

இந்து - இஸ்லாம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சர்ஃப் எக்ஸெல் நிறுவனம், ஒன்று புதிய விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. ஹோலி கொண்டாட்டத்தின்போது, ஒரு சிறுமி, தன் இஸ்லாமிய நண்பன் மீது வண்ணங்கள் அடிக்காதவாறு சைக்கிளில் மசூதியில் நடக்கும் தொழுகைக்குக் கொண்டுபோய்விடுவதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது.
மத நல்லிணக்கத்தைப் பேசும்விதத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த விளம்பரம் சமூக ஊடகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், இந்த விளம்பரம் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகக் கருதிய சில இந்து அமைப்புகள், அந்த சலவைத் தூளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அதற்கான ஹாஷ்டாக்கையும் உருவாக்கி டிரெண்டிங் செய்திருந்தனர்.
அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. ‘மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்’ மென்பொருளைச் சலவைத் தூளுடன் குழப்பிக்கொண்டு, ‘கூகுள் ப்ளே’வில், மைக்ரோசாஃப்ட் செயலிக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் சிலர். மைக்ரோசாஃப்ட் எக்ஸெலுக்கும் சலவைத் தூளுக்கும் வித்தியாசம் தெரியாத சிலருடைய இந்தச் செயல் சென்ற வாரம் சமூக ஊடகங்களில் பெரும் நகைப்புக்குள்ளானது.