

ஒ
ளிப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி போன்றவை எல்லாம் ஆர்ட் கேலரிகளில்தான் நடக்க வேண்டுமா, என்ன? எங்கும் நடத்தலாம் என வழிகாட்டியிருக்கிறார்கள் சென்னை இளைஞர்கள். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் இவர்கள் ஏற்பாடு செய்திருந்த திறந்தவெளி ஒளிப்படக் கண்காட்சி ரயில் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஜெர்மனி தூதரக ஒளிப்படக் கலைஞர்களின் அமைப்பான ‘ueberall’, ஜெர்மன் கல்வி நிறுவனமான கோதே இன்ஸ்டிடியூட், சென்னை புகைப்படக் கண்காட்சி ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த ஒளிப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ‘ஹோம் டவுன்’ என்ற தலைப்பில் ஒளிப்படப் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஒளிப்படங்கள் பெறப்பட்டன. அதில் வெற்றிபெற்ற இளைஞர்கள் ஒன்பது பேரின் ஒளிப்படங்களே ரயில் நிலையத்தில் பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஒன்பது வகைத் தலைப்புகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஒளிப்படமும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தக் கண்காட்சியில் ‘சமையலறை’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்ட ஒளிப்படத்தைப் பார்க்கும்போது நாமும் அந்தச் சமையலறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதேபோல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பரத நாட்டிய கலைஞர்கள், முதுமையின் தனிமை எனப் பல தலைப்புகளில் இடம்பெற்றியிருந்த ஒளிப்படங்கள் எல்லோரையும் கவர்கின்றன.
சமையலறை முதல் மாடுலர் கிச்சன்வரை வித்தியாசமான ஒளிப்படங்களை எடுத்திருந்த விவேக் மாரியப்பனிடம் பேசினோம். “சின்ன வயசிலேர்ந்து போட்டோக்களைப் பார்க்கப் பிடிக்கும். பின்னர் தான் நானாக போட்டோ எடுக்கத் தொடங்கினேன். அதேபோல் எனக்குக் கோவையாக எழுதவும் வராது. நான் சொல்ல நினைக்கிற விஷயங்களை என்னுடைய போட்டோக்கள் மூலமா சொல்லிடுவேன். அப்படித்தான் ‘ஹோம்டவுன்’ என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது வீடு, அம்மாவின் சாப்பாடுதான். அதை மையமாக வைத்துதான் ‘சமையலறை’ என்ற தலைப்பில் போட்டோ எடுத்தேன்” என்கிறார் விவேக்
ரயில்வே நிலையத்தில் கண்காட்சி நடத்துவதால் மக்களிடம் ஆதரவு உள்ளதா எனக் கேட்டோம். “ரயில்வே ஸ்டேஷன்ல கண்காட்சி நடத்துறதால நிறையப் பேர் பார்க்க வருகிறார்கள். அதுவே ஆர்ட் கேலரியில் நடத்தினா 50, 60 பேர்தான் பார்ப்பார்கள்” எனச் சொல்கிறார் விவேக்.