

நிறவெறி கொள்கைகளைப் பின்பற்றியதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அங்கீகாரத்தை 1964-ல் இழந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மீண்டும் 1991-92-ம் ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது.
அடுத்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி முதன்முறையாகப் பங்கேற்றது.
அந்த உலகக் கோப்பைத் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குவதற்கு முன்புவரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் கெப்ளர் வெசல்ஸ். அது மட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தவர் இவர்.
ஐ.சி.சி. விதித்திருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பினார் வெசல்ஸ். அதோடு உலகக் கோப்பை அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியவர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்.