Last Updated : 23 Apr, 2019 09:53 AM

 

Published : 23 Apr 2019 09:53 AM
Last Updated : 23 Apr 2019 09:53 AM

வலை 3.0: மின்னஞ்சலின் அறிமுகம்!

உலகின் முதல் இணைய பிரவேசம் நிகழ்ந்த பிறகு 300 கி.மீ. தொலைவில் உள்ள கணினியை வலைப்பின்னல் வசதி மூலம் அணுகுவது சாத்தியமானது. ஆக, உலகம் இணைய யுகத்தில் அடியெடுத்து வைத்தது. இதையடுத்து சில ஆண்டுகளில் மொத்தம்

30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த வலைப்பின்னலில் இணைந்தன.1973-ல் அர்பாநெட்டில் நார்வே முதல் வெளிநாடாக நுழைந்தது. அதே ஆண்டில் லண்டனும் வலைப்பின்னலில் இணைந்தது.

 மெல்ல உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆய்வு அமைப்புகளும் பல்கலைக்கழகங்களும் இணைந்து, உலகளாவிய வலைப்பின்னலாக விரிவானது. இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி ஆய்வு வலைப்பின்னலான ‘எர்நெட்’ மூலம் இணையம் அறிமுகமானது. 1986-ல்

உருவாக்கப்பட்ட எர்நெட்டில் பல்கலைக்கழக ஆய்வு அமைப்புகளே இணைந்திருந்தன. 1972-ல் இணையத்தின் பிரதான சேவைகளில் ஒன்றான மின்னஞ்சல் அறிமுகமானது. மின்னஞ்சல் பரிமாற்றத்துக்கான முக்கிய அம்சமாக, செய்தி பெறுபவரை அடையாளம் காட்டும் @ என்ற குறியீட்டை ரே டாம்லின்சன் அறிமுகம் செய்தார்.

அதற்கு முந்தைய ஆண்டுதான் மைக்கேல் ஹார்ட் என்பவர், புத்தகம் ஒன்றின் உள்ளடக்கத்தைக் கணினியில் அப்படியே டைப் செய்யத் தொடங்கி டிஜிட்டல்மயமாக்கினார். ஹார்ட் உருவாக்கிய அந்த வடிவம்தான் உலகின் முதல் மின்னூலாக (இ-புக்) அமைந்தது. இவர்தான் பின்னர் புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் பகிர்ந்து கொள்வதற்கான குடென்பெர்க் திட்டத்தை உருவாக்கினார்.

1972-ல் முதன்முறையாக அர்பாநெட் வலைப்பின்னலுக்கான பொது அறிமுகம் நிகழ்ந்தது. தொழில்நுட்ப நோக்கில், வலைப்பின்னலில் கணினிகள் பரஸ்பரம் பேசிக்கொள்வதற்கான பொதுமொழியான டிசிபி-ஐபி முறையை 1970-களின் தொடக்கத்தில் வின்செண்ட் செர்ப் மற்றும் பாப் கான் ஆகியோர் உருவாக்கினர்.

1974-ல் அர்பாநெட் வலைப்பின்னல் சேவையை வர்த்தக நோக்கில் வழங்குவதற்கான இணைய சேவை நிறுவனமான டெல்நெட் உருவாக்கப்பட்டது. 1976-ல் பிரிட்டன் மகாராணி எலிசபெத்தும் அமெரிக்க அதிபர் ஜிம்மி  கார்ட்டரும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தினர்.  1980-களில் கணினி அறிவியல் வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கான இணைய சேவை வழங்கப்பட்டது.

1987-ல் இணையத்தில் இணைந்த ஹோஸ்ட் கணினிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டது. அதே ஆண்டில் சிஸ்கோ நிறுவனம் முதல் ரவுட்டரை அறிமுகம் செய்தது.

1990-களில் ‘அர்பாநெட்’ கலைக்கப்பட்டு, இணையம் முழு அளவிலான வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் இணையத்தை மாற்றி அமைக்கக்கூடிய வலை சேவையையும் டிம் பெர்னர்ஸ் லீ அறிமுகம் செய்ய ஆயுத்தமானார்.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு:  enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x