட்டி வந்தார்' என்று கற்பனைக்கே எட்டாத கட்டுக்கதையாக மீம்ஸ்களாக வெளியிட்டனர். அதோடு நிற்கவில்லை, ‘ஒவ்வொரு தமிழனும் தமிழனாய் இருந்தால் இதை கட்டாயம் ஷேர் செய்யுங்கள்’ என்று அறிவுரையும் வழங்கினர்.

‘இலங்கையில் வங்கதேசதுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 8 பந்துகளில் 29 ரன் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கைப் பாராட்டி 5 கோடி ரூபாய் பரிசு’ என கனடா பிரதமர் அறிவிப்பு என்று ஒரு மீம்ஸ் கண்ணில்பட்டது.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த தினத்தன்று, ‘தமிழகத்தின் ரூ. 3 லட்சம் கோடி கடனை கனடா ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்த கனடா பிரதமருக்கு நன்றி’ என்று சொல்லி ஒரு படம் போட்டனர். இந்த மீம்ஸை ஆயிரக்கணக்கானோர் ஷேர் வேறு செய்திருந்தனர்.

இப்படி மனம்போன போக்கில் தோன்றும் விஷயங்களை வெளியிடுவோர் சமூக ஊடகங்களில் அதிகரித்துவருகிறார்கள். ஆயிரக்கணக்கில் இவை ஷேர் செய்யப்படுவதைப் பார்ப்போர், படிப்போர் என்ன நினைப்பார்கள் என்றுகூட சிந்திக்காமல் சமூக வலைதளங்களில் உலவ விடுபவர்களுக்கு எந்த வருத்தமும் இருப்பதில்லை.

இந்தக் கட்டுக்கதைகளை ஆயிரக்கணக்கில் பகிர்வதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’ என்ற கோஷத்துடன் தொடர்ந்து கட்டுக்கதைகளைப் பகிரும் போக்கைக் காணும்போது, ‘தமிழனா இருந்தா ஃபீல் பண்ணு’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in