

கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது அரிதிலும் அரிது. அந்த அரிதான நிகழ்வை நிகழ்த்திகாட்டினார் இலங்கையின் லசித் மலிங்கா. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில்.
2007-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றன. ‘சூப்பர் 8’ சுற்றில் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் ஜார்ஜ்டவுன் நகரில் மோதின. இந்தப் போட்டியில்தான் அந்த அரிதான சாதனையை மலிங்கா நிகழ்த்தினார்.
அந்தப் போட்டியின் 44-வது ஓவரை வீசிய மலிங்கா 5-வது பந்தில் ஷேன் பொலாக்கையும், 6-வது பந்தில் ஹாலையும் வீழ்த்தினார். பின்னர் 46-வது ஓவரை மீண்டும் வீச வந்தார் மலிங்கா. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜாக் காலிஸை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனையைப் படைத்தார்.
அவருக்கு பின்னர் களமிறங்கிய மகாய நிட்னியையும் வெளியேற்றி கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் (ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும்) தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் மலிங்கா.
ஆனால், இதில் ஒரு துரதிர்ஷடம் என்னவென்றால், அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இலங்கை அணி தோற்றுப்போனது. லசித் மலிங்கா 2011 உலகக் கோப்பைப் போட்டியிலும் கென்யாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் மலிங்கா 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருப்பது கூடுதல் தகவல்.