Last Updated : 30 Apr, 2019 12:07 PM

 

Published : 30 Apr 2019 12:07 PM
Last Updated : 30 Apr 2019 12:07 PM

மில்லேனியல் உலகம்: காதலுக்குத் தடையாகும் சமூக ஊடகம்

சமூக ஊடகங்கள் இல்லாத ஓர் உலகத்தை புத்தாயிர இளைஞர்களால் கற்பனை செய்துபார்க்க முடியுமா?  நிச்சயம் முடியாது என்று நீங்கள் பதில் சொல்லலாம். அது உண்மைதான். சமூக ஊடகத்திலேயே சஞ்சரித்து வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள்  புத்தாயிர இளைஞர்களால். அதோடு அவர்களுடைய காதல் வாழ்க்கையும் தற்காலச்சூழலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அண்மையில், ஹவாஸ் மீடியா என்ற சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில்,  புத்தாயிர இளைஞர்கள் தங்களின் ‘ஆன்லைன்’ உலகத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள் என்றும், அது அவர்களுடைய காதல் உறவைப் பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது. 16 - 24

வயதுள்ள இளையோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர், தங்கள் வாழ்க்கை, உறவுகள் சார்ந்து சமூக ஊடகங்களில் தற்பெருமை பேசும் பழக்கம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன், இந்த ஆய்வில் கலந்துகொண்ட 68 சதவீத  புத்தாயிர இளைஞர்கள், தங்கள் முன்னாள் காதலரைச் சமூக ஊடகத்தில் பின்தொடர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, 75 சதவீதத்தினர், சமூக ஊடகத்தால் தங்கள் காதல் உறவு பாதிக்கப்படுவதை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட சில நண்பர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நிலைத்தகவல்கள், படங்களைப் பகிர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். எப்போதும் அலைபேசியைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய தேவை இருப்பதைப் போன்று உணர்வதாக 74 சதவீதத்தினர் கூறியிருக்கிறார்கள்.

மூன்றில் இரண்டு பங்கினர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களுடன் உரையாடலில் இருக்கும்போதும் தங்கள் அலைபேசியைப் பார்க்கும் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன், இந்த ஆய்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களில் 79 சதவீதத்தினர், கழிப்பறையில் அலைபேசி பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 81 சதவீதத்தினர் நூலகம் போன்ற அமைதியான இடங்களில் அலைபேசியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்கிறார்கள்.

சமூக ஊடகங்கள், புத்தாயிர இளைஞர்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். “தெரிந்தோ தெரியாமலோ சமூக ஊடகத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தங்களின் ‘மெய்நிகர் நண்பர்க’ளின் வாழ்க்கையோடு ஒப்பிடுகின்றனர். இதனால், அவர்கள் தங்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைச் சமூக ஊடகத்தில் உருவாக்க வேண்டிய அழுத்தத்தை உணர்கின்றனர்.

உங்கள் காதல் உறவைப் பற்றிச் சமூக ஊடகத்தில் ஒரு பிம்பத்தை உருவாக்கும் முன்னர், இந்தச் செயல் எப்படி உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகின்றனர்

நிபுணர்கள்.காதல் உறவு தனித்துவமானது என்பதை புத்தாயிர இளைஞர்கள் உணர்வது அவசியம் என்கிறது இந்த ஆய்வு. கூடுமானவரை, சமூக ஊடகங்களில் இருக்கும் ‘மெய்நிகர் நண்பர்களி’ன் காதல் உறவையும் வாழ்க்கையையும் உங்களோடு ஒப்பிடாதவரை பிரச்சினையில்லை.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர், நாம் மட்டும் மகிழ்ச்சியாக இல்லை என்ற சமூக ஊடகம் உருவாக்கும் போலி பிம்பத்துக்குள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையே ஆய்வு முடிவு வலியுறுத்துகிறது.மில்லேனியல் உலகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x