

கணிதம் சிலருக்கு வேப்பங்காய். இன்னும் சிலருக்கோ இயற்பியலும் வேப்பங்காயாகக் கசக்கிறது. அறிவியலின் முக்கியப் பிரிவாக 650-ம் ஆண்டு முதலே இயற்பியல் இருந்துவருகிறது. பேரண்டத்தின் செயல்பாடு குறித்த இன்றைய நம் புரிதலுக்கான காரணம் இயற்பியலையே சாரும். ஆனால், அதைப் படிப்பது என்பது சப்டைட்டில் இல்லாத மாற்றுமொழிப் படம் பார்ப்பது போன்றது.
அதுவும் மதிய வேளையில் அதைப் படிக்க முயன்றால், நியூட்டனும் எடிசனும் ஐன்ஸ்டீனும் அழையா விருந்தாளியாக வந்து நம்மைத் தாலாட்டித் தூங்க வைப்பார்கள். அந்த அளவு கடினமானது இயற்பியலும் அதன் கரடுமுரடான கொள்கைகளும். ஆனால், அவற்றைப் பாமரனும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்குவதன் மூலம் இன்று பிரபலமான அறிவியலாளராகத் திகழ்கிறார் பேராசிரியர் பிரைன் காக்ஸ்.
இளைஞர் போன்று தோற்றமளிக்கும் இவருக்கு வயது 49. பிரைன் காக்ஸ் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இருந்தாலும், அவர் எழுதிய புத்தகங்களும் தொகுத்து வழங்கிய அறிவியல் தொலைக்காட்சி தொடர்களும்தாம் அவருடைய தனித்த அடையாளங்கள்.
இயற்பியலை எளிய மொழியில் இவர் விளக்கும் காட்சி, பார்க்கும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். அது மட்டுமல்ல; அவருடைய அழகும் ஸ்டைலும் உணர்ச்சிகள் கொப்பளிக்கும் முகமும் எந்த ஹாலிவுட் நட்சத்திரத்தையும் பொறாமைப்படவைக்கும்.
பிரைனின் பெற்றோர் வங்கிகளில் வேலை பார்த்தனர். வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் நடனமும்தான் இளம்வயதில் பிரைனின் பொழுதுபோக்கு. அப்போது கார்ல் ஸாகன் எழுதிய ‘காஸ்மாஸ்’ எனும் புத்தகத்தைப் படித்ததால் இயற்பியலில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், கல்லூரியில் கணக்குப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவரது கவனம் இசையின் பக்கம் திரும்பியது.
1988 முதல் 1991வரை ‘டேர்’ எனும் ராக் இசைக் குழுவில் சேர்ந்து இரண்டு இசை ஆல்பங்களை பிரைன் வெளியிட்டார். அதன்பின் ‘டிரீம்’ எனும் இசைக் குழுவில் கீ-போர்ட் பிளேயரானார்.
அப்போது அவர் வெளியிட்ட ‘திங்ஸ் கேன் ஒன்லி கெட் பெட்டர்’ எனும் பாடலை முணுமுணுக்காதவர்களே இங்கிலாந்தில் இல்லை எனலாம். இசையில் அவர் பிஸியாக இருந்தபோதும், படிப்பிலும் சூரப்புலியாகவே இருந்தார். காஸ்மாஸ் புத்தகத்தின் தாக்கம், அவரை இயற்பியலில் முனைவர் (PhD) பட்டமும் பெறவைத்தது.
2005-ம் ஆண்டு பிபிசி-யில் பிரைன் வழங்கிய ‘கேன் வி மேக் ஏ ஸ்டார் ஆன் எர்த்?’, ‘வாட் ஆன் எர்த் இஸ் ராங் வித் கிராவிட்டி?’ போன்ற நிகழ்ச்சிகள் அவரைப் புகழடையச் செய்தன. அவர் வழங்கிய ‘தி பிக் பாங் மெஷின் இன் 2008’ எனும் தொடர் அவருக்கென்று பிரேத்யகமான தொலைக்காட்சி தொடர்களைப் பெற்றுக்கொடுத்தது.
2011-ல் வெளிவந்த அவரது தொடர்களான ‘வொன்டர்ஸ் ஆஃப் தி சோலார் சிஸ்டம்’, ‘வொன்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ போன்றவை பிரபலமானவை. அவை இன்றும் யூடியூபில் பலரால் பார்க்கப்படுகின்றன. ‘ஹுமன் யுனிவெர்ஸ்’, ‘ஃபோர்ஸஸ் ஆஃப் தி நேச்சர்’, ‘தி எண்டயர் நேச்சர்’ ஆகியவை அவரது அண்மைக் காலத் தொடர்கள்.
பிரைன் தற்போது லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய காதல் மனைவியின் பெயர் ஜியா மிலினோவிச். அவர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் தொகுப்பாளர். பிரைனின் மீது அவருக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘பிரைன் CERN வகை மின்னஞ்சலை உபயோகப்படுத்தியதைப் பார்த்தவுடன்’ என்று முதல் ஈர்ப்பு ஏற்பட்டதை நகைச்சுவையாகக் கூறுகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஜார்ஜ் எனும் மகன் இருக்கிறான்.
இன்று அவர் பல நாடுகளுக்குச் சென்று அறிவியல் உரை வழங்கிவருகிறார். ஆனால், உரையை இலவசமாக வழங்குவதில்லை. இருப்பினும், அவர் ஆற்றும் அறிவியல் உரைக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். அறிவியல் உரை நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிக அளவு டிக்கெட் விற்பனையானதற்கான கின்னஸ் சாதனையை இவர் படைத்திருக்கிறார். இதுபோன்ற அடையாளங்கள்தாம் இந்தச் சாதாரண கல்லூரிப் பேராசிரியரை இன்று உலகமே வியந்து ரசித்துப் பார்க்கும் அறிவியலாளராக மாற்றியுள்ளது.